அனைத்து உச்சபீட உறுப்பினர்களுக்கும் , நான் ஏன் இவ்வாறு முடிவெடுத்தேன்?

பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம். அனைத்து  உச்சபீட உறுப்பினர்களுக்கும்

அஸ்ஸலாமு அலைக்கும்!

நமது கட்சியின் கடந்த 15 வருட கால வரலாற்றை, இவ்வரலாற்றின் வழி நெடுகிலும் தலைவர் ரவூப் ஹக்கீம் உட்பட இவ்வுச்ச பீட உறுப்பினர்களில் அனேகருடன் கைகோர்த்து நடந்து வந்தவன் என்ற வகையில் நான் உட்பட நம் அனைவருக்கும் இவ்வரலாற்றுப் பதிவுகளை மீள் நினைவுறுத்த கடமைப்பட்டுள்ளேன்.

இனிமேல் நான் சொல்லும் ஒவ்வொரு வாக்கியத்துக்கும் அல்லாஹ்வுடைய கலாமான புனித அல்குர்ஆனில் சத்தியம் செய்தவனாகவும் மௌத்தின் பின் அல்லாஹ்வுடைய சந்நிதானத்திலே, இவ்வுண்மைகளின் மீதான கேள்வி பதிலுக்கு தயாரானவனாகவும் உங்களுக்கு எழுதுகிறேன்.

baseer_003

இம்முதலாவது மடலை அண்மையிலே நமது கட்சியில் இடம்பெற்ற செயலாளர் நாயகம் சகோதரர் ஹஸனலி அவர்களது அதிகாரங்கள் அநியாயமாகவும், கண்ணைப் பொத்தி மறைப்புச் செய்தும் பறிக்கப்பட்ட நிகழ்வில் இருந்து தொடங்குகிறேன்.

தியாகத்தலைவர் மர்ஹும் எம்.எச்.எம். அஷ்ரப் அவர்களின் „மைய்யித்‟ அடக்கம் செய்வதற்கு முன்புவரை, 2016இல் இருந்து பின்நோக்கிய 2000ஆம் ஆண்டு வரையான காலத்தில் நிகழ்ந்த அத்தனை அறநிகழ்வுகளையும், புற நிகழ்வுகளையும் உங்களிடம் ஒப்புவிக்க விரும்புகிறேன். செயலாளர் நாயகம் பொறுப்பின் வேர் அறுப்பு பெருந்தலைவர் அஷ்ரப் அவர்களின் வபாத்தின் பின் எழுந்த ஹக்கீம் – பேரியல் முரண்பாடுகளின் போது நான் தலைவர் ரவூப் ஹக்கீம் அவர்களின் பக்கம் தளபதிகளில் ஒருவனாக நின்று எல்லா இடங்களிலும் தலைவரையும், கட்சியையும் காப்பாற்ற போராடினேன். ஏனெனில், என்னைப் பொறுத்தவiர் தலைவர் பக்கம் „சரி‟ இருந்தது. அடுத்து ஏற்பட்ட ஹக்கீம் – ஹாபிஸ் நஸீர் அஹமட் போட்டியில் நஸீர் நூற்றுக்கு நூறு வீதம் பிழை என்பதை இனங்கண்டு தலைவரின் பக்கம் உயிர் கொடுக்க தயாராய் நின்றேன். தலைவர் ஹக்கீம் அவர்கள் ஒரு நாள் கபீல்ட் பொலிஸ் தலைமையக மைதானத்தில் உடற்பயிற்சியில் ஈடுபட்டிருந்த போது மைதானத்துக்குள் நுழைந்த ஹாபிஸ் நஸீர் தலைவரைப் பார்த்து ‘உங்களைத் தொலைக்காமல் விடமாட்டேன்’ என்று சவால் விட்டார்.

