தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கத்தின் படுகொலை தொடர்பான சந்தேக நபர்களின் விளக்கமறியல் தொடர்ந்து நீடிக்கப்பட்டுள்ளது.
தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவரும் கிழக்கு மாகாணசபை உறுப்பினருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் உட்பட நான்கு பேர் மீதான வழக்கு இன்று புதன்கிழமை மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்றில் எடுத்துக்கொள்ளப்பட்டது.
இதன்போது எதிர்வரும் 25ம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் நீதிமன்ற மேலதிக நீதிபதி எம்.பி.முகைதீன் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
தமிழ்த் தேசிய கூட்டமைப்பு முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம் படுகொலை தொடர்பாக சிவநேசதுரை சந்திரகாந்தன் கடந்த வருடம் அக்டோபர் மாதம் 11ம் திகதி குற்றப்புலனாய்வுத் துறையினரால் கைது செய்யப்பட்டிருந்தார்.
தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் முன்னாள் தேசிய அமைப்பாளரும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினருமான பிரதீப் மாஸ்டர் எனப்படும் எட்வின் சில்வா கிருஸ்ணானந்தராஜா மற்றும் கஜன் மாமா எனப்படும் ரெங்கசாமி கனகநாயகம் மற்றும் இராணுவ புலனாய்வை சேர்ந்த எம். கலீல் ஆகியோரே இக் கொலை தொடர்புடைய ஏனைய சந்தேக நபர்களாவர்.
அதேநேரம் சிவநேசதுரை சந்திரகாந்தன் தன்னை பிணையில் செல்ல அனுமதி கோரி மட்டக்களப்பு மேல் நீதிமன்றத்தில் பிண மனுவொன்றை தாக்கல் செய்துள்ளார்.
இம் மனு மீதான விசாரணை எதிர்வரும் 19ம் திகதி மட்டக்களப்பு மேல் நீதிமன்றில் இடம்பெறவுள்ளது.
2005ம் ஆண்டு டிசம்பர் மாதம் 25ம் தேதி மட்டக்களப்பு புனித மரியாள் தேவாலயத்தில் நத்தார் நள்ளிரவு ஆராதனையில் கலந்து கொண்டிருந்த போது தேவாலயத்திற்குள்ளேயே முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரான ஜோசப் பரராஜசிங்கம் அடையாளந்தெரியாத துப்பாக்கி தாரிகளினால் சுட்டுக் கொல்லப்பட்டார்.