பனாமா – உண்மையான மோசடியாளர்களுக்கு உரிய தண்டனை வழங்கப்பட வேண்டும்

panama

 

 பனாமா மோசேக் பொன்சேகா நிறுவனத்தின் இரகசிய ஆவணங்களில் உள்ள இலங்கையர்கள் தொடர்பிலான தகவல்களை வெளியிட அரசாங்கம் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை என கூட்டு எதிர்க்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரான ரஞ்சித் சொய்சா தெரிவித்துள்ளார்.

உண்மையான மோசடியாளர்களுக்கு உரிய தண்டனை வழங்கப்பட வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

ராஜபக்ஸ குடும்பத்தினரின் சொத்து விபரங்களை வெளியிடப் போவதாக கூறி வந்த தற்போதைய அரசாங்கத்தினருக்கு பனாமா சம்பவம் எறிந்தவரிடமே திரும்பி வரும் எறிகணை போல் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

அது அமைச்சர் சம்பிக்க ரணவக்கவின் அமைச்சுக்குள் அந்த எறிகணை சூழன்றுள்ளது எனவும் ரஞ்சித் சொய்சா கூறியுள்ளார்.

பனாமா இரகசிய ஆவணங்களில் இலங்கையர்கள் சிலரின் பெயர்கள் இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருந்தன. இந்த மோசடியை அடிப்படையாக கொண்டு எதிர்வரும் காலத்தில் கடுமையாக குரல் எழுப்ப போவதாகவும் கூட்டு எதிர்க்கட்சியினர் தெரிவித்துள்ளனர்.

எவ்வாறாயினும், 2004 ஆம் ஆண்டு முதல் 2014 ஆம் ஆண்டு வரையான காலத்தில் பெருந்தொகையான கறுப்பு பணம் வெளிநாடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டிருப்பதாக அமெரிக்க நிறுவனம் ஒன்று அண்மையில் தகவல் வெளியிட்டிருந்தது.

மூன்று ரில்லியன் அமெரிக்க டொலர் பணம் இவ்வாறு இலங்கையில் இருந்து சட்டவிரோதமான முறையில் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் அதில் கூறப்பட்டிருந்தது.

இலங்கை கறுப்பு பணம் இலங்கையில் அனுப்பி வைக்கப்பட்ட குறித்த காலப் பகுதியில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அரசாங்கமே ஆட்சியில் இருந்தது.

அத்துடன், கடந்த அரசாங்கத்தின் போது நாட்டில் முன்னெடுக்கப்பட்ட பாரிய அபிவிருத்தித் திட்டங்களில் அரசாங்க தரப்பினர் பெருமளவில் தரகு பணம் பெற்றுள்ளதாகவும் குற்றம் சுமத்தப்படுகிறது.