ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இன்று ஆளும் கட்சியின் விசேட நாடாளுமன்றக் குழுக் கூட்டமொன்று நடைபெறவுள்ளது.
ஆளும் கட்சியை பிரதிநிதித்துவம் செய்யும் அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் இந்தக் கூட்டத்தில் பங்கேற்கவுள்ளனர்.
ஜனாதிபதி காரியாலயத்தில் இன்று மாலை 6.00 மணிக்கு இந்தக் கூட்டம் நடைபெறவுள்ளது.
ஆளும் கட்சியின் நாடாளுமன்றக் குழுக் கூட்டத்தில் அனைவரும் பிரசன்னமாக வேண்டுமென அறிவிக்கப்பட்டுள்ளது என சிரேஸ்ட அமைச்சர் ஒருவர் கொழும்பு ஊடகமொன்றுக்குத் தெரிவித்துள்ளார்.
நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்கவிற்கு எதிராக எதிர்வரும் 8ம் திகதி நாடாளுமன்றில் நம்பிக்கையில்லா தீர்மானம் குறித்து விவாதம் நடத்தி, வாக்கெடுப்பு நடத்தப்படவுள்ளது.
இதேவேளை, அமைச்சர் ஒருவருக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தின் போது அதற்கு ஆதரவாக ஆளும் கட்சியின் அமைச்சர்களினால் வாக்களிக்க முடியாது எனவும் அது மரபல்ல எனவும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அமைச்சர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
சுதந்திரக் கட்சியின் உறுப்பினர்கள் நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களிக்க வேண்டுமென கூட்டு எதிர்க்கட்சி கோரி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.