முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்சவின் 14 வாகனங்களுக்கு 100 மில்லியன் ரூபாவிற்கு எரிபொருள் நிரப்பப்பட்டுள்ளதாக ஜனாதிபதி விசாரணைக்குழுவின் விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது.
பசில் ராஜபக்ச அமைச்சர் பதவி வகித்த போது, பயன்படுத்திய 14 அரச வாகனங்களுக்கும் கொழும்பில் அமைந்துள்ள ஒர் எரிபொருள் நிரப்பு நிலையத்தில் மட்டும் 100 மில்லியன் ரூபாவிற்கு எரிபொருள் நிரப்பப்பட்டுள்ளது.
ஏனைய பிரதேசங்களில் அமைந்துள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களில் எவ்வளவு எரிபொருள் பெற்றுக்கொள்ளப்பட்டது என்பது குறித்து விசாரணை நடத்தப்படவுள்ளது.
கிராமிய பொருளாதார அபிவிருத்தி அமைச்சினால் இந்த எரிபொருளுக்கான கட்டணங்கள் செலுத்தப்பட்டுள்ளன.
பசில் ராஜபக்ச பயன்படுத்திய வாகனங்களில் எட்டு வாகனங்கள் குண்டு துளைக்காத வாகனங்கள் எனவும் இதற்காக அதிகளவு எரிபொருள் தேவைப்படும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
அமைச்சர் என்ற ரீதியில் 3 வாகனங்களும், ஜனாதிபதி ஆலோசகர் என்ற ரீதியில் ஒரு வாகனமும் பசில் ராஜபக்சவிற்கு வழங்கப்பட வேண்டும் என்ற போதிலும் பதவியில் இருந்த காலத்தில் மொத்தமாக 14 அரச வாகனங்களை பசில் ராஜபக்ச பயனப்டுத்தியுள்ளார் என விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது.
இந்த சம்பவம் தொடர்பில் ஜனாதிபதி ஆணைக்குழு தொடர்ச்சியாக விசாரணைகளை நடத்தி வருகின்றது.