இன்று துவங்குகின்றது – IPL 2015

pepsi-ipl-2015

 

உலக விளையாட்டின் தலைநகரமாக இந்தியா உருவெடுக்க அச்சாரம் போட்டது ஐ.பி.எல்., தான். இதன் ‘மெகா’ வெற்றியை பார்த்து ஐ.எஸ்.எல்., கால்பந்து, உலக கபடி லீக், டென்னிஸ் லீக், பாட்மின்டன் லீக் என புற்றீசல் போல உள்ளூர் போட்டிகள் துவங்கப்பட்டன. இதில், சர்வதேச நட்சத்திரங்களும் பங்கேற்க, சுவாரஸ்யம் அதிகரித்தது.
இப்படி இந்திய விளையாட்டில் புரட்சி ஏற்படுத்திய ஐ.பி.எல்., திருவிழா 8வது ஆண்டில் அடி எடுத்து வைக்கிறது. இம்முறையும் வழக்கம் போல வீரர்களின் வாணவேடிக்கை, நடன மங்கைகளின் ஆட்டம், பாலிவுட் நட்சத்திரங்களின் பரவசம், ரசிகர்களின் துள்ளல் என ஒரு மசாலா கிரிக்கெட்டை உற்சாகமாக கண்டு களிக்கலாம்.
சர்ச்சை அதிகம்:
இந்திய கிரிக்கெட் போர்டு (பி.சி.சி.ஐ.,) சார்பில் இந்தியன் பிரிமியர் லீக் (ஐ.பி.எல்.,) ‘டுவென்டி-20’ தொடர் 2008ல் துவங்கப்பட்டது. ஒவ்வொரு ஆண்டும் ஏதாவது ஒரு பிரச்னை வெடிக்கும். இதன் உச்சக்கட்டமாக ஆறாவது தொடரில் ராஜஸ்தான் அணியின் ஸ்ரீசாந்த், சண்டிலா உள்ளிட்டோர் ‘ஸ்பாட்-பிக்சிங்கில்’ ஈடுபட்டது அம்பலமானது. சென்னை அணியின் சீனிவாசன், அவரது மருமகன் குருநாத் மெய்யப்பனும் சூதாட்ட புயலில் சிக்கினர்.
இது போன்ற சர்ச்சைகளை கடந்து 7வது தொடர் வெற்றிகரமாக நடந்தது. தற்போது 8வது தொடர் இன்று ஆரம்பமாகிறது.
யுவராஜ் ‘டாப்’:
ஐ.பி.எல்., அரங்கில் கோடிகள் சர்வ சாதாரணமாக புழங்கும். இத்தொடரில் சாம்பியன் பட்டம் வெல்லும் அணிக்கு பரிசாக ரூ. 15 கோடி தான் கிடைக்கும். ஆனால், வீரர்களுக்கான ஏலத்தில் யுவராஜ் சிங்கை ரூ. 16 கோடி கொடுத்து டில்லி அணி வாங்கியது. முதல் தர போட்டிகளில் கூட பங்கேற்காத 20 வயதான ‘ஸ்பின்னர்’ கரியப்பாவை ரூ. 2.40 கோடிக்கு கோல்கட்டா அணி ஒப்பந்தம் செய்தது. இத்தகைய வேடிக்கை…வினோதங்களை ஐ.பி.எல்., தொடரில் மட்டுமே காண முடியும்.
‘மினி’ இந்தியா:
சமீபத்திய ஏலத்தில் முன்னணி வீரர்கள் அணி மாறியதால், இம்முறை எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. சாம்பியன் பட்டம் வெல்லக்கூடிய அணிகளின் வரிசையில் சென்னை கிங்ஸ் முன்னிலை வகிக்கிறது. இதற்கு ‘பினிஷிங்’ திறன் படைத்த கேப்டன் தோனி, ‘புது மாப்ளே’ ரெய்னா, ‘சுழல்’ நாயகன் அஷ்வின், ‘ஆல்-ரவுண்டர்’ ரவிந்திர ஜடேஜா, ‘புதிய புயல்’ மோகித் சர்மா என இந்திய அணியின் பெரும்பாலான வீரர்கள் இருப்பது பலம். டுவைன் ஸ்மித், பிரண்டன் மெக்கலம், பிராவோ, டுபிளசி போன்ற நட்சத்திரங்களும் உள்ளனர். கடந்த முறை ஏமாற்றிய சென்னை அணி, தற்போது சாதிக்க வாய்ப்பு உள்ளது.
