சமஷ்டி ஆட்சிமுறையை இரா.சம்பந்தனும், வடக்கு மாகாணசபையும் வலியுறுத்த ஆரம்பித்த பின்னர், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மீது ஒன்று குவிக்கப்பட்ட தெற்கு அரசியல் சக்திகளின் தாக்குதல் இப்போது சம்பந்தனை நோக்கி மற்றொரு முனையில் இருந்து தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
கிளிநொச்சியில் உள்ள பரவிப்பாஞ்சான் இராணுவ முகாமுக்குள் அத்துமீறி நுழைந்ததாக, எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் மீது, சிங்கள அடிப்படைவாதிகள் மட்டுமன்றி, அரசாங்கமும் கூட, குற்றச்சாட்டை முன்வைத்திருக்கின்றன.
இந்தக் குற்றச்சாட்டை முன்வைத்து, சம்பந்தனைக் கைது செய்ய முடியுமா? என்று புதிய பொலிஸ்மா அதிபருக்குச் சவால் விடுத்தார் உதய கம்மன்பில. சம்பந்தன் இராணுவத்திடம் மன்னிப்புக் கோர வேண்டும் என்றார், ஓமல்பே சோபித தேரர்.
முன்னறிவிப்பின்றி, சம்பந்தன் முகாமுக்குள் சென்றிருக்கக் கூடாது என்றும் இனிமேல் செல்வதானால் முன் அனுமதி பெற வேண்டும் என்றும் கூறுகிறது அரசாங்கம்.
இதிலிருந்து எல்லாத் தரப்புகளும் இதனை ஒரு விவகாரமாக மாற்றுவதிலேயே குறியாக இருக்கின்றன என்பதை உறுதியாக உணர்ந்து கொள்ள முடிகிறது.
எண்பதுகளைத் தாண்டிய எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன், கிளிநொச்சி இராணுவ முகாமுக்குள் அத்துமீறி நுழைந்து எதனைச் சாதிக்கப் போகிறார்? அவரால் அப்படி செய்யத் தான் முடியுமா? என்றெல்லாம் இவர்கள் யாரும் சிந்திக்கவில்லை.
புதுவருடத் தினத்தன்று தொடங்கி வடக்கில் மூன்று நாட்கள் பயணத்தை இரா.சம்பந்தன் மேற்கொண்டிருந்த போதே, இந்தச் சம்பவம் இடம்பெற்றிருந்தது.
கடந்த 16ஆம் திகதி, கிளிநொச்சியில் நடந்த சந்திப்பு ஒன்றின் போது, பரவிப்பாஞ்சானில் இராணுவத்தினரின் கட்டுப்பாட்டில் உள்ள வீடுகளின் உரிமையாளர்கள், தம் வீடுகளை மீட்டுத் தருமாறு சம்பந்தனிடம் கோரியிருந்தனர்.
அதையடுத்து. வீட்டு உரிமையாளர்களையும் அழைத்துக் கொண்டு பரவிப்பாஞ்சானுக்குச் சென்றிருந்தார் சம்பந்தன்.
பொலிஸ் வாகனம் முன்னே செல்ல, சம்பந்தனின் வாகனம், பரவிப்பாஞ்சானில் உள்ள இராணுவ முகாம் வாசலுக்குச் சென்ற போது, அங்கு காவலுக்கு நின்ற சிப்பாய், யாரோ வி.ஐ.பி. வருகிறார் என்று நினைத்து பாதுகாப்புத் தடையை அகற்றி விட்டார்.
அதையடுத்து, சம்பந்தன் மற்றும் சில எம்.பி.க்களும், பொதுமக்களுடன் சென்று அந்த இடத்தைப் பார்வையிட்டு விட்டுத் திரும்பினர். இந்தச் சம்பவம் நடந்து ஒரு வாரத்துக்குப் பின்னர் தான், விவகாரமாக மாற்றப்பட்டிருக்கிறது.
இராணுவ முகாம் தடைகளை உடைத்துக் கொண்டு சம்பந்தன் உள்ளே நுழைந்தது போன்று தெற்கிலுள்ள கடும்போக்கு அரசியல் சக்திகள், எகிறிக் குதிக்கின்றன.
