சாதிக் கான் 56.8 சத வாக்குகள் பெற்று லண்டன் மாநகர மேயரானார்

160506183611_sadiq_khan_624x351_getty_nocredit

பிரிட்டன் தலைநகர் லண்டன் மாநகரின் மேயராக பாகிஸ்தான் வம்சாவளியைச் சேர்ந்த சாதிக் கான் தேர்வாகியிருக்கிறார்.

லண்டன் மேயருக்கான தேர்தல் மே மாதம் ஐந்தாம் தேதி வியாழக்கிழமை நடைபெற்றது. அதில் தொழிற்கட்சி சார்பில் போட்டியிட்ட சாதிக் கான் 56.8 சத வாக்குகள் பெற்றார். அவரை எதிர்த்து கன்சர்வேட்டிவ் கட்சி சார்பில் போட்டியிட்ட ஜாக் கோல்ட்ஸ்மித் 43.2 சதவீத வாக்குகள் பெற்றார்.

ஐரோப்பிய ஒன்றிய நாடொன்றின் தலைநகராக ஒரு முஸ்லிம் மேயராக தேர்வாவது இதுவே முதல் முறை. அவரைவிட பெரும் பணக்காரரான ஜாக் கோல்ட்ஸ்மித்தை தோற்கடித்து சாதிக் கான் மேயராகியிருப்பதன் மூலம் எட்டு ஆண்டுகளுக்குப்பின்னர் தொழிற்கட்சி லண்டன் மேயர் பதவியை கைப்பற்றியிருக்கிறது.

தமது இந்த வெற்றி தம்மை நெகிழ வைத்ததாக சாதிக் கான் தெரிவித்தார். இஸ்லாமிய தீவிரவாதிகளோடு தொடர்புடையவர் என்று கன்சர்வேடிவ் கட்சி சார்பில் முன்னெடுக்கப்பட்ட பிரச்சாரத்தை மறைமுகமாக குறிப்பிட்ட கான், “அச்சுறுத்தும் அரசியலை” வாக்காளர்கள் புறக்கணித்திருப்பதை இந்த தேர்தல் முடிவுகள் காட்டுவதாகவும் அவர் கூறினார்.

சார்திக் கானிடம் தோல்வியுற்ற ஜாக் கோல்ட்ஸ்மித்
சார்திக் கானிடம் தோல்வியுற்ற ஜாக் கோல்ட்ஸ்மித்

லண்டன் மாநகரம் தனக்கு அளித்த அனைத்து வாய்ப்புகளையும் லண்டன் குடிமக்கள் அனைவருக்கும் கிடைக்கச் செய்வதே தமது குறிக்கோள் என்றும் அவர் கூறினார்.

கடந்த எட்டு ஆண்டுகளாக கன்சர்வேடிவ் கட்சி லண்டன் மேயர் பதவியை தக்க வைத்துக்கொண்டிருந்த நிலையில், தற்போது தொழிற்கட்சி அந்த பதவியை மீண்டும் கைப்பற்றியுள்ளது.

பாகிஸ்தானிலிருந்து இங்கிலாந்துக்கு குடியேறிய பேருந்து ஓட்டுநரின் மகனாக எளிய குடும்பத்தில், 1970ஆம் ஆண்டு பிறந்தவர் சாதிக் கான்.

கார்டன் பிரவுன் பிரிட்டிஷ் பிரதமராக இருந்தபோது அவரது அமைச்சரவையில் சாதிக் கான் அமைச்சர் பதவி வகித்தார்.

ஐரோப்பிய நாடுகளின் தலைநகர் ஒன்றில் முஸ்லிம் ஒருவர் மேயராக தேர்வு செய்யப்படுவதும் இதுவே முதல் முறையாகும்.

இடதுசாரியான சாதிக் கானின் வெற்றியை வெளிநாட்டிலிருக்கும் சக இடதுசாரி அரசியல் பின்புலத்தில் இருந்து மாநகர மேயர்களாகத் தேர்வானவர்கள் வரவேற்றுள்ளனர்.

ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த நியூயார்க் நகர மேயர் பில் டி பிளாசியோ விலை குறைந்த வீடுகளை கட்டப்போவதாக உறுதியளித்திருக்கும் சாதிக் கானுடன் இணைந்து பணியாற்ற ஆவலுடன் இருப்பதாக தெரிவித்திருக்கிறார்.

சோஷலிச அரசியலை முன்னெடுக்கும் பாரிஸ் மேயர் ஆன் ஹிடல்கொ சாதிக் கானின் மனிதாபிமானமும் முற்போக்கு நிலைப்பாடும் லண்டன் மக்களுக்கு நன்மை செய்யும் என்று நம்புவதாக தெரிவித்திருக்கிறார்.