இச்சம்பவம் நடந்த அன்று உடற்பயிற்சிக்கான உடையைக் கூட மாற்றாமல் தலைவர் என் வீட்டுக்கு வந்து அச்சத்தை வெளிக்காட்டியவராக இதற்கு என்ன செய்யலாம் என்று ஆலோசனை நிகழ்த்தியது ஒன்றரை தசாப்தம் கழிந்தும் என் நினைவில் பசுமரத்து ஆணிபோல பதிந்துள்ளது. பின்னர் ஏற்பட்ட ஹக்கீம் – அதாவுல்லா பிரச்சினையின் போது தலைவர் பக்கம் சரி கண்டு அவரைக் காப்பாற்றினால் தான் கட்சியை காப்பற்ற முடியும் என்ற அடிப்படையில் தோள் கொடுத்து நின்றேன். தலைவர் ஹக்கீம் – ஹிஸ்புல்லா போட்டியில் முழுவதுமாக தலைவர் ஹக்கீம் தரப்பே மிகச்சரியென இனம் கண்டு அவர் சார்பாகப் போராடினேன். 2005ஆம் ஆண்டு இடம் பெற்ற பிரிவினைக்கான காரணியாக இருந்த ஹக்கீம் – ரிஷாட் – அமீரலி முரண்பாட்டின் போதும் தலைவர் ஹக்கீம் அவர்களே „சரி‟ என முடிவெடுத்து அவரின் பக்கம் கிட்டத்தட்ட ஒரு கவச வாகனம் போல் நின்று போராடினேன்.

இக்கால கட்டத்தில் இரண்டு முறை எனது உயிர் பாதிக்கப்பட இருந்த சந்தர்ப்பங்களில் எனது இளமைக் காலங்களில் நான் பெற்றுக் கொண்ட பயிற்ச்சிகளின் அடிப்படையில் அல்லாஹ்வின் உதவியால் தப்பித்தேன். இப்பயங்கர சம்பவங்களை பிறிதொரு மடலில் விவரிக்கிறேன். கடந்த கட்டாய உச்சபீடக் கூட்டம் மற்றும் பேராளர் மாநாட்டின் பின்னர் ஹக்கீம் – ஹஸனலி முரண்பாடு மெல்லெனக் கிளம்பியுள்ளது. இம் முரண்பாட்டிலே செயலாளர் நாயகம் ஹஸனலி பக்கமே சரியும், நியாயமும் இருப்பதாகவும், தலைவர் ஹக்கீம் அவர்களின் பக்கத்தில் சரியையோ, நியாயத்தையோ என்னால் காண முடியவில்லை என்பதாலும் நான் ஹஸனலியின் சரியான பக்கத்துக்கு ஆதரவாக நிற்கிறேன். 2

ஏன் இவ்வாறு முடிவெடுத்தேன்?

2000ஆம் ஆண்டு தொடக்கம் 2010ஆம் ஆண்டு காலப் பகுதியில் நமது கட்சியில் இடம்பெற்ற முரண்பாடுகளும், பிரிவினைகளும் தலைவரிடம் பங்கு கேட்டு எழுந்தவைகளாகும். ஆனால் இன்று எழுந்துள்ள பிரச்சினை கட்சிக்குள் தலைவரிடம் செயலாளர் நாயகம் „நீதி கேட்பதனால்‟ ஏற்பட்ட ஒன்றாகும், என்பதனால் ஹஸனலி சார்ந்து நிற்கின்றேன். இறுதியாக இடம் பெற்ற கட்டாய உச்சபீடக் கூட்டத்தில், உச்சபீடத்திற்கு செயலாளர் ஒருவரை நியமிப்பது என்றே தீர்மானம் எடுக்கப்பட்டது. கட்சிக்கான செயலாளர் என்று அல்ல. பின்னர் அடுத்தநாள் நடந்த பேராளர் மாநாட்டில் பெரும்பான்மையான பேராளர்கள் ஆங்கிலம் பற்றிய போதிய அறிவு பெற்றிராத போதும், யாப்புத்திருத்தம் ஆங்கிலத்தில் வாசிக்கப்பட்டது.