கோல்கட்டா நம்பிக்கை:
‘நடப்பு சாம்பியனாக’ களமிறங்கும் பாலிவுட் நடிகர் ஷாருக்கானின் கோல்கட்டா நைட் ரைடர்ஸ் அணிக்கு கேப்டன் காம்பிர் தான் ஊக்க சக்தி. ‘சுழல் மாயாவி’ சுனில் நரைன் பவுலிங் பிரச்னையில் இருந்து மீண்டது நல்ல விஷயம். உத்தப்பா, உமேஷ் யாதவ், யூசுப் பதான், ரசல் போன்ற சர்வதேச அந்தஸ்து பெற்ற வீரர்கள் இருப்பதால், பட்டத்தை தக்க வைக்கும் நம்பிக்கையுடன் உள்ளது. அனுபவ காலிஸ் அணியின் ‘பேட்டிங்’ ஆலோசகராக செயல்பட உள்ளார்.
பலே பஞ்சாப்:
கடந்த முறை பைனல் வரை முன்னேறிய பாலிவுட் நடிகை பிரித்தி ஜிந்தாவின் பஞ்சாப் கிங்ஸ் லெவன் அணி மீண்டும் பட்டையை கிளப்பலாம். கேப்டன் ஜார்ஜ் பெய்லி, ‘அதிரடி’ சேவக், மேக்ஸ்வெல், மில்லர், முரளி விஜய் இருப்பதால், அசுர பலத்துடன் காட்சி அளிக்கிறது. பந்துவீச்சில் ஜான்சன் மிரட்டலாம்.
சாதனைக்கு ரோகித்:
ஒருநாள் போட்டிகளில் இரண்டு முறை இரட்டை சதம் கடந்த கேப்டன் ரோகித் சர்மா தான் மும்பை அணிக்கு பெரும் பலம். போலார்டு, கோரி ஆண்டர்சன், பின்ச் வலு சேர்க்கின்றனர். பவுலிங்கில் அசத்த மலிங்கா, ஹர்பஜன், பிரக்யான் ஓஜா உள்ளனர். ஆலோசகராக சச்சின் இருப்பது கூடுதல் பலம்.
ராஜஸ்தான் அணிக்கு கேப்டன் வாட்சன், ஸ்டீவ் ஸ்மித், சஞ்சு சாம்சன், ஸ்டூவர்ட் பின்னி, சவுத்தீ, பால்க்னர் கைகொடுக்கலாம். ஐதராபாத் அணிக்கு கேப்டன் வார்னர், ஷிகர் தவான், இஷாந்த், கரண் சர்மாவுடன் ‘வேகப்புயல்’ ஸ்டைன் இருப்பது கூடுதல் நம்பிக்கை தான்.
கெய்ல் ‘புயல்’:
விராத் கோஹ்லி தலைமையிலான பெங்களூரு அணியில் சர்வதேச நட்சத்திரங்கள் நிறைய பேர் உள்ளனர். அதிரடிக்கு கெய்ல், டிவிலியர்ஸ், டேரன் சமி மற்றும் ‘வேகத்துக்கு’ ஸ்டார்க், ஆரோன், டிண்டா இருக்கின்றனர். ரூ. 10.5 கோடிக்கு வாங்கப்பட்ட தினேஷ் கார்த்திக் தனது தேர்வை நியாயப்படுத்தலாம்.
டில்லி எதிர்பார்ப்பு:
யுவராஜ் சிங் மீது அதிக முதலீடு செய்துள்ள டில்லி அணிக்கு கேப்டன் டுமினி, அன்ஜெலோ மெதியூஸ், முகமது ஷமி, மனோஜ் திவாரி நம்பிக்கை தருகின்றனர். ஜாகிர் கான் வரவு புது தெம்பை கொடுத்துள்ளது. இப்படி 8 அணிகளும் சமபலத்தில் இருப்பதால், சாம்பியன் பட்டம் வெல்ல கடும் போராட்டத்தை வெளிப்படுத்தலாம். சமீபத்திய உலக கோப்பை தொடரில் ஏமாற்றியவர்கள் ஐ.பி.எல்., போட்டிகளில் பரிகாரம் தேட இருப்பதால், ரசிகர்களுக்கு ‘சூப்பர்’ கிரிக்கெட் விருந்து காத்திருக்கிறது.