க.கிஷாந்தன்
இந்திய அரசாங்கத்தின் நிதியுதவியின் கீழ் மலையக மக்களுக்காக நிர்மாணிக்கப்படவுள்ள 4000 தனி வீடமைப்பு திட்டத்திற்கான முதலாவது வேலைத்திட்டத்திற்கு அடிக்கல் நாட்டும் வைபவம் 24.04.2016 அன்று ஞாயிற்றுக்கிழமை காலை 11.30 மணியளவில் நுவரெலியா – பூண்டுலோயா டன்சினன் தோட்டத்தில் நடைபெற்றது.
மலையக புதிய கிராமங்கள் உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் சமுதாய அபிவிருத்தி அமைச்சர் பழனி திகாம்பரம் தலைமையில் இடம்பெற்ற இந்த வைபவத்தில் இலங்கைக்கான இந்தியத்தூதுவர் வை.கே.சிங்ஹா பிரதம அதிதியாக கலந்து கொண்டு 404 வீடுகளை நிர்மாணிப்பதற்காக முதல் அடிக்கல்லை நாட்டி வைத்தார்.
அத்தோடு இலங்கைக்கான கண்டி இந்திய உதவி உயர்ஸ்தானிகர் ராதா வெங்கட்ராமன் உள்ளிட்ட தேசிய சுகவாழ்வு கலந்துரையாடல் மற்றும் அரச கரும மொழிகள் அமைச்சர் மனோ கணேசன், கல்வி இராஜாங்க அமைச்சர் வே.இராதாகிருஷ்ணன், நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.திலகராஜ் ஆகியோருடன் மத்திய மாகாண சபை உறுப்பினர்களான சோ.ஸ்ரீதரன், எம்.உதயகுமார், சரஸ்வதி சிவகுரு அடங்களாக மலையக புதிய கிராமங்கள் உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் சமுதாய அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் மற்றும் மனிதவள அபிவிருத்தி நிதியத்தின் தலைவர் வீ.புத்திரசிகாமணி, அரச சார்பற்ற நிறுவனங்களின் அதிகாரிகள் என பல முக்கியஸ்தர்களும் கலந்து கொண்டு அடிக்கல்லை நாட்டி வைத்தனர்.
மலையக மக்களின் 200 வருட தொடர்வீட்டு வாழ்க்கை முறைக்கு முற்றுப்புள்ளி வைப்பதற்கும் இந்தியாவில் இருந்து கடசியாக வரவழைக்கப்பட்ட மலையக இந்திய வம்சாவளி மக்களுக்கு மாற்றத்தை ஏற்படுத்தும் வகையிலும் இந்திய நிதி உதவியின் கீழ் இந்த புதிய வீடுகள் ஏழு பேர்ச் காணியில் 50 கோடி ரூபா செலவில் நிர்மாணிக்கப்படவுள்ளமை குறிப்பிடதக்கது.