அதன்போது புதிதாக நியமிக்கப்படும் கட்சிக்கான செயலாளர், உச்சபீட செயலாளராகவும் செயற்படுவார் என்றே வாசிக்கப்பட்டது. ஆனால் தமிழில் இந்த விடயம் வாசிக்கப்பட்டபோது உயர்பீட செயலாளர் தலைவரால் நியமிக்கப்படுவார்;தேவை ஏற்பாட்டால் தலைவரால் நீக்கப்படுவார் என்றே சொல்லப்பட்டது. இது நம் கௌரவ உச்சபீட உறுப்பினர்களையும், மதிப்பிற்குரிய பேராளர்களையும் சுத்தமாக „ஏமாற்றிய சத்தமான நாடகம்‟ என்பதால் இதனோடு உடன்பட முடியாமல் ஹஸனலியின் நியாயம் கேட்கும் உச்சபீட உறுப்பினர்களில்; ஒருவனாக நானும் நிற்கிறேன்.

உச்சபீடத்துக்கான செயலாளருக்கு மாதச் சம்பளம் வழங்கப்படும் என்று இந்த கட்டாய உச்சபீடத்தில் தலைவரால் சொல்லப்பட்டது. இவ் விடயம் இவ்வுச்சபீடக் கூட்டக்குறிப்பில் இடம்பெறவில்லை.

சம்பளம் பெறும் செயலாளர் கட்சிக்கு உண்மையாக இருக்கமாட்டார்.
கட்சியில் செயலாளருக்கு சம்பளம் வழங்குவது பிழையான முன்னுதாரணமாகும்.
iii. சம்பளத்திற்கு வேலை செய்பவர் அதிக சம்பளம் தரும் வேறு ஒரு அரசியல் கட்சிக்கு பாயும் வாய்ப்புண்டு.
பணத்துக்காக கட்சியின் இரகசியங்களை கசிய விடும் ஆபத்து உண்டு.
கட்டாய உச்சபீடக் கூட்டக் குறிப்பு அடுத்து இடம்பெற்ற புதிய உச்சபீட கூட்;டத்தில் வாசித்து திருத்தப்பட்டதா என்பதை நினைவுப்படுத்திப் பார்க்குமாறு தயவுடன் எல்லா உறுப்பினர்களையும் வேண்டுகிறேன்.
கட்டாய உச்சபீடத்தில் எடுக்கப்படாத ஒரு தீர்மானத்தை தேர்தல் ஆணையாளருக்கு அனுப்பி வைத்தமை, நமது கட்யின் உச்சபீட உறுப்பினர்களை இயலாதவர்களாக, அறிவற்றவர்களாக, அரசியற் சூனியங்களாக, ஆமாம் சாமிகளாக, ஏவலுக்கு அடிபணியும் எடுபிடிகளாக, கூட்டத்தோடு சேர்ந்து கோவிந்தா போடுபவர்களாக கருதிச் செயற்பட்டமையை மிகத் துல்லியமாகக் காட்டுகின்றது. எனவே எமது உச்சபீட உறுப்பினர்களுடைய தன்மானத்தின் அடையாளமாக ஹஸனலியை இனம்கண்டு நீதி கேட்டு அவர் பக்கம் சார்ந்து நிற்கின்றேன்.

ஹஸனலி கட்சியின் ஸ்தாபக உறுப்பினர். ஆதி முஸ்லிம் காங்கிரஸ்காரர். 30 ஆண்டுகளாக முஸ்லிம் காங்கிரஸை விட்டுப் பிரியாதவர். கட்சிக்கு தீங்கிழைக்காதவர், இரண்டு தலைவர்களுக்கும் தூணாக துணை நின்றவர். கட்சியின் எந்த உறுப்பினரோடும் குரலை உயர்த்திக் கூட பேசாத குணக்குன்று. வேறு எவரும் செய்திராத, கட்சி தொடங்கிய காலம் தொட்டு இன்றுவரையான ஆவணங்களை சேர்ப்பதே தனது முதல் பணி என்று அத்தனையையும் சேகரித்து வைத்திருக்கும் நமது ‘ஆவண ஞானி’.

