அன்னைக்கு அடுத்தபடியாக அன்புக்கும், அரவணைப்புக்கு எடுத்துக் காட்டாக விளங்குகின்ற தாதியர்களை நன்றி உள்ள ஒவ்வொரு மானுடர்களும் நினைத்துப் பார்க்கின்ற நன்னாள் : அமைச்சர் ஹசன் அலி

காணிப் பிரச்சினைக்கு விசாரணை செய்ய விசேட செயலணி -அமைச்சர் ஹசனலியிடம் பிரதமர் ரணில் இணக்கம்

நாட்டில் குறிப்பாக வடக்கு , கிழக்கு மாகாணங்களில்  கடமையாற்றுகின்ற மருத்துவ தாதியர்கள் எதிர்கொண்டு உள்ள பிரச்சினைகளை தீர்த்து வைக்க அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வருகின்றார் என்று தெரிவித்து உள்ளார் சுகாதார மற்றும் சுதேச வைத்திய துறை இராஜாங்க அமைச்சர் ஹசன் அலி.

சர்வதேச தாதியர் தினத்தை முன்னிட்டு வெளியிட்ட அறிக்கையிலேயே இவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டு உள்ளார்.

இவரின் அறிக்கை வருமாறு:-

“ இன்று சர்வதேச தாதியர் தினம். அன்னைக்கு அடுத்தபடியாக அன்புக்கும், அரவணைப்புக்கு எடுத்துக் காட்டாக விளங்குகின்ற தாதியர்களை நன்றி உள்ள ஒவ்வொரு மானுடர்களும் நினைத்துப் பார்க்கின்ற நன்னாள்.

அப்பொழுது மின்சாரம் கண்டு பிடிக்கப்பட்டு இருக்கவில்லை. வீரர்கள் போரில் காயப்பட்டு உயிருக்காக போராடிக் கொண்டு இருந்தனர். இந்நிலையில் இரவுகளில் விளக்குகளை கைகளில் ஏந்தி நோயாளிகளை அன்புடனும், அரவணைப்புடனும் பராமரித்தவர் புளோரன்ஸ் நைற்றிங் கேல் அம்மையார்.  இதனாலேயே இவர் விளக்கேந்திய பெருமாட்டி என்றும் கைவிளக்கு ஏந்திய காரிகை என்றும் போற்றப்படுகின்றார். இவரே தாதியர்களுக்கான பயிற்சிக் கல்லூரியை முதன்முதல் ஆரம்பித்தவரும் ஆவார்.

இவற்றால்தான் இவரின் பிறந்த தினமான மே 12 ஆம் திகதியை 1965 ஆம் ஆண்டு முதல் முழு உலகமுமே தாதியர் தினமாக கொண்டாடி வருகின்றது. ஒவ்வொரு தாதியர்களும் நைற்றிங்கேல் அம்மையாரின் மறுவடிவங்களாக பார்க்கப்படுகின்றார்கள். இவர்களின் தன்னலம் அற்ற சேவை பொன் எழுத்துக்களால் பொறிக்கப்பட்டு வருகின்றது.

எமது அமைச்சும் தாதியர்களை நன்றியுடன் நினைத்துப் பார்க்கின்றமையில் பெருமை, புளகாங்கிதம் அடைகின்றது. யுத்த காலத்தில் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் தாதிகள் ஆற்றிய சேவையின் மகத்துவத்தை நான் நன்கு அறிவேன்.

வளர்முக நாடுகளில் ஒன்றான எமது தேசத்தில் தாதியர்களுக்கு உள்ள பிரச்சினைகள் ஏராளம். குறிப்பாக வடக்கு, கிழக்கு மாகாணங்களில் கடமையாற்றுகின்ற தாதியர்கள் எதிர்கொண்டு வருகின்ற பிரச்சினைகள் அநேகம். இராஜாங்க அமைச்சர் என்கிற வகையில் இவர்களின் பிரச்சினைகளை தீர்த்து வைக்க பற்றுறுதியுடன் செயற்பட்டு வருகின்றேன் என்பதை பெருமையுடன் தெரிவித்துக் கொள்கின்றேன். மேன்மை தங்கிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களும், கௌரவ அமைச்சர் வைத்திய கலாநிதி ராஜித சேனாரட்ண அவர்களும் எனது சேவைகளுக்கு உறுதுணைகளாக அமையப் பெற்று உள்ளார்கள் என்பதையும் இவ்விடத்தில் தெரிவித்துக் கொள்கின்றேன்.

தரமான தாதியர் சேவையை உறுதிப்படுத்துகின்ற தேசிய நிகழ்ச்சித் திட்டங்களை நாம் முடுக்கி விட்டு உள்ளோம். குறிப்பாக தாதியர் பயிற்சிக் கல்லூரிகள் பல்கலைக்கழங்களாக எதிர்காலத்தில் தரம் உயர்த்தப்படும். நாடு பூராவும் உள்ள வைத்தியசாலைகளில் நிலவக் கூடிய தாதியர் பற்றாக்குறைக்கும் இதன் மூலம் தீர்வு காணப்படும்.

இதே நேரம் இவர்களுக்கு சிறந்த வாழ்வாதாரத்தை ஏற்படுத்தக் கூடிய வழி வகைகள் குறித்தும் ஆராய்ந்து வருகின்றோம். ”