இல்லையேல் எதிர்வரும் தேர்தலில் முஸ்லிம் காங்கிரஸ் பாரிய சரிவினையும் பிளவினையும் எதிர்நோக்க வேண்டியேற்படும் என ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தவிசாளர் பஷீர் சேகுதாவூத் தெரிவித்தார்.
முஸ்லிம் காங்கிரஸின் உள்ளக முரண்பாடுகள் தொடர்பான தீர்வுகள் பற்றி அவரிடம் வினவிய போதே அவர் இவ்வாறு கூறினார்.
தொடர்ந்தும் அவர் கருத்து தெரிவிக்கையில், கட்சியின் உள்ளக முரண்பாடுகள் தீர்க்கப்பட்டு செயலாளர் ஹசன் அலியிடமிருந்து பறிக்கப்பட்ட அதிகாரங்கள் மீள வழங்கப்படாவிட்டால் எதிர்வரும் உள்ளூராட்சி மன்ற தேர்தலில் கட்சி பல சவால்களை எதிர்நோக்க வேண்டியேற்படும்
. தேர்தலில் போட்டியிடுவதற்கு வேட்பாளர்களைத் தெரிவு செய்வதில் சிக்கல் நிலை தோன்றுவதுடன் கட்சியின் வாக்கு வங்கியிலும் சரிவு ஏற்படும்.
கட்சியில் எனக்கு எதுவித பிரச்சினையும் இல்லை. நான் கட்சியை நேசிப்பவன். கட்சியின் செயலாளருக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கும் கட்சியின் கொள்கைகளுக்கு மாறான தீர்மானங்களுக்குமாகவே நான் குரல் கொடுக்கிறேன்.
நான் நீதிக்காகவே போராடுகிறேன். இவ்வாறான நடவடிக்கைகளால் கட்சி பிளவுபடக் கூடாது என்பதற்காகவே எழுந்து நிற்கிறேன்.
கட்சி எதிர்கால சவால்களை எதிர்கொள்வதற்காக கட்சியை தூய்மைப்படுத்த வேண்டியுள்ளது. கட்சியின் உள்ளக முரண்பாடுகளை தீர்த்து வைப்பதற்காக நியமிக்கப்பட்டுள்ள மூவர் அடங்கிய குழு ஹசன் அலியுடன் பல கட்ட பேச்சுவார்த்தைகளை நடாத்தியுள்ளது.
கட்சியின் அரசியல் உயர்பீட உறுப்பினர் பதவியிலிருந்து இடைநிறுத்தி வைக்கப்பட்டுள்ள மௌலவிகள் இருவரும் முதலில் உள்வாங்கப்பட வேண்டும் என அவர் தெரிவித்திருக்கிறார்.
செயலாளர் ஹசன் அலிக்காகவே அவரது உரிமைகளுக்காகவே நான் தொடர்ந்து போராடி வருகிறேன்.
இதுவன்றி எனக்கும் கட்சிக்கும் இடையில் பிரச்சினைகள் இல்லை. ஹசன் அலியின் விவகாரம் விரைவில் தீர்க்கப்பட வேண்டும். இதில் இழுத்தடிப்பு இடம்பெறக்கூடாது.
அப்படி இழுத்தடிப்புகள் இடம் பெற்றால் அது கட்சியின் எதிர்காலத்தை நிச்சயம் பாதிக்கும் என்றார்.