பஞ்சாப் அணியை வீழ்த்தி 3வது வெற்றியை பதிவு செய்தது ஐதராபாத் சன் ரைசஸ் அணி

CRICKET-T20-IPL-IND-HYDERABAD-PUNJAB

 

ஐ.பி.எல் தொடரில் இன்று நடைபெற்ற 18-வது லீக் போட்டியில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் மற்றும் ஐதராபாத் சன்ரசஸ் அணிகள் மோதின.

முதல் இரு ஆட்டங்களில் தோல்வி அடைந்த ஐதராபாத் அணி, அதன் பிறகு மும்பையை 7 விக்கெட் வித்தியாசத்திலும், குஜராத்தை 10 விக்கெட் வித்தியாசத்திலும் புரட்டியெடுத்தது. புள்ளி பட்டியலில் கடைசி இடத்தில் உள்ள கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி (ஒரு வெற்றி, 3 தோல்வி) வெற்றிப்பாதைக்கு திரும்ப போராடி வந்தது. 

இந்நிலையில், டாஸ் வென்ற ஐதராபாத் அணி பந்துவீச முடிவு செய்தது. இதனையடுத்து களமிறங்கிய பஞ்சாப் அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 143 ரன்கள் மட்டுமே எடுத்தது. அந்த அணியில் அதிகபட்சமாக மார்ஷ் 40 ரன்களும், பட்டேல் 36 ரன்கள் எடுத்தனர். 

இதனையடுத்து, 144 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஐதராபாத் அணியில் வார்னரும், தவானும் களமிறங்கினர். வார்னர் இந்தப் போட்டியிலும் வழக்கம் போல் அதிரடியாக விளையாடினார். அவருக்கு துணையாக தவான் நிதானமாக ரன்களை சேர்த்தார். அதிரடியாக விளையாடிய வார்னர் 23 பந்துகளில் அரைசதம் விளாசினார். 

பின்னர், 31 பந்துகளில் 59 ரன்கள் குவித்த போது வார்னர் ஆட்டமிழந்தார். வார்னர் ஆட்டமிழந்த போது, ஐதராபாத் அணி 9.5 ஓவர்களில் 90 ரன்கள் எடுத்திருந்தது. இதனால் ஐதராபாத் அணி எளிதில் வெற்றி பெறும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் டாரே முதல் பந்திலே ஆட்டமிழந்தார். நிலைத்து நின்று விளையாடிய தவான் 44 பந்துகளில் 45 ரன்கள் எடுத்த போது ஆட்டமிழந்தார். 

இறுதியில் 17.5 ஓவர்களில் 5 விக்கெட் இழந்து வெற்றியை ஐதராபாத் அணி எட்டியது. பஞ்சாப் அணியை வீழ்த்தி ஐதராபாத் அணி தொடர்ச்சியாக தனது மூன்றாவது வெற்றியை பதிவு செய்தது. 5 போட்டிகளில் விளையாடிய வார்னர் 294 ரன்கள்  குவித்து ஆரஞ்சு தொப்பியை தக்க வைத்துள்ளார்.

9 ரன்கள் மட்டும் கொடுத்து 2 விக்கெட்டை வீழ்த்திய முஸ்தபியர் ரஹ்மான் ஆட்ட நாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.