முள்ளிவாய்க்கால் பகுதியில் உயிரிழந்த மக்களை நினைவுகூரும் வகையிலான நினைவு தூபியொன்றை அமைப்பதற்கு அரசாங்கம் அனுமதி அளிக்கும் என பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவன் விஜேவர்தன தெரிவித்தார்.
கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் ஊடகவியலாளர்களினால் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கும் வகையிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
இறுதிக் கட்ட யுத்தம் இடம்பெற்ற முள்ளிவாய்க்கால் பகுதியில் மக்களை நினைவுகூரும் வகையில் நினைவுதூபியொன்று நிச்சயம் அமைக்கப்படும் என இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் அண்மையில் தெரிவித்திருந்த கருத்து தொடர்பில் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இதனைக் கூறினார்.
இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் அதற்கான அனுமதியை இதுவரை அரசாங்கத்திடம் கோரவில்லை எனவும், அவர் அனுமதி கோரும் பட்சத்தில் அதற்கான அனுமதி வழங்கப்படும் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.
எனினும் தடை செய்யப்பட்ட தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பை நினைவுகூரும் வகையில் எந்தவொரு தூபியையும் அமைக்க இடமளிக்கப்பட மாட்டாது என அவர் உறுதியளித்தார்.
இதேவேளை யுத்த வெற்றி கொண்டாட்டங்கள் நடாத்தப்படுகின்றமையினால் நல்லிணக்கத்திற்கு பாதிப்பு ஏற்படுமா என இதன்போது ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பியிருந்தனர்.
அதற்கு பதிலளித்த பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் இந்த செயற்பாடு முன்னெடுக்கப்படுகின்றமையினால் இனவாதத்தை தூண்டும் சிலர் மாத்திரம் பிரச்சினைகளை ஏற்படுத்துவதாகவும், காலங்கள் செல்ல செல்ல இது ஒரு சரியான நிலைக்கு வந்து விடும் எனவும் அவர் குறிப்பிட்டார்.
மேலும் தமிழீழ விடுதலைப் புலிகளை நினைவுகூரும் வகையிலான நிகழ்வுகள் நடாத்தப்படும் பட்சத்தில் அதற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவன் விஜேவர்தன கூறினார்.
எனினும், யுத்தத்தில் உயிரிழந்த மக்களை நினைவுகூருவதற்கான சந்தர்ப்பம் முழுமையாக வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் உறுதியளித்தார்.
தமிழீழ விடுதலைப் புலிகளின் கொடிகள் ஏற்றப்படுகின்றமை முழுமையாக தடை செய்யப்பட்டுள்ளதாகவும், அவ்வாறு புலிகளின் கொடிகள் ஏற்றப்படும் பட்சத்தில் பொலிஸார் கடும் சட்ட நடவடிக்கைகள் எடுப்பார்கள் எனவும் அவர் கூறினார்.