சிரியாவில் அதிபர் பஷர் அல் ஆசாத்தின் அரசுப்படைக்கும் கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே கடந்த ஐந்து ஆண்டுகளாக நடந்துவந்த உள்நாட்டு போர் அமெரிக்கா, ரஷியா உள்ளிட்ட நாடுகளின் முயற்சியால் முடிவுக்கு வந்தது. அங்கு தற்போது சண்டை நிறுத்தம் அமலில் இருந்து வந்தாலும், அதையும் மீறி சில தாக்குதல் சம்பவங்கள் நடந்து வருகின்றன.
குறிப்பாக, அங்கு ஐ.எஸ். தீவிரவாதிகளின் கட்டுப்பாட்டில் உள்ள அலெப்போ நகரை மீட்கும் முயற்சியில் அரசுப்படைகள் தீவிரமாக செயல்பட்டு வருகின்றன. இதற்காக அரசுப்படைகள் நடத்தும் தாக்குதல்களில் அப்பாவி மக்களும் கொல்லப்படுகின்றனர்.
இந்த நிலையில், அங்குள்ள ஒரு ஆஸ்பத்திரி மீது நேற்று முன்தினம் அரசுப்படைகள் குண்டுவீச்சு தாக்குதல் நடத்தின. இந்த குண்டுவீச்சில் டாக்டர்கள், ஆஸ்பத்திரி காவலர்கள், குழந்தைகள் மற்றும் அவர்களுக்கு துணையாக இருந்த தாய்மார்கள் உள்பட 50 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
அந்த நகரின் பிரபல குழந்தைகள்நல மருத்துவ நிபுணரும், இந்த தாக்குதல்களில் சிக்கி பலியாகி விட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த 6 நாட்களாக அலெப்போ நகரில் நடந்துவரும் மோதல்களில், அதிபர் ஆதரவு படை நடத்திய தாக்குதல்களில் 84 அப்பாவி பொதுமக்களும், கிளர்ச்சியாளர்கள் நடத்திய தாக்குதல்களில் 49 பேரும் பலியாகி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.