பட உதவி – பி.எம்.எம்.காதர்
ஊடகவியலாளர்கள் என்பவர்கள் மிகவும் சக்தி வாய்ந்தவர்கள் இவர்களது பலத்தின் காரணமாக பல்வேறுபட்ட விடயங்களை சாதிக்கின்றார்கள். அதாவது ஒரு நாட்டின் ஆட்சி மாற்றங்களை தீர்மானிப்பவர்களாக ஊடகவியலாளர்களே திகழ்கின்றார்கள் என கல்முனை வடக்கு ஆதார வைத்திய சாலையின் வைத்திய அத்தியட்சகர், வைத்திய கலாநிதி ஆர்.முரளீஸ்வரன் தெரிவித்தார்.
சர்வதேச ஊடக சுதந்திர தினத்தினை முன்னிட்டு அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர் சம்மேளனம் நேற்று கல்முனை வடக்கு ஆதார வைத்தியசலையில் இரத்ததான நிகழ்வை நடத்தியது.
இந்நிகழ்வானது அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர் சம்மேளன தலைவர் கலாபூசனம் மீரா இஸ்ஸதீன், கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் ஆர்.முரளீஸ்வரன் தலைமையில், வைத்தியசாலை கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
இங்கு தொடர்ந்து உரையாற்றுகையில்,
எந்த விடயமாக இருந்தாலும் அதனை மக்கள் மத்தியில் கொண்டு சென்று அதன் உண்மைத்தன்மையை எடுத்துக்காட்டுபவர்களாக ஊடகவியலாளர்களே இருக்கின்றார்கள். அவர்களது பேனாவிற்கு இருக்கும் சக்தி எவ்வாரென்பது அனைவருக்கும் தெரிந்த விடயம்.
ஊடகவியலாளர்கள் கூறுகின்ற குறைபாடுகளில் இருந்துதான் நிறைகளை எங்களால் செய்ய முடிகின்றது. எங்களது குறைகளை நாங்கள் கண்டறிவதை விட ஊடகவியலாளர்கள் கண்டறிவதற்கான சந்தர்ப்பங்கள் அதிகம் இருக்கின்றது. காரணம் அவர்கள் தான் பல்வேறுபட்ட இடங்களுக்குச் சென்று அதனுடன் ஒப்பிட்டு இங்குள்ள குறைகளை கண்டறிவார்கள். அவ்வாறான விடயங்களை கூறுவதன்மூலம் நாங்கள் அதனை திருத்திக்கொண்டு
மக்களுக்கான சிறந்த சேவையினை தொடர முடியும்.
நோயாளிகள் குருதிக்கொடையாளிகளிடமிருந்து குருதியினை பெற்றுக்கொள்கின்றார்கள் அதற்காக வேண்டி அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர் சம்மேளனம் இவ்வாரான ஒரு நிகழ்வினை ஏற்பாடு செய்திருந்தமை மிகவும் பாராட்டத்தக்க விடயமாகும். எந்த ஒரு அன்பளிப்பையும் விட இந்த குருதி கொடை என்பது இலகுவில் எவராலும் செய்யமுடியாததொன்று.
இந்த குருதிக்கொடையில் இன்னுமொருவரின் உயிர் காப்பாற்றப்படுகின்றது. குருதி தேவை என்று நாங்கள் அலைந்து திரியும்போது தான் குருதியின் பெறுமதி எங்களுக்கு தெரியும். கணவன் கூட தனது மனைவிக்கு குருதி கொடுப்பதில் தயக்கம் காட்டுகின்றார். வைத்தியசாலைகளில் சீசரியன் மூலம் குழந்தைகளை பெற்றெடுக்கின்ற போது நாங்கள் குருதி தேவை என்று கேட்கின்றபோது மனைவி கூறுவார். எனது கணவனுக்கு சுகமில்லை
தான் ஒரு அனாதை என்று கூட கூறுவார்கள் இவ்வாறுதான் தன்னுடைய மனைவிக்கு கணவன் குருதி வழங்க மறுக்கும் இந்த காலகட்டத்தில், சுயமாகவே முன்வந்து குருதி வழங்க முன்வருவதென்பது மிகவும் போற்றுதற்குரியதாகும்.
இன்று ஊடக பலத்துடன் ஆரம்பித்திருக்கும் குருதிக்கொடையானது எதிர்காலத்தில் சாதாரண மக்களும் முன்வந்து குருதி வழங்குவார்கள் என்பதில் ஐயமில்லை எனவும் கூறினார்.