இப்படிப்பட்டவருக்கு இந்த அநீதி என்றால் நாமெல்லாம் எம்மாத்திரம் என்று நினைத்த மாத்திரத்தி;ல் நீதி கேட்டுக்கும் ஹஸனலியுடன் நிற்க முடிவெடுத்தேன்.

செயலாளர் அரசியல் ரீதியாக பதவிகள் வகிக்கக் கூடாது என்று தலைவர் ஹக்கீம் முன்மொழிந்தார். இது ஒரு கம்பனியின் நிர்வாகிகளில் ஒருவர் வியாபாரம் செய்யகூடாது என்ற கூற்றுக்கு ஒப்பானது. அரசியல் கட்சியின் செயலாளர் அரசியல் பதவி வகிக்க கூடாது என்பது அறம் இல்லை. ஐக்கிய தேசிய கட்சியின் செயலாளர் கபீர் ஹாஷிம், ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் செயலாளர் துமிந்த திசாநாயக்க, ஐக்கிய மக்கள் கூட்டமைப்பின் செயலாளர் மஹிந்த அமரவீர, தமிழ் தேசிய கூட்டமைப்பின் செயலாளர் மாவை சேனாதிராஜா போன்றவர்களும் இன்னும் பல கட்சிகளின் செயலாளர்களும், பாராளுமன்ற உறுப்பினர்களாகவும், அமைச்சர்களாகவும், மாகாணசபை உறுப்பினர்களாகவும் உள்ளனர். ஜே.வி.பி. யின் செயலாளர் டில்வின் சில்வா மாத்திரமே அரசியல் பதவி வகிக்காதவராக உள்ளார். இது அந்தக் கட்சியின் புரட்சிகர, இடதுசாரி இயல்புடன் ஒத்துவரக்கூடியது. நமது கட்சி ஜே.வி.பி. போன்ற கட்சி அல்ல என்பது எமக்கு நன்றாகத் தெரியும்.

எனவே முஸ்லிம் காங்கிரஸின் செயலாளர் அரசியல் பதவிகளை வகிக்க முடியும் என்பதில் நியாயம் கண்டேன். இதனால் ஹஸனலியின் கருத்துக்களைச் சரி கண்டேன்.

நமது இன்றைய செயலாளர் நாயகம் ஹஸனலிக்கு இன்றைய தலைவர் ரவூப் ஹக்கீம் அவர்கள் இன்று செய்திருப்பது போல அன்றைய தலைவர் மர்ஹும் அஷ்ரஃப் அவர்கள் அன்றைய செயலாளர் நாயகமாக இருந்த ரவூப் ஹக்கீம் அவர்களுக்கு அன்றே செய்திருந்தால், இன்று தலைவர் ரவூப் ஹக்கீம் எங்;கே இருந்திருப்பார்? என்னவாகியிருப்பார் என்று சிந்தித்தேன்.

1994ஆம் ஆண்டில் செயலாளர், அரசியல் பதவி வகிக்க முடியாது என்று மர்ஹும் அஷ்ரஃப் அவர்கள் சொல்லியிருந்தால், ரவூப் ஹக்கீம் அவர்கள் தேசிய பட்டியலில் பாராளுமன்ற உறுப்பினராகி இருந்திருக்க முடியுமா? அப்படி இருந்திருக்கா விட்டால் 2000ஆம் ஆண்டு பெருந்தலைவர் அஷ்ரஃப்பின் மரணத்திற்கு பிறகு ஹக்கீம் தலைவராக வந்திருக்க முடியுமா? இன்று அவரது அரசியல் நிலை எப்படி இருந்திருக்கும் என்றும் சிந்தித்தேன். இச்சிந்தனைகளின் முடிவிலே ஹஸனலியின் பக்கம் நியாயம் இருப்பதை உணர்ந்து அவர் பக்கம் நிற்கின்றேன்.

