ஊழியன் என்ற வகையில் மக்களுக்கு தெளிவான எதிர்காலத்தை கட்டியெழுப்பவுள்ளேன் – ஜனாதிபதி

ஊழியன் என்ற வகையில் மக்களுக்கு தெளிவான எதிர்காலத்தை கட்டியெழுப்ப அர்ப்பணிப்புகளை மேற்கொள்ள போவதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

காலியில் இன்று நடைபெற்ற ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மே தினக் கூட்டத்தில் உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

maithripala

உலகில் அபிவிருத்தியடைந்த நாடுகள் மத்தியில் முன்னணி நாடாகவும் ஒழுக்கம் நிறைந்த நாடாகவும் புத்திசாலிகளை கொண்ட நாடாகவும் இலங்கை முன்னோக்கி கொண்டு செல்லும் நோக்கில் நாட்டின் எதிர்கால அபிவிருத்திக்காக அர்ப்பணிப்புடன் செயற்படுவோம்.

18 ஆம் 19ம் நூற்றாண்டுகளில் இருந்த தொழிலாளர்களுக்கும் தற்போதுள்ள தொழிலாளர்களுக்கும் இடையில் மாற்றங்களும் வளர்ச்சியும் ஏற்பட்டுள்ளது.

அரசியல், பொருளாதாரம், சமூகம் மற்றும் தொழில்நுட்ப விடயங்கள் காரணமாக தொழிலாளர்கள் நாளுக்கு நாள் வளர்ச்சிக்கு உட்பட்டு வருகின்றனர். நாடு என்ற வகையில் முன்னோக்கிச் செல்லும் போது பிரிந்து கிடந்து நாட்டை கட்டியெழுப்ப முடியாது.

எதிர்காலத்தில் நீண்ட பயணத்தை முன்னெடுக்க வேண்டுமாயின் அனைவரும் ஒன்றாக இணைந்து அந்த பயணத்தை மேற்கொள்ள வேண்டும்.இதில், அரசியல் கட்சிகள், அரசியல் அமைப்புகள், அணிகள், தொழிற்சங்கங்கள் மாத்திரமல்லாது அரசியல் தலைவர்களும் இணைய வேண்டும்.

இலங்கை தற்போது பொருளாதார ரீதியாக பாரிய பின்னடைவை சந்தித்துள்ளது. இவ்வாறான பாரதூரமான நிலைமை மற்றும் நெருக்கடிக்குள் முன்னோக்கிச் செல்லும் போது, நாட்டை கட்டியெழுப்ப அனைவரது உதவியும் அவசியம் எனவும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன குறிப்பிட்டுள்ளார்.