அமெரிக்க துணை அதிபர் முன்னறிவிப்பு ஏதுமின்றி ஈராக்குக்கு திடீர் பயணம்!

1467D5FE-5F92-4024-9BA3-F00265AF859C_L_styvpf
முன்னறிவிப்பு ஏதுமின்றி நேற்று தனிவிமானம் மூலம் ஈராக் தலைநகரான பாக்தாத் நகரை வந்தடைந்த ஜோ பிடன், அந்நாட்டின் பிரதமர் ஹைதர் அல்-அபாடியுடன் ஈராக்கில் நிலவும் அரசியல், பொருளாதாரம் சார்ந்த நிலவரம் மற்றும் ஐ.எஸ். தீவிரவாதிகள், உள்நாட்டு போராளிகளை எதிர்கொள்ள எடுக்கப்பட வேண்டிய ராணுவ நடவடிக்கைகள் குறித்து விரிவான ஆலோசனை நடத்தினார்.

ஈராக் பிரதமர் ஹைதர் அல்-அபாடி சமீபத்தில் அந்நாட்டு ஆட்சிமுறையில் பல்வேறு சீர்திருத்தங்களை கொண்டுவர முயன்றார். அமெரிக்காவின் ஆலோசனைப்படி, மந்திரிசபையில் அரசியல் கட்சியினரின் ஆதிக்கத்தை குறைத்து கல்வியாளர்கள் மற்றும் தொழில்நுட்பவியலாளர்களை புதிய மந்திரிகளாக நியமிக்க அவர் முடிவு செய்தார்.

இந்த முடிவுக்கு பாராளுமன்ற உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். ஈராக்கில் வாழும் ஷியா பிரிவினரின் மூத்த தலைவரான மொக்தாடா அல்-சதர் என்பவர் தலைமையில் பல்லாயிரக்கணக்கான மக்கள் ஆர்ப்பாட்டங்களிலும், போராட்டங்களிலும் ஈடுபட்டு வருகின்றனர்.

இதனால், மந்திரிசபையை மாற்றி அமைக்கும் திட்டம் கிடப்பில் போடப்பட்டுள்ளது. இந்த நிலையில் ஈராக்குக்கு திடீர் பயணம் மேற்கொண்டுள்ள அமெரிக்க துணை அதிபர் ஜோ பிடனின் வருகை, ஈராக் உள்ளிட்ட வளைகுடா நாடுகளைச் சேர்ந்த அரசியல் நோக்கர்களின் புருவத்தை உயர்த்தியுள்ளது.