சவுதி அரேபியா நாட்டின் மின்சாரத்துறை மந்திரியை அதிரடியாக நீக்க மன்னர் உத்தரவு!

சவுதி அரேபியா நாட்டின் மின்சாரத்துறை மற்றும் நீர்வளத்துறை மந்திரியை அதிரடியாக நீக்கி மன்னர் சல்மான் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
Saudi King Salman gives a speech following the death of King Abdullah in Riyadh
சர்வதேச சந்தையில் பெட்ரோலின் விலை தொடர்ந்து கடும்சரிவைச் சந்தித்து வருவதால் எண்ணெய் வளத்தை மட்டுமே நம்பியுள்ள சவுதி அரேபியா உள்ளிட்ட வளைகுடா நாடுகள் சமீபகாலமாக பொருளாதார மந்தநிலையை சந்தித்து வருகிறது.

இதற்கிடையில், சவுதி அரேபியாவில் வாழும் மக்களின் மின்சாரத்தேவை நாளுக்குநாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இந்த தேவையை நிறைவு செய்ய கச்சா எண்ணெய்யை எரித்து மின்சாரம் தயாரிக்கப்படுவதால் அவ்வகையிலும் அந்நாடு பெரும் இழப்பை சந்தித்து வருகிறது.

இந்நிலையில், பல்வேறு பொருளாதார சிக்கனம் மற்றும் சீர்திருத்த நடவடிக்கைகளை எடுப்பது தொடர்பாக சவுதி மன்னர் முஹம்மது பின் சல்மான் தலைமையிலான நிபுணர்கள் குழு விரிவாக ஆலோசனை நடத்தியது. இதன் விளைவாக, மந்திரிசபையின் செலவினங்களில் ஒருபகுதியை குறைத்துக் கொள்ள முடிவு செய்யப்பட்டது.

இந்த முடிவின்படி, சவுதி அரேபியா நாட்டின் மின்சாரத்துறை மற்றும் நீர்வளத்துறை மந்திரி அப்துல்லா அல் ஹுசைன்-ஐ அதிரடியாக நீக்கி மன்னர் சல்மான் உத்தரவு பிறப்பித்துள்ளார். 

தற்போது அந்நாடின் வேளாண்மைத்துறை மந்திரியாக பதவி வகித்துவரும் அப்துல் ரஹ்மான் அல்-பத்லி அவருக்கு பதிலாக மின்சாரம் மற்றும் நீர்வளத்துறை மந்திரியின் பணிகளையும் கூடுதலாக கவனிப்பார் என மன்னரின் அரண்மனை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

தண்ணீர் கட்டணம் உயர்வு தொடர்பான திட்டத்தை வெற்றிகரமாக நிறைவேற்றத் தவறியதால் மந்திரி பதவியில் இருந்து அப்துல்லா அல் ஹுசைன் நீக்கப்பட்டதாக உறுதிப்படுத்த முடியாத தகவல்கள் வெளியாகியுள்ளது. கடந்த டிசம்பர் மாதம் வெளியான சவுதி பட்ஜெட்டில் பல ஆண்டுகளுக்கு பின்னர் மின்சார கட்டணம் மற்றும் பெட்ரோல் விலை உயர்த்தப்பட்டது நினைவிருக்கலாம்.