வடக்கு மாகாண போக்குவரத்து அமைச்சர் பா.டெனிஸ்வரன் அவர்களது தலைமையில் அமைச்சின் ஆலோசனைக்குழுக் கூட்டம் 08-06-2016 புதன் கிழமை யாழ்ப்பணத்தில் உள்ள அமைச்சரது அலுவலகத்தில் இடம்பெற்றது.
இக்கூட்டத்தொடரிலே வடக்கு மாகாண சபையின் அவைத் தலைவர் சி.வி.கே.சிவஞானம், வடக்கு மாகாண சபையின் உறுப்பினர்களான கணபதிப்பிள்ளை தர்மலிங்கம், கனகரத்தினம் விந்தன், சந்திரலிங்கம் சுகிர்தன், வேலுப்பிள்ளை சிவயோகன், கந்தையா சர்வேஸ்வரன், அறியக்குட்டி பரம்சோதி, துரைராசா ரவிகரன், கந்தையா சிவநேசன் ஆகியோரும் அமைச்சின் செயலாளர் எஸ்.சத்தியசீலன், கிராம அபிவிருத்தி திணைக்கள மாகாணப் பணிப்பாளர் ஜே.ஜே.சி.பெலிசியன், வீதி அபிவிருத்தி திணைக்கள பொறியியலாளர், அமைச்சின் உத்தியோகத்தர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.
இக்கூட்டத்தின் நிறைவில் கருத்துத் தெரிவித்த அமைச்சர், இன்றைய இந்த கூட்டமானது மிகவும் ஆரோக்கியமானதொரு கூட்டமாக அமைந்தது எனவும், மிகவும் நன்மை பயக்கக்கூடிய பல விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடியுள்ளதாகவும், கடல் மீன்பிடி தொடர்பாக மாகாண மீன்பிடி அமைச்சிற்கு அதிகாரங்கள் இல்லாதபோதும் மாகாண மீனவர்களின் நன்மை கருதி எதிர்காலத்தில் மாகாண மீன்பிடி அதிகார சபை ஒன்றை உருவாக்குவது தொடர்பாக தானும் உறுப்பினர்களும் முடிவெடுத்துள்ளதாகவும் அதனடிப்படையில் விரைவில் அதற்க்கான ஆரம்பகட்ட சட்டதிட்ட வரைபுகளை உருவாக்குமாறு அமைச்சின் செயலாளருக்கு பணிப்புரை வழங்கியுள்ளதாகவும் அதுமட்டுமல்லாது வடக்கு மாகாண போக்குவரத்து அதிகாரசபையின் உருவாக்கம் தொடர்பாகவும் சில கருத்துக்கள் பகிரப்பட்டதாகவும், இந்த நியதிச் சட்டத்தினை மாகாண ஆளுநர் அவர்கள் ஒப்புதல் வழங்கி அனுப்பவுள்ளதாகவும், அந்தவகையிலே எதிர்வரும் 14 ஆம் திகதி மாகாண சபை அமர்வில் இவ் நியதிச் சட்டம் நிறைவேற்றப்படுவதற்கான சந்தர்ப்பம் உள்ளதாகவும், அவ்வாறு நிறைவேற்றப்படும் சந்தர்ப்பத்தில் வடக்கில் விரைவாக போக்குவரத்து அதிகாரசபை உருவாக்கப்பட்டு அனைத்துப் போக்குவரத்து ஒழுங்குகளும் சீரமைக்கப்பட்டு, மக்களுக்கு ஒரு பாதுகாப்பானதும் பயனுள்ளதுமான சிறந்த தரமான போக்குவரத்து சேவையை தம்மால் வழங்க முடியும் எனவும் இச் சந்தர்ப்பத்தில் தெரிவித்தார், அத்தோடு புனர்வாழ்வு பெற்ற போராளிகளுக்கான கடந்த வருட மற்றும் இந்த வருட வாழ்வாதாரத் திட்டங்கள் தொடர்பாகவும் கலந்துரையாடியதாகவும், எதிர்காலத்தில் இத்திட்டத்திற்கு பல நிதி மூலகங்களின் ஊடாக கூடியளவு நிதியை ஒதுக்கித் தருமாறு முதலமைச்சரிடமும், பேரவைத் தலைவரிடமும் தாம் வேண்டிக்கொண்டதாகவும் அவர் தெரிவித்தார்.