இந்திய அணி கேப்டன் தோனி, ‘நம்பர் பிளேட்’ இல்லாமல் பைக் ஓட்டியதால், ரூ.500 அபராதம் விதிக்கப்பட்டது.
இந்திய அணியின் வெற்றிக்கேப்டன் தோனி, 33. பைக் ஓட்டுவதில் பிரியம் அதிகம். கடந்த 6ம் தேதி, சொந்த ஊரான ராஞ்சியில் ‘புல்லட்டில்’ ஜாலியாக வலம் வந்தார். பொதுவாக, இரு சக்கர வாகனத்தின் இரு புறங்களிலும், பார்வைக்கு தெரியும்படி ‘நம்பர் பிளேட்’ இருக்க வேண்டும். ஆனால், தோனி ஓட்டிய புல்லட்டில், முன்புறம் உள்ள ‘மட்கார்டில்’ நம்பர் (எம்.எச்.பி. 6518) எழுதப்பட்டிருந்தது. இது போக்குவரத்து விதிமுறை மீறலாகும். இதனால், தோனிக்கு ரூ. 500 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து, ராஞ்சி போக்குவரத்து காவல்துறை உயரதிகாரி கார்த்திக் கூறியது: தோனி ‘புல்லட்’ ஓட்டிய புகைப்படம், பத்திரிகைகளில் வெளியானது. இதில், ‘நம்பர் பிளேட்’ இல்லாதது, தெரியவந்தது. விதிமுறை மீறியதால், ரூ.500 அபராதம் விதித்தோம். இதற்கான ரசீதை, தோனியின் வீட்டிற்கு அனுப்பி, அபராதத்தை வசூலித்தோம், போக்குவரத்து விதிமுறை தெரியாததால், தவறு நடந்துவிட்டதாக, தோனியின் குடும்பத்தினர் தெரிவித்தனர். இவ்வாறு கார்த்திக் தெரிவித்தார்.