என்னருமைச் சகோதரர்களே!

நமது கட்சியில் அதிகாரமுள்ள பதவிகள் இரண்டுதான் உள்ளன. ஒன்று தலைவர், மற்றையது செயலாளர் நாயகம் ஆகும். பெருந்தலைவர் அஷ்ரஃப் அவர்கள் தலைவராக இருந்த காலத்தில் கட்சி நிறுவப்பட்ட போது ஒரு குறுகிய காலத்தைத் தவிர மற்ற எல்லா காலமும், தலைவர் கிழக்கில் அம்பாறை மாவட்டத்தை சேர்ந்தவராக இருந்த காரணத்தினால், ஆவணங்களில் கையெழுத்திடும் அதிகாரமுள்ள இரண்டாவது உச்ச நிலை பதவியான செயலாளர் நாயகம் பதவியை வட, கிழக்குக்கு வெளியே வழங்கி அலங்கரித்தார். இதுவே நமது கட்சி பேணிவந்த பிராந்திய ரீதியான அதிகார சமநிலையாகும். ஹஸனலிக்கு நடந்த கதிக்குப் பிறகு இந்தச் சமநிலை சிதைந்து சுக்குநூறாகிவிட்டது. இச்சமநிலையை வேண்டி ஹஸனலி கேட்கும் நியாயத்துக்கு காது கொடுத்துள்ளேன்.

ஹஸனலியை காலி டப்பாவாக்கி, செயலாளர் நாயகம் பதவி அப்படியே இருக்க யானை தின்ற விளாங்காய் போல அப்பதவியை வெறும் கோதாக்கி, சாற்றை பிழிந்து எடுத்து சக்கையாக்கி, சம்பிரதாய பதவி நிலையாக இதனைக் கீழிறக்கி வைக்கப்பட்டுள்ளது. பிழிந்தெடுத்த சாறு இதுவரை காலமும் உச்ச பீடத்தில் எவ்வித பதவிகளையும் வகிக்காதவரும், அனுபவம் இல்லாதவருமான ஒருவருக்கு பரிசளிக்கப்பட்டுள்ளது. அதுவும் இவரை தலைவரே நியமிக்கலாம்;நினைத்த மாத்திரத்தில் நீக்கம் செய்யலாம்; மேலும் இவருக்கு சம்பளம் வழங்கப்படும்.

இவ்வாறு செய்யப்பட்டிருப்பது அதிகாரம் பொருந்திய இரு பதவிகளையும் ஒருவரே வைத்திருப்பதற்கு சமமானது. சம்பளம் கொடுத்து, நினைத்தால் நியமித்து, பிடிக்காவிட்டால் நீக்கி தன் விருப்பப்படி செயலாளரை ஆட்டுவிக்கலாம் என்று இருப்பது இரு அதிகாரங்களையும் ஒருவரே பிரயோகிக்கும் தந்திரமல்லாமல் வேறேன்ன?

இந்த அதிகார பிரயோகம் எனக்குத் தெரிந்தவரை அல் குர்ஆனிலும் இல்லை, ஹதீஸிலும் இல்லை, ஜனநாயக நடைமுறையிலும் இல்லை, மார்க்ஸிஸ வழிமுறைகளிலும் இல்லை. எனவே ஹஸனலியின் நியாத்தின் பக்கம் நிற்க முடிவெடுத்துள்ளேன். சட்டத்தின் குறுக்கு வெட்டு முகத்தையும், நெடுக்கு வெட்டு முகத்தையும் நன்கு தெரிந்த நண்பர்களே! இப்படியெல்லாம் செய்யாதீர்கள். நமது கட்சி ஏனைய கட்சிகளைப் போல் தடாகத்தில் பூத்த கட்சியல்ல் நெருப்பிலும், பேரழிவிலும் இருந்து முளைத்த கட்சியாகும். 1985ஆம் ஆண்டு தொடக்கம் 2005ஆம் ஆண்டு வரையான 20 ஆண்டுகள் வடகிழக்கில் வாழும் முஸ்லிம்கள் சொல்லொணாத் துயரங்களை அனுபவித்தமை அம்மக்கள் முஸ்லிம்கள் என்பதற்காக அல்ல. முஸ்லிம் மக்கள் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் என்ற அரசியல் கட்சியில் ஒன்றிணைந்து நிறுவனமயப்பட்டு விட்டார்கள்; இதனை சின்னாப்பின்னமாக்கி சிதைத்து அழிக்க வேண்டும்; முஸ்லிம்களை பயம் காட்டி பணிய வைத்து முஸ்லிம் காங்கிரஸுக்கு இருக்கும் மக்கள் ஆதரவை இல்லாமல் செய்யவேண்டும் என்பதற்காகத்தான்.

