அழைப்பில்லாமல் திருமண வீட்டிற்கு செல்வது முறையல்ல. எனவே எதிர்வரும் மே தினத்தில் கூட்டு எதிர்க் கட்சியின் அழைப்பை ஏற்று கொழும்பில் இடம்பெறும் மே தின கூட்டத்தில் கலந்து கொள்ளவுள்ளதாக முன்னாள் ஜனாதிபதியும் தற்போதைய எம்.பி. யுமான மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.
சர்வதேச தொழிலாளர் தினம் என்பது கட்சி பேதங்களுக்கு அப்பாற்பட்ட விடயமாகும். எனவே இந்த கட்சி மே தின கூட்டத்தில் தான் கலந்துக் கொள்ள வேண்டும் என யாரும் கட்டளையிட முடியாது. உழைக்கும் மக்களின் உரிமைகளை பாதுகாப்பதற்காக சவால்களை எதிர்கொண்டு போராடுவோம் எனவும் முன்னாள் ஜனாதிபதி குறிப்பிட்டார்.
சித்திரப் புத்தாண்டை முன்னிட்டு பத்தரமுல்லையில் அமைந்துள்ள முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் அலுவலகத்தில் பால் பொங்கும் நிகழ்வு இடம்பெற்றது. இதில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே முன்னாள் ஜனாதிபதி மேற்கண்டவாறு கூறினார்.
அவர் அங்கு தொடர்ந்தும் உரையாற்றுகையில் , இலங்கையின் உள் நாட்டு யுத்தத்தை முடிவிற்கு கொண்டு வந்து , நாட்டை அபிவிருத்தி பாதையில் முன்னெடுத்திருந்தோம்.
மிகவும் எளிதாக உண்ண கூடிய வகையில் “கேக்” தயாரித்திருந்தோம். ஆனால் தற்போதைய அரசாங்கம் திடீரென ஆட்சிக்கு வந்து அனைத்தையும் சீரழித்து விட்டது.
நாட்டின் பொருளாதாரம் மிகவும் மிகவும் மோசமான நிலையில் காணப்படுகின்றது. நாட்டு மக்கள் எவ்வாறு புத்தாண்டை கொண்டாடினார்கள் என்பது அனைவருக்கும் தெரியும்.
கொழும்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள கூட்டு எதிர் கட்சியின் மே தின கூட்டத்திற்கு எனக்கு அழைப்பு கிடைத்துள்ளது.
காலியில் நடைபெறவுள்ள மே தின கூட்டம் தொடர்பில் எமக்கு எவ்விதமான அழைப்போ அல்லது அறிவிப்போ கிடைக்கப்பெற வில்லை என்றார்.