புதிய அரசியலமைப்புத் திருத்தத்தில் உள்வாங்கப்பட வேண்டிய முஸ்லிம் சமூகம் தொடர்பான பரிந்துரைகளில் முஸ்லிம் பாராளுமன்ற பிரதிநிதிகள் ஒருமித்து செயற்படுவதற்குத் தீர்மானித்துள்ளனர்.
பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் பல்வேறு கொள்கைகளையுடைய அரசியல் கட்சிகளைச் சேர்ந்த முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் கட்சி மற்றும் கொள்கை வேறுபாடுகளை மறந்து அரசியல் யாப்பு திருத்தத்திற்கு ஒருமித்த ஆலோசனை களையும், பரிந்துரைகளையும் சமர்ப்பிக்கவுள்ளனர்.
ஐக்கிய தேசியக்கட்சி, ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் ஆகிய கட்சிகளைச் சேர்ந்த முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் 21 பேரும் இரண்டு வாரகால இடைவெளிக்குள் தமது ஆலோசனைகளையும் பரிந்துரைகளையும் தேசிய ஒருமைப்பாடு மற்றும் நல்லிணக்க இராஜாங்க அமைச்சர் ஏ.எச்.எம்.பெளசியிடம் சமர்ப்பிக்குமாறு கோரப்பட்டுள்ளது.
நேற்று மாலை இராஜாங்க அமைச்சர் ஏ.எச்.எம்.பெளசியின் தலைமையில் முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் கொழும்பில் ஒன்று கூடினார்கள்.
ஒன்று கூடி புதிய அரசியலமைப்புத் திருத்தத்தில் முஸ்லிம் சமூகம் தொடர்பாக உள்வாங்கப்பட வேண்டிய விடயங்கள் மற்றும் உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பில் கலந்துரையாடினார்கள். இந்தக் கூட்டத்திலே மேற்குறிப்பிட்ட இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளது.
பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் 21 முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களில் நேற்றைய கூட்டத்தில் 12 உறுப்பினர்கள் மாத்திரமே கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்
சிரேஷ்ட அமைச்சர்களான நகரதிட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் வடிகாலமைப்பு அமைச்சர் ரவூப் ஹக்கீம், கைத்தொழில் மற்றும் வர்த்தகத்துறை அமைச்சர் றிசாத் பதியூதீன் ஆகிய இருவரும் கூட்டத்தில் கலந்து கொள்ளாமை குறிப்பிடத்தக்கதாகும். ஆனால் அவர்கள் கலந்து கொள்ளாமை பற்றி அறிவித்திருந்ததாக நிகழ்வினை ஏற்பாடு செய்திருந்த ஸ்ரீலங்கா முஸ்லிம் கவுன்ஸில் தெரிவிக்கிறது.
முஸ்லிம்களின் பாராளுமன்ற பிரதிநிதித்துவத்தில் வீழ்ச்சி ஏற்படாத வகையிலான அரசிலமைப்புத் திருத்தம் மற்றும் முஸ்லிம்களின் கல்வி, பொருளாதாரம் என்பவற்றுக்கான உத்தரவாதம், சமய உரிமைகள், முஸ்லிம் தனியார் சட்டத்திற்கான உத்தரவாதம் என்பன தொடர்பாக ஆராய்வதற்கே இந்த ஒன்று கூடல் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
எதிர்வரும் இருவார காலத்துக்குள் முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களினால் அமைச்சர் பெளசியிடம் சமர்ப்பிக்கப்படவுள்ள அரசியலமைப்பு திருத்தம் தொடர்பான பரிந்துரைகள் சமூகத்தின் துறைசார் நிபுணர்கள், புத்திஜீவிகள் சட்டவல்லுநர்கள் அடங்கிய ஒரு குழுவிடம் பரிசீலனைக்காக சமர்ப்பிக்கப்பட்டு இறுதிவரைவு தயாரிக்கப்படவுள்ளது.
முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் மேலும் பல கட்ட ஒன்று கூடல்களை நடத்தவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. நேற்றைய கூட்டத்தில் அமைச்சர்கள், பைசர் முஸ்தபா, எம்.எச்.ஏ ஹலீம், ஏ.எச்.எம்.பெளஸி, எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் அப்துல் மஹ்ரூப், முஜிபுர் ரஹ்மான், இஷாக், நவவி, அலி சாஹிர் மெளலானா, சல்மான், இம்ரான் மஹ்ரூப், மஸ்தான் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.
ஸ்ரீலங்கா முஸ்லிம் கவுன்ஸிலின் சார்பில் அதன் தலைவர் என்.எம்.அமீன் கலந்து கொண்டிருந்தார்.