சம்பந்தனைக் கைது செய்ய வேண்டும், விசாரணை செய்ய வேண்டும் என்ற குரல்கள் எழுகின்றன. இப்படியாவது சம்பந்தனைப் பிடித்துச் சிறைக்குள் அடைத்து விட்டால் நிம்மதியாக இருக்கலாம் என்று இவர்கள் நினைப்பது வேடிக்கை.
இராணுவ முகாமின் வாசலில் பாதுகாப்புக்கு நின்றவர்கள் வாசல் கதவைத் திறந்து விட்ட பின்னர், அதுவும் பொலிஸ் பாதுகாப்புடன் உள்ளே சென்றவரை விசாரணை செய்ய வேண்டும் என்பது முட்டாள்தனமான வாதம்.
திடீரென வீட்டுக்கு வந்தவரை உள்ளே வரவிட்ட பின்னர், ஏன் உள்ளே வந்தாய்? என்று கேட்பது எந்தளவுக்கு அநாகரிகமானதோ அதுபோலத் தான் இதுவும்.
அதைவிட, இராணுவ முகாம் ஒன்றுக்குள் நுழைவது சட்டரீதியான குற்றமா? என்ற கேள்வியும் இருக்கிறது. ஏனென்றால் இப்போது அவசரகாலச்சட்டம் இல்லை.அதைவிட, சம்பந்தனும் ஏனையவர்களும் நுழைந்தது ஒன்றும், இராணுவத்தின் சொத்தோ அல்லது அரசாங்கதின் சொத்தோ அல்ல.
தமது முகாமுக்குள் சம்பந்தன் நுழைந்தது தவறு என்று இராணுவம் உணருமானால், தமது வீடுகளுக்குள் அத்துமீறி நுழைந்து குடியிருக்கும் இராணுவத்தினரின் செயலையிட்டு, அந்த வீடுகளின் காணிகளின் உரிமையாளர்கள், எந்தளவுக்கு மனம் வெதும்புவார்கள் என்பதையும் சிந்திக்க வேண்டும்.
இராணுவ முகாமுக்குள் சம்பந்தன் நுழைந்தார் என்று அவர் மீது சட்டநடவடிக்கை எடுக்கத் துணிந்தால், அதற்காக அரசாங்கமும், இராணுவமுமே வருந்த நேரிடும். ஏனென்றால், அது இராணுவத்தினருக்கு சட்டரீதியாகச் சொந்தமான பகுதியல்ல.அதனால் தான், இந்த விவகாரத்தை இராணுவத் தரப்பும், பொலிஸ் தரப்பும், பூசி மெழுகப் பார்க்கின்றன.
முன்னுக்குப் பின் முரணான செய்திகளும் வெளியிடப்பட்டன. அரசாங்கமும், கூட இந்த விவகாரத்தை ஊதிப் பெருப்பிக்கத் தயாராக இல்லை. ஆனாலும், சம்பந்தன் அனுமதி பெற்றே உள்நுழைந்திருக்க வேண்டும் என்று கூறியிருந்தார் அமைச்சர் மஹிந்த சமரசிங்க.
அதன் அர்த்தம் என்னவென்றால் அனுமதி பெறாமல் முகாமுக்குள் சென்றது தவறு என்பது தான்.அரசாங்கமும் கூட, இதனை ஒரு தவறான செயலாகவே பார்க்க முனைகிறது.
ஆனால் சம்பந்தன் மீது நடவடிக்கை எடுக்கத் துணியவில்லை. அவ்வாறான ஒரு முடிவை அரசாங்கம் எடுத்திருந்தால், அது பாரதூரமான விளைவுகளை ஏற்படுத்தியிருக்கும்.வடக்கில் இன்னமும் நீடிக்கும் இராணுவ ஆட்சியின் உண்மைத் தோற்றம் உலகெங்கும் தோலுரிக்கப்பட்டிருக்கும்.