அல்லாஹ்வை மட்டுமே சரணடையும் முஸ்லிம் மக்கள் காத்தான்குடி பள்ளிவாயில்களில் சுஜுதில் இருக்கும் போது சுட்டு கொல்லப்பட்டார்களே ஏன்?

அல்லாஹ் இட்ட ஐந்தாவது கடமையான ஹஜ்ஜை முடித்துவிட்டு வீடு நோக்கி வந்த இருநூற்றுக்கும் அதிகமான ஹஜ்ஜாஜிகள் கிரான்குளம் பகுதியில் சுடப்பட்ட போது அல்லாஹு அக்பர் என்று படைத்தவனை அழைத்த வண்ணம் மௌத்தாகி போனது எதற்காக?

காரைத்தீவு சந்தியில் தாங்கள் எதிர்த்து போராடும் சிங்கள் பொலிஸாரையே விடுதலை செய்துவிட்டு, தனியே முஸ்லிம் பொலிஸ்காரர்களை மட்டும் பிரித்தெடுத்து கொன்றது ஏன்?

ஏறாவூரில் கற்பிணித்தாய் வயிற்றில் இருந்த சிசுக்கள் உட்பட தூக்கத்தில் இருந்த ஆண்கள், பெண்கள், சிறுபிள்ளைகள் என அனைவரையும் வெட்டியும், சுட்டும் கதறக் கதறக் கொன்றது எதற்காக?

அம்பாறைக் கரையோரப் பகுதிகளில் உள்ள வயல் வரம்புகளிலும்;, வீதியோரங்களிலும் முஸ்லிம்கள் படுகொலை செய்யப்பட்டதும், பள்ளிகளில் குண்டு வெடிக்க வைக்கப்பட்டதும் ஏன்?

மட்டக்களப்பில் 32 குக்கிராமங்களில் வாழ்ந்தும், தொழில் செய்தும் வந்த முஸ்லிம்கள் ஈவிரக்கமின்றி வெளியேற்றப்பட்டது என்ன காரணத்திற்காக?

திருமலையின் பல கிராமங்களில் இருந்து முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்டதும் கலவரங்களில் பல உயிர்கள் காவு கொள்ளப்பட்டதும், மூதூரிலே நமது அரசியல் மேடையிலே குண்டு வைத்து கட்சியின் பிரதான வேட்பாளர் உட்பட பலரை கொன்றதும், தோப்பூரிலே பல கொலைகள் செய்ததும் ஏன்?

பொலன்னறுவை, மட்டக்களப்பு எல்லைக் கிராமங்களான அழுஞ்சிப் பொத்தானை, புதூர், சுங்காவில் போன்ற இடங்களில் முஸ்லிம்களை நடுநிசியில் துப்பாக்கி குண்டுகளுக்கும், கூரான கத்திகளுக்கும் இரையாக்கியது எது?

 மூதூரில் முஸ்லிம்கள் மொத்தமாக வெளியேற்றப்பட்டது ஏன்?

 வடக்கு, கிழக்கில் மீன்பிடிக்க சென்ற முஸ்லிம்களில் பலர் திரும்ப வரவில்லையே. ஏன்?

