தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின் கடந்த 2 நாட்களாக தஞ்சை மாவட்டத்தில் சுற்றுப்பயணம் செய்து தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டினார்.
இன்று அவர் திருவாரூர் மாவட்டத்தில் பிரசாரம் மேற்கொண்டார். திருவாரூர் தொகுதியில் போட்டியிடும் தி.மு.க. தலைவர் கருணாநிதியை ஆதரித்து கொரடாச்சேரியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசினார். அவர் பேசியதாவது:–
தி.மு.க. ஆட்சியில் இருந்தாலும், இல்லா விட்டாலும் மக்களை மறக்காமல் இருப்பவர் கருணாநிதி. சமூக வலைதளங்களின் வாயிலாக இன்றும் மக்களுடன் தொடர்பு கொண்டுள்ளவர் கருணாநிதி.
தி.மு.க. ஆட்சி பொறுப்பில் இருந்தபோது தாழ்த்தப்பட்டோருக்கு 18 சதவீத இட ஒதுக்கீடும், பழங்குடியினருக்கு 1 சதவீத இட ஒதுக்கீடும் தந்தவர் கருணாநிதி. மக்களுடன் எப்போதும் இணைந்து இருக்கும் கட்சி தான் தி.மு.க.
இன்றும் சாலை வழியாகத்தான் சென்று மக்களிடம் வாக்கு சேகரிக்கிறார். எத்தனையோ தலைவர்கள் வந்து சென்ற தனது இல்லத்தை 1987–ல் மருத்துவமனைக்காக இலவசமாக வழங்கி பெருமைபடுத்தியவர் கருணாநிதி.
முதன்முதலில் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்ற அவர் சட்டசபையில் விவசாயிகளின் பிரச்சினையை தான் முதல் முதலில் பேசினார். தமிழக மக்களின் நலனுக்காக இட ஒதுக்கீடு முறையை நடைமுறை படுத்தியவரும் அவரே.
தேர்தல் நேரத்தில் தான் மக்களை சந்திப்பவர் ஜெயலலிதா. கடந்த 5 ஆண்டுகளில் அவர் மக்களை சந்தித்தது உண்டா? விவசாயிகளின் நலனுக்காக 7 ஆயிரம் கோடி கடனை தள்ளுபடி செய்தவர் கருணாநிதி.
திருவாரூரை தனி மாவட்டமாக அறிவித்து கலெக்டர் அலுவலகம், போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம், அரசு மருத்துவ கல்லூரி, மத்திய பல்கலைக் கழகம் ஆகியவற்றை கொண்டு வந்தவர் கருணாநிதி.
தமிழகத்தில் கணினி மாவட்டம் என்ற பெருமையை பெற்றது கருணாநிதி ஆட்சியில்தான். திருவாரூர் கமலாலய குளம் தூர் வாரப்பட்டு சுத்தமான தண்ணீர் நிரப்பப்பட்டது கருணாநிதி ஆட்சியில்தான். பல்வேறு மாவட்டங்களில தி.மு.க. கொண்டு வந்த திட்டங்கள் முடக்கப்பட்டுள்ளது.
இது தான் ஜெயலலிதாவின் சாதனை.
அ.தி.மு.க. ஆட்சிக்கு வரும் போதெல்லாம் திருவாரூர் மாவட்டம் புறக்கணிக்கப்படுகிறது. திருவாரூர் நகராட்சி நூற்றாண்டு விழா கொண்டாடப்படவில்லை. கருணாநிதி பிறந்த ஊர் என்பதால் தான் இதனை செய்ய வில்லை.
தி.மு.க. ஆட்சியில இருந்த போது மின் கட்டணத்தை குறைக்க கூறிய விவசாயிகளுக்கு இலவசமாகவே மின்சாரம் தந்தவர் கருணாநிதி. பிறந்த மண்ணில் பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் கருணாநிதியை வெற்றி பெற செய்ய வேண்டும்.
தி.மு.க. தலைவர் கருணாநிதி நேற்று எனக்கு வாக்கு சேகரித்தார். இன்று நான் அவரது தொகுதியில் வாக்கு சேகரிக்கிறேன். இது போன்ற வரலாறு இல்லை.
எனது தந்தை ஸ்டாலினை பெற்றது தவப்பயன் என்று கூறி உள்ளார். ஆனால் 93 வயதிலும் அவர் பாடுபடுவது தமிழ்நாட்டிற்கே தவப்பயன்.
கருணாநிதி உங்கள் வீட்டு பிள்ளை என்றால் நான் உங்கள் வீட்டு பேரன்.
கருணாநிதி 13–வது முறையாக போட்டியிடுகிறார். அவர் இதுவரை தோல்வி அடைந்ததில்லை. இந்த தேர்தலில் அவரை இந்தியாவிலே அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற செய்ய வேண்டும்.
வருகிற 19–ந் தேதி ஆட்சி மாற்றம் ஏற்படும். 6–வது முறையாக கருணாநிதி முதல்–அமைச்சராக பதவி ஏற்பார். அப்போது திருவாரூர் மட்டுமின்றி தமிழகம் முழுவதும் வளர்ச்சி பெறும் திட்டங்களை கருணாநிதி செயல்படுத்துவார்.
பின்னர் மன்னார்குடி சென்றார். மாலை 4.30 மணிக்கு மீண்டும் பிரசாரத்தை தொடங்கும் அவர் வேதாரண்யம், வேளாங்கண்ணி, நாகை, மயிலாடுதுறை, சீர்காழி பகுதியில் தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டுகிறார்.