சாய்ந்தமருதுக்கு தனியான உள்ளூராட்சி சபை உருவாக்கப்பட வேண்டும் எனக் கோரி கிழக்கு மாகாண சபையில் பிரேரணை நிறைவேற்றம் !

jameel_Fotor_Collage_Fotor

-எம்.வை.அமீர்-

 சாய்ந்தமருது பிரதேசத்திற்கு தனியான உள்ளூராட்சி சபை உருவாக்கப்பட வேண்டும் எனக் கோரி கிழக்கு மாகாண சபையில் அந்த சபையின் முஸ்லிம் காங்கிரஸ் குழுத் தலைவரும் மு.கா.வின் சர்வதேச விவகாரங்களுக்கான பிரதிப் பணிப்பாளருமான ஏ.எம்.ஜெமீல் கொண்டு சென்ற பிரேரணை ஏகமனதாகநிறைவேற்றப்பட்டுள்ளது.

கிழக்கு மாகாண சபையின் மாதாந்த சபை அமர்வின் இரண்டாம் நாள் கூட்டத் தொடர் இன்று (2015-05-13)புதன்கிழமை அதன் தவிசாளர் சந்திரதாச கலப்பதி தலைமையில் இடம்பெற்றது.

இதன்போது சாய்ந்தமருது பிரதேசத்திற்கு தனியான உள்ளூராட்சி சபையை உருவாக்குமாறு கோரும் தனி நபர் பிரேரணையை மு.கா.குழுத் தலைவர் ஏ.எம்.ஜெமீல் சமர்ப்பித்தார்.

பிரேரணையை சமர்ப்பித்து உரையாற்றுகையில் அவர் கூறியதாவது;

“சாய்ந்தமருது பிரதேசத்திற்கு தனியான உள்ளூராட்சி சபையை உருவாக்குவதற்கான வர்த்தமானிஅறிவித்தலை மேலும் காலம் தாழ்த்தாமல் உடனடியாக வெளியிடுவதற்கு கிழக்கு மாகாண சபை பங்களிப்பு செய்ய முன்வர வேண்டும் என வலியுறுத்தி இப்பிரேரணையை சமர்ப்பிக்கின்றேன்.

“17 கிராம சேவகர் பிரிவுகளையும் 2014 ஆண்டு கணக்கெடுப்பின் பிரகாரம 28663 மக்கள் தொகையையும்18891 வாக்காளர்களையும் கொண்ட சாய்ந்தமருது 1897ஆம் ஆண்டு தொடக்கம் தனியான கிராமாட்சி மன்றமாக இயங்கி வந்துள்ளது. 1987ஆம் ஆண்டே அது கல்முனையுடன் ஒன்றிணைக்கப்பட்டுள்ளது.

இதனால் சாய்ந்தமருது மக்கள் தமது இழந்த உரிமையை மீண்டும் பெற்றுத் தருமாறு நீண்ட காலமாக கோரிவருகின்றனர். இதற்காக மறுமலர்ச்சி மன்றம் உள்ளிட்ட பொது அமைப்புகள் ஒன்றிணைந்து பல வருடங்களாக பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன. அத்துடன் அண்மைக் காலமாக சாய்ந்தமருது ஜும்ஆப் பெரிய பள்ளிவாசல் நிர்வாகம் இக்கோரிக்கையை பொறுப்பேற்று காத்திரமான நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றது.

இது விடயமாக அப்பிரதேசத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் பாராளுமன்ற உறுப்பினர், மாகாண சபை உறுப்பினர் மற்றும் மாநகர சபை உறுப்பினர்களை பள்ளிவாசல் நிர்வாகம் அழைத்து இக்கோரிக்கையை முன்வைத்து அவர்களின் முழுமையான ஒத்துழைப்புடன் எமது ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரான அமைச்சர் ரவூப் ஹக்கீம் அவர்களை கடந்த ஏப்ரல் 10ஆம் திகதி சந்தித்து பேச்ச்கிவார்த்தை நடத்தியபோதுசாய்ந்தமருது மக்களின் ஒட்டு மொத்தமான அபிலாஷையை தான் முன்னின்று நிறைவேற்றித் தருவதாக அவர் முழு மனதுடன் வாக்குறுதியளித்தார்.

