லிந்துலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட இரண்டு தோட்டப்பிரிவுகளின் ஆலயங்களில் நகைகள் மற்றும் உண்டியல் பணங்களை கொள்ளையிட்டதாக சந்தேகத்தின் பேரில் இருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு நுவரெலியா நீதிமன்றத்தில் நீதிபதி பிரதீப் ருவான் த சில்வா முன்னிலையில் ஆஜர்ப்படுத்தி பிணையில் செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக லிந்துலை பொலிஸார் 02.05.2016 அன்று தெரிவித்தனர்.
அதேவேளை இந்த கொள்ளையுடன் சம்மந்தப்பட்ட பிரதான சந்தேக நபர்களை எதிர்வரும் ஜீன் மாதம் 6ம் திகதி நீதிமன்றத்தில் ஆஜர்செய்ய நீதிபதி பிரதீப் ருவான் த சில்வா லிந்துலை பொலிஸாருக்கு உத்தரவிட்டுள்ளார்.
லிந்துலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மட்டுக்கலை மற்றும் டில்குற்றி ஆகிய தோட்டப்பகுதிகளில் உள்ள ஆலயங்களில் கடந்த ஒரு மாதத்திற்கு முன் இந்த கொள்ளை சம்பவங்கள் இடம்பெற்றுள்ளது.
இதில் விக்கிரங்களுக்கு அணிவிக்கப்பட்டிருந்த தங்கத்திலான தாலி மற்றும் தங்க சங்கிலி உள்ளிட்ட ஆலய உண்டியல்கள் களவாடப்பட்டுள்ளது.
கொள்ளையர்களை குறி வைத்து லிந்தலை பொலிஸார் தேடுதல் வேட்டையை தொடர்ந்தும் நடத்தி வந்த நிலையில் கடந்த 27ம் திகதி சந்தேகத்தின் பேரில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் மீது பொலிஸ் விசாரணைகள் நடத்தி கடந்த 29ம் திகதி நுவரெலியா நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்திய பொழுது இவர்களை நீதிமன்றம் காசு பிணையில் செல்ல அனுமதித்துள்ளது.
அதேவேளை இச்சம்பவம் தொடர்பான இரண்டு பிரதான குற்றவாளிகள் இருப்பதாக பொலிஸார் நீதிமன்றத்திற்கு அறிவித்ததையடுத்து இவர்களை கைது செய்ய நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்துமாறு நீதிபதி உத்தரவு வழங்கியுள்ளார்.