அரசாங்கம் செய்யும் சிறந்த பணிகளை அரசாங்க தரப்பினர் மக்கள் மத்திக்கு கொண்டு செல்வதில்லை எனவும் இதனால், எதிர்த் தரப்பினருக்கு அரசாங்கம் செய்யாத விடயங்களை பற்றி பேச இடம் கிடைத்துள்ளதாகவும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று முற்பகல் நடைபெற்ற முன்னாள் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாசவின் 23 வது நினைவு தின நிகழ்வில் கலந்து கொண்டு பேசும் போதே ஜனாதிபதி இதனை கூறியுள்ளார்.
ஜனாதிபதி பிரேமதாசவுக்கு எதிர்க்கட்சியினருடன் சிறந்த தொடர்புகள் இருந்தன. நாம் எதிரணியினருடன் பேச்சுவார்த்தை நடத்தினால் சிலர் எம்மை குறை கூறுகின்றனர்.
எனினும் தமது தரப்பினருக்கு மரியாதை கொடுத்தது போல், எதிரான நிலைப்பாடுகளை கொண்டுள்ளவர்களுடன் பிரேமதாச பழகி வந்தார்.
நான் எமது பிரதேசத்தின் பிரச்சினை ஒன்றுக்காக ஜனாதிபதி பிரேமதாசவை அதிகாலை 4 மணிக்கு தொடர்பு கொண்டு பேசினேன்.
இளம் நாடாளுமன்ற உறுப்பினரே ஏன் என்னை தொடர்பு கொண்டீர்கள் என ஜனாதிபதி என்னிடம் கேட்டார்.நான் கூறியதை நன்றாக செவிமடுத்தார்.
இதனை வேறு யாரிடமும் கூற வேண்டாம் என்றும் என்னிடம் கேட்டுக்கொண்டார். தவறு செய்தால், அவர் தனது அபிமானிகளை கூட பாதுகாத்ததில்லை.
தவறுகளுக்கு தண்டனை வழங்கினார். அன்று மதியம் 12 மணியாகும் போது குற்றவாளிகள் கைது செய்யப்பட்டனர்.
நாடு ஒன்றின் அனைத்து அரசியல்வாதிகளை நாங்கள் இவ்வாறு நினைவுகூருகிறோமா?. உலகின் அரசியல் தலைவர்கள் தேசிய தலைவர்களாகவும் உலக தலைவர்களாகவும் மாறினர்.
முன்னாள் ஜனாதிபதி பிரேமதாச எளிய மக்களை நேசித்தார். ஜனசவிய, கம்உதாவ போன்ற வேலைத்திட்டங்கள் மூலம் சாதாரண மக்களுக்கு உதவினார்.
அரசாங்கம் செய்யும் வேலைத்திட்டங்களை மக்கள் மத்திக்கு கொண்டு செல்ல வேண்டும் என்ற நிலைப்பாட்டில் அவர் இருந்தார்.
அரசாங்கம் செய்யாத பணிகளை மக்கள் மத்திக்கு கொண்டு செல்வதில்லை எனவும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.