அதன் பிரகாரம் அமைச்சர் ரவூப் ஹக்கீமின் ஏற்பாட்டில் கடந்த ஏப்ரல் 22ஆம் திகதி  உள்ளூராட்சி, மாகாண சபைகள் அமைச்சர் கரு ஜெயசூரியவை பள்ளிவாசல் நிர்வாகம் சந்தித்து இக்கோரிக்கையை முன்வைத்தபோது அவர் அதனை ஏற்றுக் கொண்டு விரைவில் வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்படும் என்று உறுதியளித்ததுடன் அவ்விடத்திலேயே அமைச்சின் செயலாளருக்கும் பணிப்புரை விடுத்திருந்தார்.

ஆனால் பல வாரங்களாகியும் வர்த்தமானி வெளியிடலுக்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டதாகத் தெரியவில்லை. இதையிட்டு மக்கள் பெரும் கவலையடைந்துள்ளனர். ஏதும் தடங்கல்கள், சூழ்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதா என அஞ்சுகின்றனர். பள்ளிவாசல் நிர்வாகமும் பொது அமைப்புகளும் அவர்களின்பிரதிநிதி என்ற ரீதியில் எம்மை கடுமையாக அழுத்திக் கொண்டிருக்கின்றனர்.

எமது மறைந்த தலைவர் எம்.எச்.எம்.அஷ்ரப் தனது பதவிக் காலத்தின் போது சாய்ந்தமருதுக்கு தனியான சபையை ஏற்படுத்தித் தருவதற்கு முன்வந்த போதிலும் அப்போது முதலில் தமக்கு பிரதேச செயலகத்தை ஏற்படுத்தித் தருமாறு கோரப்பட்டதனால் அவர் அதனை ஏற்று 1999ஆம் ஆண்டு உப பிரதேச செயலகத்தைஉருவாக்கிக் கொடுத்தார். பின்னர் அவர் அகால மரணமடைந்த போதிலும் அது 2001ஆம் ஆண்டு முழுமையான அதிகாரங்களுடன் பிரதேச செயலகமாக தரமுயர்த்தப்பட்டது. 

ஆனால் இன்று இந்த நாட்டில் பிரதேச செயலகம் இருந்தும் உள்ளூராட்சி சபை ஒன்று இல்லாமல் இருக்கின்ற ஒரே ஒரு பிரதேசம் சாய்ந்தமருது மாத்திரமே. அதேவேளை அம்பாறை, அக்கரைப்பற்று போன்ற பிரதேச செயலக பிரிவுகளுக்கு இரண்டு சபைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளதை இங்கு சுட்டிக்காட்ட விரும்புகின்றேன். அத்துடன் அம்பாறை மாவட்டத்தில் அதிக சனநெருக்கடியை கொண்ட பிரதேசமான சாய்ந்தமருது ஏனைய பிரதேச செயலாளர் பிரிவுகளுடன்  ஒப்பிடுகையில் கூடிய மக்கள் தொகையைக்கொண்டுள்ளது. 

இன்று தமக்கு ஒரு உள்ளூராட்சி சபையைப் பெற்றுக் கொள்வதற்காக சாய்ந்தமருது மக்கள் மிகவும் உணர்வுபூர்வமாக அணி திரண்டுள்ளனர். அதற்காக எத்தகைய தியாகங்களையும் செய்வதற்கு அவர்கள்துணிந்துள்ளனர். இது விடயத்தில் எத்தகைய விட்டுக் கொடுப்புக்கும் அவர்கள் தயாரில்லை.

அதனால் இன்று இக்கோரிக்கை நிறைவேற்றப்படுவதில் காட்டப்படுகின்ற தாமதம் அவர்கள் மத்தியில் மனஉளைச்சலையும் விசனத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இப்பிரச்சினைக்கு அவர்கள் விரைவான தீர்வை எதிர்பார்க்கின்றனர்.

நானும் சாய்ந்தமருதை சேர்ந்தவன் என்ற ரீதியில் அம்மக்களுடன் உளப்பூர்வமாக கைகோர்த்துள்ளேன். என்னை அப்பிரதேச மக்கள் இரண்டாவது முறையாகவும் தமது பிரதிநிதியாக தெரிவு செய்துள்ளனர். அம்பாறை மாவட்டத்தில் எமது ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசுக்கு மிகக் கூடுதலான வாக்குகளை அதாவது 90வீதமான மக்கள் ஆதரிக்கின்ற ஒரே ஒரு ஊர் சாய்ந்தமருதாகும் என்று நான் குறிப்பிட்டால் அது மிகையான கருத்தல்ல என்பதை எல்லோரும் ஏற்றுக் கொள்வீர்கள். 

