இன்றைய தினம் சமூக மேம்பாட்டிற்காக தமது பங்களிப்பினை வழங்குகின்ற வேலைசெய்யும் மக்களின் தினமாகும்

ranil-prathamar-720x480-720x4802-720x480

 

 தொழிலாளர் வர்க்கத்தின் வேலைத்தளப் போராட்டத்தைப் போன்றே வாழ்க்கைப் போராட்டத்தையும் வெற்றிகொள்ள இந்த மேதினமானது புதிய உத்வேகத்தை வழங்கும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தனது மே தினச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

இன்றைய தினம் சமூக மேம்பாட்டிற்காக வியர்வை சிந்தி, ஊழியத்தை அர்ப்பணித்து தமது பங்களிப்பினை வழங்குகின்ற வேலைசெய்யும் மக்களின் தினமாகும்.

தொழிலாளர் வர்க்கத்தினர் ஒட்டுமொத்த சமூகத்துக்கும் ஆற்றும் பணிக்கு நன்றியைத் தெரிவிக்கின்ற, அவர்களது ஊழியப் பங்களிப்பினை மதிப்பீட்டுக்கு உட்படுத்துகின்ற, அதற்கு உரிய பெறுமானத்தை வழங்குகின்ற, அவர்களது நலனுக்குத் தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்ற, அதற்கான ஒழுங்கு முறையான கலந்துரையாடல்கள் ஆரம்பமாகின்ற ஒருநாளாக மேதினத்தை மாற்றிக் கொள்வது நம் அனைவரினதும் பொறுப்பாகும்.

தொழிலாளர் வர்க்கத்தினருக்காகக் குரல் கொடுக்கும் தொழிற் சங்கங்கள்,தமது அரசியல் தேவைகளைவிட வேலைசெய்யும் மக்களின் உரிமைகள் மற்றும் தேவைகளுக்கு முன்னுரிமை வழங்கி செயற்படுவது தொழிலாளர் வர்க்கத்தினதும், நாட்டினதும் நலனுக்குக் காரணமாய் அமையும். அதற்குத் தேவையான பின்புலத்தை உருவாக்கிக் கொடுப்பது அரசினது அபிலாசையாகக் காணப்படுகிறது.

தொழிலாளர் வர்க்கத்தின் வேலைத்தளப் போராட்டத்தைப் போன்றே வாழ்க்கைப் போராட்டத்தையும் வெற்றிகொள்ள இந்த மேதினமானது புதிய உத்வேகத்தை வழங்கும் என எதிர்பார்ப்பதோடு அவர்களுக்கு வெற்றிகிடைக்கட்டும் எனப் பிரார்த்திக்கிறேன் என்றும் பிரதமர் தனது செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.