சோற்றுக் கற்றாழை அற்புதமான ஒரு மருந்து..!!

p61aஇன்னும் நம்மில் பலர் சாதாரணமாக நினைக்கும் சோற்றுக் கற்றாழை அற்புதமான ஒரு மருந்து. இதன் மகத்துவம் பலருக்கும் தெரிவதில்லை. கற்றாழையில் வைட்டமின் சி, தாது உப்புகள், அமினோ அமிலம் ஆகியவை உள்ளன. நுண்கிருமி நாசினியாகவும் இது செயல்படுகிறது.

கற்றாழையின் உட்பகுதி ஜெல் போன்று இருக்கும். அதனை இரண்டு அங்குல அளவு எடுத்து நீரில் ஏழு எட்டு முறை கழுவி கசப்பு நீங்கியவுடன் சாப்பிட வயிற்று வலி நீங்கும். வெறும் வயிற்றில் கற்றாழைச் சோற்றுடன், தேன் கலந்து காலையும் மாலையும் சாப்பிட்டுவர, பெண்களுக்கு ஏற்படும் வெள்ளைப் போக்கு, கருப்பை புண் போன்றவை சரியாகும். மாதவிலக்கும் சரியான சுழற்சியை எட்டும்.

மேலும், இதன் உட்பகுதியை எடுத்து தலைக்குத் தேய்த்து ஊறவைத்து குளிக்க தலைப் பொடுகு நீங்குவதுடன் குளிர்ச்சியைத் தரும். கால் எரிச்சல், பித்த வெடிப்புக்கு கற்றாழைச் சாறை தடவி தூங்கினால் சரியாகும். இதன் சாறுடன் மஞ்சள்தூள் சேர்த்து முகப் பூச்சாக பூசி, அரை மணி நேரம் கழித்து முகம் கழுவினால், முகம் பிரகாசமாக இருக்கும்.

கையில் திட்டுத்திட்டாக கருப்பாக இருந்தால் கற்றாழை சாற்றை விடாமல் தடவி வர குணமாகும். நெல்லிச்சாறு, கறிவேப்பிலை சாறுடன் இதன் சாற்றையும் தேங்காய் எண்ணையோடு சேர்த்துக் காய்ச்சி வைத்துக் கொண்டு தினமும் தலைக்குத் தடவி வர முடி நன்கு வளரும்.

அடிபட்ட வீக்கத்துக்கு கற்றாழையை விளக்கில் சூடுபடுத்தி ஒத்தடம் கொடுக்க வலி, வீக்கம் குறையும். தீப்புண் மீது பூச புண் ஆறும். இப்படி சிறப்பு மிக்க கற்றாழையை வீட்டிலேயே சுலபமாக வளர்க்கலாம். கற்றாழையில் பல வகைகள் இருந்தாலும், சோற்றுக் கற்றாழை தான் அதிக மருத்துவ குணம் கொண்டது. வீட்டில் பூந்தொட்டியில் வைத்து கூட வளர்க்கலாம். இதற்கு அதிக கவனிப்பும் தேவையில்லை.