தமிழகத்தில் 234 தொகுதிகளிலும் அ.தி.மு.க. தோற்கப்போவது உறுதி – ஸ்டாலின் பேச்சு

தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின் தஞ்சை மாவட்டத்தில் போட்டியிடும் தி.மு.க., காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்வதற்காக நேற்று இரவு தஞ்சைக்கு வந்தார். தஞ்சை கீழவாசல் காமராஜர் சிலை அருகே திறந்த வேனில் நின்ற படி தி.மு.க. வேட்பாளர் அஞ்சுகம்பூபதியை ஆதரித்து மு.க.ஸ்டாலின் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:–

 

stalin

கருணாநிதி சொல்லும் கட்டளையை ஏற்று சிறப்பாக செயல்பட்ட பூபதி அன்பு மகள் அஞ்சுகம். அவரை பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற செய்ய வேண்டும். அந்த உறுதியை உங்களிடம் இருந்து பெறுவதற்காக வந்து இருக்கிறேன். 1962–ம் ஆண்டு தஞ்சை தொகுதியில் இருந்து தலைவர் கருணா நிதியை தேர்வு செய்து சட்டசபைக்கு அனுப்பி வைத்தீர்கள். அப்படிப்பட்ட சிறப்புக்குரிய தொகுதியில் இருந்து அவரது மகனான நான் வாக்கு கேட்கிறேன்.

தேர்தல் நேரத்தில் மட்டும் உங்களை சந்திப்பவர்கள் அல்ல நாங்கள். என்றும் உங்களுடன் இருக்கக்கூடியவர்கள். எந்த பிரச்சினையாக இருந்தாலும் அவற்றை தீர்க்க போராடி இருக்கிறோம். கடந்த 5 ஆண்டுகளில் ஜெயலலிதா மக்கள் குறைகேட்க தஞ்சைக்கு வந்தது உண்டா? தஞ்சை மாவட்டத்திற்கு வந்தது உண்டா?. தமிழ்நாட்டில் எதாவது ஒரு மாவட்டத்துக்கு சென்று உள்ளாரா? அவர் நீலகிரி மாவட்டத்துக்கு மட்டும் ஓய்வு எடுக்க அடிக்கடி சென்றார். மக்களை பற்றி ஜெயலலிதா கவலைப்படவில்லை. மக்களை பற்றி சிந்திக்கவே இல்லை. தமிழகத்தில் ஆட்சி நடக்கவில்லை. இது காட்சி. காணொலி காட்சி

இந்த ஆட்சியில் தமிழக மக்களுக்கு எந்த பலனும் கிடைக்கவில்லை. இப்போது சென்னை ஆர்.கே.நகர் தொகுதியில் வீதி, வீதியாக ஜெயலலிதா சென்று கொண்டு இருக்கிறார். ஆர்.கே.நகர் உள்பட தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளிலும் அ.தி.மு.க. தோற்கப்போவது உறுதி. விவசாயிகளின் கூப்பிட்ட குரலுக்கு ஓடோடி வரும் கட்சி தி.மு.க. தான். 2006–ம் ஆண்டு தேர்தலில் கொடுத்த வாக்குறுதிகள் அனைத்தையும் தலைவர் கருணாநிதி நிறைவேற்றினார்.

காவிரி நடுவர் மன்றம் அமைத்தது, இடைக்கால தீர்ப்பு பெற்று தந்தது, காவிரி நடுவர் மன்ற இறுதித்தீர்ப்பை பெற்று தந்தது தலைவர் கருணாநிதி தான். இறுதித்தீர்ப்பை மத்தியஅரசிதழில் வெளியிட தி.மு.க. பாராளுமன்ற உறுப்பினர்களை எல்லாம் டெல்லிக்கு அனுப்பி பிரதமரிடம் சுட்டி காட்டினார். 19.2.2013 அன்று காவிரி நடுவர் மன்ற இறுதித்தீர்ப்பு மத்தியஅரசிதழில் வெளியிடப்பட்டது. 38 மாதங்கள் ஆகியும் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க ஜெயலலிதா எந்தவித ஆக்கப்பூர்வமான நடவடிக்கையும் எடுக்கவில்லை. 

பாராளுமன்றத்தில் 37 உறுப்பினர்களும், மேலவையில் 12 உறுப்பினர்களும் என 49 எம்.பி.க்கள் இருந்தும் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க முட்டுக்கட்டை போடுவதின் மர்மம் என்ன?. ஜெயலலிதா மீது சொத்து குவிப்பு மேல்முறையீடு வழக்கு கத்தி தலைக்கு மேல் தொங்கி கொண்டு இருக்கிறது. அந்த வழக்கில் இருந்து தங்களை காப்பாற்றி கொள்ளவே எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

கடந்த 5 ஆண்டுகளில் தமிழகம் 50 ஆண்டுகளுக்கு பின்நோக்கி சென்று விட் டது. தமிழகத்தை முன்னேற்ற வேண்டும் என்பதற்காக தான் தி.மு.க. தேர்தல் அறிக்கையில் 501 வாக்குறுதிகளை தலைவர் கருணாநிதி கொடுத்துள்ளார். 2006–ம் ஆண்டு தேர்தலில் தி.மு.க. அறிக்கை ஹீரோவாக இருந்தது. 2016–ல் சூப்பர் ஹீரோவாக இருக்கிறது. 

2011–ம் ஆண்டு தேர்தலில் ஜெயலலிதா 54 வாக்குறுதிகளை அளித்தார். இவற்றில் எதையும் நிறைவேற்றவில்லை. சட்டசபையில் 110 விதியின் கீழ் அறிவித்த எந்த உறுதிமொழியையும் நிறைவேற்றவில்லை. இப்போது தி.மு.க. தேர்தல் அறிக்கையில் அ.தி.மு.க. ஸ்டிக்கரை ஒட்டி வெளியிட்டுள்ளனர். இந்த ஆட்சியை அப்புறப்படுத்த சரியான வாய்ப்பு கிடைத்து இருக்கிறது. அந்த வாய்ப்பை பயன்படுத்தி உதயசூரியன் சின்னத்திற்கு வாக்களித்து எனது மகள் அஞ்சுகம் பூபதியை வெற்றி பெற செய்யுங்கள்.

இவ்வாறு அவர் பேசினார்.

பின்னர் திருவையாறு தேரடியில் தி.மு.க. வேட்பாளர் துரை.சந்திரசேகரனை ஆதரித்து மு.க.ஸ்டாலின் பேசினார்.