அதற்காகத் தான், அரசாங்கம் பொறுமையாக இந்த விடயத்தைக் கையாள முனைகிறது.ஆனாலும், எதிர்காலத்தில் இதுபோன்ற சம்பவங்கள் நடக்காமல் தடுக்க எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து, தேசிய பாதுகாப்புச் சபைக் கூட்டத்தில் ஆராயப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
ஏற்கனவே, வலி.கிழக்கில் உள்ள வளலாய் பகுதியில் மீளக்குடியமர அனுமதிக்கப்பட்ட பகுதியில் சம்பந்தன் சென்று பார்வையிட்டிருந்த போதும் சர்ச்சை ஏற்பட்டிருந்தது.
உயர்பாதுகாப்பு வலயத்துக்குள் அவர் எப்படி நுழையலாம் என்று கேள்விகள் எழுப்பப்பட்டன. அதற்குப் பின்னரே, முன்அனுமதி பெற்றுச் செல்லுமாறு சம்பந்தனிடம் கோரப்பட்டதாக, பாதுகாப்புச் செயலர் கருணாசேன ஹெட்டியாராச்சி தெரிவித்திருக்கிறார்.
எதிர்க்கட்சித் தலைவர் சம்பந்தனோ அல்லது, ஏனைய தமிழ் மக்களின் பிரதிநிதிகளோ, அல்லது பொதுமக்களோ, படையினரின் சொத்தாக இருக்கும் முகாம்களுக்குள் நுழைய வேண்டும் என்று எத்தனிக்கவில்லை.
அவ்வாறு நுழைவதற்கு அது ஒன்றும் வழிபாட்டுத் தலமும் அல்ல.தமது நிலங்களை ஆக்கிரமித்து நிலைகொண்டுள்ள இடங்களைப் பார்வையிடவே, தமிழ் மக்களும், அவர்களின் பிரதிநிதிகளும் முயன்றிருக்கிறார்கள்.
இடம்பெயர்ந்த மக்கள் ஏற்கனவே பலமுறை பகிரங்கமாகவே எச்சரித்திருக்கிறார்கள், தாம் வெள்ளைக்கொடியுடன் இராணுவ வேலிகளைத் தாண்டுவோம் என்று.முன்னர் அத்தகைய போராட்டங்களில் ஒன்றில், இப்போது பிரதமராக இருக்கும், ரணில் விக்ரமசிங்கவும் கலந்து கொண்டிருந்தார்.
அவ்வாறு எச்சரித்திருந்தாலும், தமிழ் மக்கள் ஒருபோதும், இராணுவ வேலிகளைத் தாண்டிச் செல்ல முயன்றதில்லை.
ஆனாலும், தமது நிலங்களை ஆக்கிரமித்திருக்கும் இராணுவத்தினரை அங்கு என்ன செய்கிறார்கள். அங்கு தமது வீடுகள் எஞ்சியிருக்கிறதா தாங்கள் நட்டு வளர்த்த தென்னையோ, மாமரமோ, வேப்பமரமோ எஞ்சியிருக்கிறதா காய்த்துக் குலுங்குகிறதா என்று பார்க்கும் ஆதங்கம், காணிகளை இழந்து போயிருக்கும் ஒவ்வொருவருக்கும் இருக்கும்.அந்த ஆதங்கத்தைப் புரிந்து கொள்ளாதவர்கள், அத்தகைய வலியை உணராதவர்கள் தான் இதையும் அரசியலாக்கியிருக்கிறார்கள்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அரசியல் நகர்வுகளை முடக்குவதற்காக தெற்கில் கையாளப்படும் ஒரு தந்திரோபாய வழிமுறையாகவும் இதனை எடுத்துக் கொள்ளலாம்.
அதாவது சமஷ்டி பற்றிய குரல்கள் தமிழர் தரப்பில் இருந்து தீவிரம் பெற்றிருக்கின்ற நிலையில் சம்பந்தனின் வாயை அடைப்பதற்காக சிங்களப் பேரினவாதிகள் இந்த விவகாரத்தை முன்னிலைப்படுத்தப் பார்க்கின்றனரோ என்றுதான் கருத வேண்டியிருக்கிறது.
நன்றி : Virakesari