இலங்கையிலிருந்து கட்டார் நாட்டுக்கு தொழில் வாய்ப்புக் கருதிச் சென்ற கிழக்கு மாகாண மூன்று மாவட்டங்களையும் சேர்ந்த அல் மீஸான் சமூக நலன்புரி அமைப்பினர் கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபீஸ் நஸீர் அஹமட்டுக்கு கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளனர்.
அல் மீஸான் சமூக நலன்புரி அமைப்பின் சார்பில் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஏ.எல்.எம்.நஸீர் அக்கடிதத்தை நேற்று மாலை (12) கிழக்கு மாகாண முதலமைச்சர் காரியாலயத்தில் வழங்கி வைத்தார்.
அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்ட முக்கிய விடயங்களாவன,
நீங்கள் கிழக்கு மாகாண சபையின் முதலமைச்சர் பதவி ஏற்றதன் பின்னர் ஊடகங்களுக்கு வழங்கிய பேட்டியின்போது முன்மொழிந்த விடயங்களை தாங்கள் அறிவோம்.
அன்று ஊடகங்களுக்கு வழங்கிய செல்வியில், முக்கியமாக சொல்லப்போனால் 25 ஆயிரம் இளைஞர் யுவதிகளுக்கு தொழில் வாய்ப்பு வழங்க அதற்கான உடனடி நடவடிக்கைகளை மேற்கொள்வதாகவும், பணிப்பெண்களாக வெளிநாடு செல்வோரை தடுத்து அவர்களுக்கான சுயதொழில் வாய்ப்பை ஏற்படுத்திக்கொடுத்தல் என்பன போன்ற விடயங்களை தெரிவித்துள்ளீர்கள்.
இதையறிந்த கிழக்கு மாகாண இளைஞர், யுவதிகள் பெருமிதம் அடைந்தோம். பொதுவாக சொல்லப்போனால் வெளிநாடுகளில் தொழில் வாய்ப்புக் கருதி வந்துள்ள அனைத்து இளைஞர், யுவதிகளும் சந்தோஷம் அடைந்துள்ளார்கள் என்று கட்டார் நாட்டு அல் மீஸான் சமூக நலன்புரி அமைப்பு அறிவோம்.
மேலும், கிழக்கு மாகாணத்தின் மூன்று மாவட்டங்களின் முதல் மகன் என்ற அடிப்படையில் தங்களின் அமைப்பினால் சில முக்கிய கருத்துக்களை முன்வைக்கின்றோம்.
- கல்வி, கலாசாரம், போசாக்கு மற்றும் பொருளாதாரம் போன்றவற்றை ஊக்குவிப்பதன் மூலம் கிழக்கு மாகாணத்திலுள்ள குறைகளை நிவர்த்தி செய்யலாம்.
- ஏழை மக்களுக்கு அடிப்படை வசதிகளான குடிநீர், மின்சாரம், மலசலகூடம் போன்றவற்றை இலவசமாக பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்கவேண்டும்.
- இளைஞர்களுக்கு தொழில் வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்தல்.
- பெண்களுக்கான தொழில் வாய்ப்பை ஏற்படுத்துவதன் மூலம் தொழிலுக்காக மத்திய கிழக்கு நாடுகளுக்கு செல்வதை தடைசெய்தல்.
- கிழக்கு மாகாணத்திலுள்ள ஒவ்வொரு மாநகர சபை, நகர சபை, பிரதேச சபை போன்ற எல்லைக்குள் குறைந்தது ஒரு கைத்தொழில் பேட்டையையும், ஒரு வீட்டுத்திட்டத்தையும் உருவாக்குதல்.
என்ற வேண்டுகோளையும் விடுத்து கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபீஸ் நஸீர் அஹமட்டுக்கு அனுப்பி வைத்துள்ள கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளனர்.