முன்னாள் ஜனாதிபதி ஏ.பி.ஜே. அப்துல்கலாமின் அண்ணன், ஏ.பி.ஜே.முகமது முத்து மீரான் மரக்காயர். (வயது 99). இவர், சென்னை ஐகோர்ட்டில் ஒரு மனு தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-
என் தம்பி ஏ.பி.ஜே. அப்துல்கலாம் அறிவியல் ஆராய்ச்சியாளராக இருந்தார். பின்னர் 11-வது இந்திய ஜனாதிபதியாக பதவி வகித்தார். அவர் வாழ்நாளில், இறுதி மூச்சு இருக்கும் வரை, அவர் பொது சேவையில் ஈடுபட்டார்.
அவர் ஒருபோதும் அரசியல் லாபத்துக்காக எந்த ஒரு நடவடிக்கையிலும் ஈடுபடவில்லை. ஜனாதிபதி பதவிக்கு கூட அவர் எந்த அரசியல் கட்சியின் வேட்பாளராகவும் நிற்கவில்லை. பொதுவேட்பாளராக நின்றே பதவியை பெற்றார்.
என்னுடைய தம்பியிடம் அறிவியல் ஆலோசகராக இருந்தவர் பொன்ராஜ். இவர் கடந்த பிப்ரவரி மாதம், என் தம்பியின் பெயரில் ஒரு அரசியல் கட்சியை தொடங்கியுள்ளார்.
அப்துல்கலாம் விஷன் இந்தியா கட்சி என்ற பெயரில் கட்சியை தொடங்கி, அந்த கட்சியின் கொடியில் என் தம்பி அப்துல்கலாமின் படத்தையும் பொறித்துள்ளார்.
இதனால், மறைந்த என் தம்பி அப்துல்கலாமின் கனவுகளின் அடிப்படையில், இந்த கட்சி தொடங்கப்பட்டுள்ளதாக பொதுமக்கள் மத்தியில் தவறான கருத்து பரவலாம்.
இவர்களது செயல்களினால், தேர்தல் நடத்தை விதி அமலுக்கு வந்ததும், பொது இடங்களில் உள்ள அப்துல் கலாமின் சிலைகள், புகைப்படங்களை ஆகியவற்றை, பிற அரசியல் தலைவர்களின் சிலை, புகைப்படங்களை மறைப்பதுபோல, தேர்தல் ஆணையம் மறைத்துள்ளது. அப்துல் கலாம் அரசியல்வாதி கிடையாது.
தேர்தல் ஆணையம் அவரது புகைப்படம், சிலைகளை மறைப்பது மிகுந்த வேதனையை அளிக்கிறது. மேலும் இந்திய ஜனாதிபதியாக இருக்கும் ஒருவரை அரசியல் தலைவராகவும், அரசியல் கட்சியின் சின்னமாகவும் பயன்படுத்தக்கூடாது. முன்னாள் ஜனாதிபதி ராஜேந்திரபிரசாத் முதல் பிரதீபா பட்டேல் வரை எந்த ஒருவரது பெயர், புகைப்படங்களை அரசியல் கட்சிகள் பயன்படுத்தியது கிடையாது.
இப்போது பொன்ராஜ் தொடங்கியுள்ள அரசியல் கட்சியின் காரணமாக, என்னுடைய தம்பி அப்துல் கலாமின் நற்பெயருக்கு களங்கம் ஏற்பட்டுள்ளது. அவர் நற்பெயருக்கு ஈடுசெய்ய முடியாது இழப்பு ஏற்பட்டுள்ளது.
எனவே, அப்துல்கலாமின் பெயர், புகைப்படம் ஆகியவற்றை பயன்படுத்தவும், கட்சியின் பெயராக அப்துல்கலாம் பெயர் பயன்படுத்தவும், அப்துல் கலாம் விஷன் கட்சியின் கவுரவ தலைவர் வி.பொன்ராஜ், பொதுச் செயலாளர் எஸ். குமார், செயலாளர் ஆர். திருசெந்தூரான் ஆகியோருக்கு தடை விதிக்கவேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது.
இந்த மனு நீதிபதி எஸ்.விமலா முன்பு நேற்று அவசர வழக்காக விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில் வக்கீல் எஸ்.நம்பி ஆரூரான் ஆஜராகி வாதிட்டார்.
இதையடுத்து நீதிபதி பிறப்பித்த இடைக்கால உத்தரவில், ‘முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாமின் பெயர், புகைப்படம் ஆகியவற்றை எந்த ஒரு வடிவிலும் பயன்படுத்த பொன்ராஜ் உள்ளிட்டோருக்கு தடை விதிக்கப்படுகிறது’ என்று உத்தரவிட்டார்.