சட்டப்பேரவை விதி எண் 110-ன் கீழ் அறிவிக்கப்பட்ட திட்டங்கள் நிறைவேற்றப்படவில்லை என தி.மு.க. குற்றம் சாட்டி வரும் நிலையில், இதற்கு முதலமைச்சர் ஜெயலலிதா விளக்கம் அளித்து வருகிறார்.
இதுவரை 6 துறைகளில் வெளியிடப்பட்ட அறிவிப்புகளின் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து விளக்கம் அளித்த அவர் இன்று மேலும் மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்பநலத் துறை, தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை, பிற்படுத்தப்பட்டோர், மிகப் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை ஆகிய மூன்று துறைகளில் செய்த அறிவிப்புகளை நிறைவேற்றியது தொடர்பாக விளக்கம் அளித்துள்ளார்.
ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் பல துறை உயர் சிறப்பு மருத்துவமனை, புதிய அரசு மருத்துவக் கல்லூரி, தாய்-சேய் நல மையங்கள், மருத்துவத்துறைப் பணியாளர் தேர்வு வாரியம் மூலம் பணியாளர்கள் நியமனம், மருத்துவமனைகள் தரம் உயர்வு, கிராம சுகாதார செவிலியர்களுக்கு விலையில்லா மடிக்கணினிகள், மருத்துவமனை கட்டிடங்கள், தஞ்சை தமிழ் பல்கலைக் கழக கட்டிடம், இலக்கிய விருதுகள், பத்திரிகையாளர் ஓய்வூதியம் உயர்வு, பிற்படுத்தப்பட்டோர், மிகப் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை விடுதி கட்டிடங்கள், கல்வி உதவித் தொகைக்கான பெற்றோரின் ஆண்டு வருமான வரம்பு உயர்வு உள்ளிட்ட பல்வேறு பணிகளை முதல்வர் தனது அறிக்கையில் விளக்கி உள்ளார்.