அந்த வகையில் நானும் எமது கட்சியும் அவர்களது அபிலாஷைகளையும் தேவைகளையும் நிறைவற்றிக் கொடுப்பதற்கு கடமைப்பட்டுள்ளோம். அதற்கான தார்மீகப் பொறுப்பை நாம் சுமந்திருக்கின்றோம். அந்த மக்களின் உணர்வுகளுடன் நாம் விளையாட முடியாது.

எந்த நேரத்திலும் பாராளுமன்றம் கலைக்கப்படலாம் என்கிற சூழ்நிலையில் அவ்வாறு நடந்து விட்டால் தேர்தல் காலத்தில் வர்த்தமானி அறிவித்தலை வெளியிட் முடியாத சட்டச் சிக்கல் ஏற்பட வாய்ப்பிருக்கிறது. ஏனெனில் கடந்த ஜனாதிபதித் தேர்தல் காலத்தில் அப்போதைய உள்ளூராட்சி அமைச்சர் ஏ.எல்.எம்.அதாஉல்லா இதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டிருந்ததாகவும் தேர்தல் காலம் என்பதால் அது சட்டச் சிக்கல் காரணமாக தடுக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. அது ஒரு துர்ப்பாக்கியமான நிலையாகும்.அப்படியான ஒரு நிலை இப்போதும் ஏற்பட்டு விடக்கூடாது என்றே நாம் அஞ்சுகின்றோம். 

ஆகையினால் இவ்விடயத்தில் இனியும் தாமதம் காட்ட இடமளிக்க முடியாது. ஒரு நகர சபையை பெற்றுக் கொள்வதற்கான அத்தனை தகுதிகளும் வளங்களும் இருந்தும், எல்லை விடயத்தில் எந்தவித சிக்கலும் இல்லாதிருந்தும், அனைத்து அரசியல் பிரதிநிதிகளும் ஒருமித்த கருத்துடன் முன்னின்றும், சம்மந்தப்பட்ட அமைச்சர் பணிப்புரை விடுத்தும், பிரதேச செயலாளர், அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர் ஆகியோர் உரிய பரிந்துரைகளை அனுப்பியும் கூட ஏன் அது நிறைவேற்றப்படுவதில் தாமதம் காட்டப்படுகிறது என்ற சந்தேகம் மக்கள் மத்தியில் எழுந்துள்ளது.

ஏனைய சில பிரதேச அரசியல்வாதிகள் இது விடயத்தில் சித்து விளையாட்டுகளை மேற்கொள்ளமுயற்சிக்கின்றனர். அவர்கள் அவ்வாறு சாய்ந்தமருது மக்களின் உணர்வுகளுடன் விளையாட முற்படுவார்களாயின் அவர்களுக்கு உரிய தருணத்தில் அந்த மக்கள் பாடம் புகட்டுவார்கள் என்பதை அவர்கள் மனதில் கொள்ள வேண்டும் என எச்சரிக்கின்றேன்.

எனவே சாய்ந்தமருது மக்களின் நீண்ட கால அபிலாஷையை நிறைவேற்றிக் கொடுப்பதற்காக எமது உயரியான சபையான கிழக்கு மாகாண சபை உரிய பங்களிப்பை செய்ய முன்வர வேண்டும் என்று கோரியேஇந்த பிரேரணையை சமர்ப்பிக்கின்றேன். இதன் மூலம் சாய்ந்தமருது மக்களின் உணர்வுகளை மதித்து நமது சபையும் உள்ளூராட்சி அமைச்சுக்கு ஒரு சிபார்சினை அனுப்புமாயின் அதற்காக அமைச்சர் ரவூப் ஹக்கீம் முன்னெடுத்துள்ள நடவடிக்கைகளுக்கு அது பக்கபலமாக அமையும் என நான் எதிர்பாக்கின்றேன்” என்றுஏ.எம்.ஜெமீல் குறிப்பிட்டார்.

இதனைத் தொடர்ந்து முன்னாள் முதலமைச்சர் நஜீப் அப்துல் மஜீத் பிரேரணையை ஆமோதித்தார்.உறுப்பினர்கள் பலரும் பிரேரணைக்கு ஆதரவாக உரையாற்றியதுடன் அது சபையில் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது.