தலைமன்னாரில் அமைந்துள்ள காணி ஒன்றை போலியான உறுதிப்பத்திரத்தைப் பயன்படுத்தி, தான் விற்பனை செய்ததாக இணையத்தளங்களில் வெளியான செய்தியை வடமாகாண சபை உறுப்பினர் றிப்கான் பதியுதீன் முற்றாக மறுத்துள்ளார்.
தன்மீது அரசியல் காழ்ப்புணர்வு கொண்டோர்களால், இந்த விடயம் வேண்டுமென்றே திட்டமிட்டு பரப்பப்பட்டுள்ளதாகவும், இது ஒரு அபாண்டமான குற்றச்சாட்டு எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அவர் இது தொடர்பில் கூறியதாவது,
எவரோ ஒருவர் வேண்டுமென்று என்மீது கொடுத்த முறைப்பாட்டை ஆழ அகல விசாரிக்காமல், என்னைக் குற்றவாளியாக இனங்காட்ட சில பத்திரிகைகளும், இணையத்தளங்களும் முற்பட்டுள்ளன. ஜனநாயக நாட்டில், எவருக்கெதிராகவும் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்ய எந்தப் பிரஜைக்கும் முடியும். அந்தவகையில் சிலரின் தூண்டுதலினால், தனிப்பட்ட ஒருவர் தெரிவித்துள்ள முறைப்பாட்டை விசாரிக்காமல், என்னை குற்றவாளியாக்க முனைந்துள்ளனர்.
மேற்குறிப்பிட்ட விடயம் தொடர்பில், இதுவரை எந்தவொரு விசாரணைக்கும் நான் அழைக்கப்படவுமில்லை, முகம்கொடுக்கவுமில்லை. எனவே இவ்வாறான போலிப் பரப்புரைகளால், என்னைப் பழிவாங்க நினைக்கத் துடிக்கும் சிலருக்கு விரைவில் உண்மைகள் தெரியும். எனவே இவ்வாறான அபாண்டமான பழிகளை சுமத்த வேண்டாமென நான் கோரிக்கை விடுக்கின்றேன். இவ்வாறு றிப்கான் பதியுதீன் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.