வீரகேசரி பத்திரிகைக்கு அழுத்தம் கொடுத்த விவகாரம் தொடர்பில் தன்னை பிழையாக வழிநடாத்திய தேசியப்பட்டியல் எம்.பி. சல்மானை மு.கா. தலைவர் ஹக்கீம் கடிந்து கொண்டுள்ளார் என்று மு.கா. வட்டாரங்கள் கூறுகின்றது.
வீரகேசரி நிறுவனத்தின் முகாமைத்துவ பணிப்பாளருடனான உறவை அடிப்படையாக வைத்து இதை காதும்காதும் வைத்தது போல் செய்வதற்கு தாம் எண்ணியிருந்தாலும், இவ் விடயத்தில் அந்நிறுவனமும் பணிப்பாளரும் நேர்மையற்ற முறையில் நடந்து கொண்டுள்ளார்கள் என்று ஹக்கீம், சல்மான் போன்றோர் கட்சி உறுப்பினர்களிடம் அங்கலாய்ப்பதாக கூறப்படுகின்றது.
வீரகேசரி பத்திரிகையில் தொடர்ச்சியாக நடப்பு விவகார கட்டுரைகளை எழுதி வருபவரான ஊடகவியலாளர் ஏ.எல்.நிப்றாஸ் எழுதும் மு.கா. பற்றிய கட்டுரைகளை பிரசுரிக்கக் கூடாது என்று கடந்த சில வாரங்களுக்கு முன்னர் மு.கா. தலைவர், அப் பத்திரிகை நிறுவனத்தின் முகாமைப் பணிப்பாளருக்கு அழுத்தம் கொடுத்தார். இதனையடுத்து ஹக்கீம் பற்றி எழுதுவதற்கு அப் பத்திரிகை தடைவிதித்துள்ளது. ஊடகம் மீது இவ்வாறான ஒரு அழுத்தத்தை பிரயோகித்தமை அரச உயர்மட்டம் வரை சென்றிருப்பதாக அறியமுடிகின்றது.
தகவல் அறியும் சட்டமூலத்தை சவாலுக்கு உட்படுத்தும் விதத்தில் இப்படியான அழுத்தத்தை பிரயோகித்ததன் மூலம் கடுமையான சர்ச்சை ஒன்றை குறித்த அரசியல்வாதி தோற்றுவித்தார். இதனால் மக்கள் மத்தியில் அவரது இமேஜ் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. பொல்லைக் கொடுத்து அடிவாங்கியது போல ஆகிப்போனது.
ஆனால், பத்திரிகை துறையின் தர்மத்தை காப்பதற்காகவும் வீரகேசரி தனி ஒரு அரசியல்வாதிக்கு மகுடி வாசிக்கின்ற பத்திரிகை இல்லை என்பதை காட்டுவதற்காகவும் தொடர்ச்சியாக மு.கா., அதன் தலைவர் பற்றிய கட்டுரைகளை பிரசுரிப்பதற்கு ஆசிரிய பீடம் நடவடிக்கை எடுத்திருப்பதாக அறிய வருகின்றது.
இப்படியான ஒரு அழுத்தத்தை கொடுத்துவிட்டு கொழும்பில் கடந்த வார இறுதியில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்ட மு.கா. தலைவர் றவூப் ஹக்கீம் ஊடக சுதந்திரத்தை வலியுறுத்தியும், ஊடகவியலாளர்கள் மீதான அழுத்தம் குறித்து கவலை கொண்டவராகவும் உரை நிகழ்த்தியுள்ளார். இதன் வாயிலாக தனது வங்குரோத்து அரசியலின் இரட்டை முகத்தை அவர் வெளிப்படுத்தியுள்ளதாக சிரேஷ்ட ஊடகவியலாளர் ஒருவர் கூறினார்.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் றவூப் ஹக்கீம் முன்னணி பத்திரிகையான வீரகேசரிக்கு அழுத்தம் கொடுத்த விடயம் உண்மையென அக்கட்சியிள் உயர்பீட உறுப்பினர்களின் ஊடாக தெரியவந்துள்ளது. அத்தோடு இவ் விவகாரம் பற்றி மு.கா. தலைவர் இதுவரையும் மறுப்பு அறிக்கை எதையும் வெளியிடவில்லை.