ஓய்வு பெற்றுக்கொண்ட ஜனாதிபதி ஒருவரின் பாதுகாப்பிற்காக உச்ச அளவில் 30 பாதுகாப்பு உத்தியோகத்தர்களே வழங்கப்பட முடியும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
இறுதியாக நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் இந்த தகவலை ஜனாதிபதி வெளியிட்டுள்ளார்.அவர் மேலும் கூறுகையில்,
ஓய்வு பெற்றுக் கொண்ட ஜனாதிபதி ஒருவரின் பாதுகாப்பிற்கு எத்தனை பாதுகாப்பு உத்தியோகத்தர்களை கடமையில் ஈடுபடுத்துவது என்பது குறித்து முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச உச்ச நீதிமன்றில் தீர்ப்பு ஒன்றை பெற்றுக்கொண்டுள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி ஒருவரின் பாதுகாப்பை வரையறுக்கும் வகையிலான உச்ச நீதிமன்றின் தீர்ப்பினை நான் கேட்டுப் பெறவில்லை.
முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க தமக்கு உரிய பாதுகாப்பு வழங்குமாறு உச்ச நீதிமன்றில் மனுவொன்றை தாக்கல் செய்திருந்தார்.
இதன் போது முன்னாள் ஜனாதிபதி ஒருவருக்கு வழங்கப்படக் கூடிய பாதுகாப்பு உத்தியோகத்தர்களின் உச்ச வரம்பினை நீதிமன்றம் நிர்ணயம் செய்திருந்தது.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச அரசாங்கத்தின் பாதுகாப்பினை பெற்றுக் கொண்டு தொடர்ந்தும் அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபடுவதனால், பாதுகாப்பு உத்தியோகத்தர்களின் எண்ணிக்கை தொடர்ந்து தீர்மானம் ஒன்றை எடுக்க நேரிடும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, அமைச்சர்களிடம் தெரிவித்துள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவிற்கு இராணுவத்தினர் உள்ளிட்ட நூற்றுக் கணக்கானவர்கள் தற்போது பாதுகாப்பு வழங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.