ஐ. ம. சு. முன்னணியுடன் இணைந்து செயற்பட வேண்டும்: பிரதமர் கூட்டு எதிர்க்கட்சியிடம் கோரிக்கை

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்கு ஆதரவு வழங்கி, அதனுடன் இணைந்து செயற்பட வேண்டும் என ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரான பிரதமர் ரணில் விக்ரமசிங்க, கூட்டு எதிர்க்கட்சியிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

ranil_wikramasinghe-2_Fotor

நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றும் போதே பிரதமர் இதனை கூறியுள்ளார். 

கூட்டு எதிர்க்கட்சியினர் குழுக்களை உருவாக்கி, பிளவுகள் ஏற்படுத்துவதை நிறுத்திவிட்டு, ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்கு ஆதரவளிக்க வேண்டும் எனவும் பிரதமர் கூறியுள்ளார். 

முன்னதாக கூட்டு எதிர்க்கட்சி நாடாளுமன்றத்தில் இன்று அரசாங்கத்தின் பொருளாதார கொள்கைகளை விமர்சித்திருந்தது. 

இந்திய கார்களின் இறக்குமதி அதிகரிக்கப்பட்டுள்ளதால், நாட்டின் அந்நிய செலாவணி கையிருப்பில் ஒரு பாதக நிலைமையை ஏற்படுத்தும் என்பதுடன் நாட்டின் நாணய மதிப்பை அது பலவீனப்படுத்தும் எனவும் கூட்டு எதிர்க்கட்சி குறிப்பிட்டுள்ளது. 

2015ம் ஆண்டில் இந்தியாவின் மாருதி கார்களின் இறக்குமதியானது 63 வீதமாக அதிகரித்துள்ளதாக கூட்டு எதிர்க்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரான பந்துல குணவர்தன நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

நிதியமைச்சர் ரவி கருணாநாயக்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை மீதான விவாதத்தில் கலந்து கொண்டு பேசும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.