எல்லாவற்றிற்கும் மகுடம் வைத்தாற் போல வடமாகாணம் முழுவதிலும் இருந்து ஒட்டுமொத்தமாக முஸ்லிம்களை விரட்டியடித்ததும், அவ்வேளை அம்முஸ்லிம்களைப் பார்த்து நீங்கள் அஷ்ரஃப்பிடம் போங்கள் என்றும் கூறினரே! ஏன்;? ஏன்? எதற்காக?

இப்படி சம்பவங்கள் இன்னும் ஏராளம். மடலின் சுருக்கம் கருதி முக்கிய சம்பவங்கள் சிலவற்றை மட்டுமே குறிப்பிட்டிருக்கிறேன்.

இவ்வாறு அனைத்து அநியாயங்களும் அவலங்களும் நடத்தப்பட்டது முஸ்லிம்கள் என்பதற்காக அல்ல. முஸ்லிம்கள், முஸ்லிம் காங்கிரஸிற்கு ஆதரவாக இருக்கிறார்கள் என்பதற்காகத்தான் என்பதை இக்கால கட்டத்தில் புரிந்துகொள்வது அவசியமாகும். இவ்வாறு தாங்கொணாத் துயரங்ளை எல்லாம் தாங்கிக்கொண்டு நமது கட்சியை நேசித்துப் பாதுகாத்த அந்த மக்கள் சார்பாக எனது மனசாட்சியை நீதியின் பக்கம் நீட்டிப் பார்த்தேன்; இவ்வாறு இலட்சக்கணக்கான முஸ்லிம்களின் வேதனைகளின் மீட்சிக்காக உருவாக்கப்பட்ட நமது கட்சி தடுமாறவும், தடம் மாறவும் அனுமதியளிக்க முடியாது. அதனால் ஹஸனலியை சரிகண்டேன்.

 பேராளார் மாநாட்டில் நடந்தவற்றுக்கும், கட்டாய உச்ச பீட கூட்டத்தின் நிகழ்வுகளுக்கும் உச்சபீட உறுப்பினர்களாகிய நாம் சாட்சிகளாக இருக்கிறோம். அல்-குர்ஆனையும், ஹதீஸையும் வழிகாட்டியாக வைத்திருக்கும் நமது கட்சியில் பொய்யும், புரட்டும், ஏமாற்றும் அரங்கேற நாம் அனுமதிக்கலாமா? அனுமதித்துவிட்டு அல்லாஹ்விடம் மீள்வதில்லையா?

மனசாட்சியும், ஞாபகசக்தியும் உள்ள சுயநலமற்ற என்னருமை உச்சபீட உறுப்பினர்களே! அன்று இரவு நடந்த கட்டாய உச்சபீட கூட்டத்தில் நடந்தவைகளை நினைவு கூருங்கள். ஒன்று சேருங்கள். எவருக்கும் அநியாயம் இழைக்கவோ, யாருடைய பதவியை பறிக்கவோ அல்ல. நீதி கேட்கவும், நியாயம் கேட்கவும், நமது மரத்தை காக்கவும், நமது கட்சியை தூய்மைப்படுத்தவும், நமது கட்சியின் வரலாற்றை புதிய முஸ்லிம் இளைஞர்களிடம் கொண்டு சேர்க்கவும், கட்சிக்கு புதிய இரத்தம் பாய்ச்சவும், முஸ்லிம் காங்கிரஸ் இலங்கை முஸ்லிம்களின் நம்பிக்கை நட்சத்திரம் என்று மீள நிரூபிக்கவும், தனிமனித போலி விசுவாச படையாக அன்றி, படைத்த வல்ல அல்லாஹ்வையும் அவனது ரசூலையும் விசுவாசிக்கும் படையாக எழுந்து நிற்கவும் வேண்டும். அல்லாஹு அக்பர். இப்படிக்கு,

பஷீர் சேகுதாவூத்.

0 0 votes
Article Rating
1 Comment
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
Muhammad Nazeer Hussein

Very near we will throw it out foolish leadership also the high command. SLMC Fundamentalist.