பிரதி அமைச்சர் ஹரீஸின் தலையீட்டால் பொத்துவில் பிரதேச செயலாளரின் இடமாற்றம் ரத்து

ஹாசிப் யாஸீன்

 

harees slmc

பொத்துவில் பிரதேச செயலாளரின் இடமாற்றம் பிரதி அமைச்சர் ஹரீஸின் தலையீட்டால் ரத்து செய்யப்பட்டுள்ளதாக விளையாட்டுத்துறை பிரதி அமைச்சரின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

பொத்துவில் பிரதேச செயலாளராக கடமையாற்றிய அவ்வூரைச் சேர்ந்த என்.எம்.எம்.முஸர்ரத் திடீரென அம்பாறை கச்சேரிக்கு கடந்த வாரம் இடமாற்றப்பட்டிருந்தார்.

இவ்விடமாற்றத்தினை ரத்து செய்யுமாறு பொத்துவில் உலமா சபையினர், பள்ளிவாசல் நிர்வாகத்தினர், கட்சிப் பிரமுகர்கள், புத்திஜீவிகள் மற்றும்; பொதுமக்கள் ஆகியோர் விளையாட்டுத்துறை பிரதி அமைச்சர் ஹரீஸிடம் கோரிக்கை விடுத்திருந்தனர்.

இக்கோரிக்கையை ஏற்று பிரதி அமைச்சர் ஹரீஸ், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசியத் தலைவரும், நரக திட்டமிடல், தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு அமைச்சருமான ரவூப் ஹக்கீம் மற்றும் அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர் துசித பீ.வணிக சிங்க ஆகியோரின் கவனத்திற்கு இவ்விடமாற்றம் சம்பந்தமாக கொண்டு வந்திருந்தார்.

இதனையெடுத்து பிரதி அமைச்சர் ஹரீஸ் மற்றும் அமைச்சர் ரவூப் ஹக்கீம் ஆகியோர் பொதுநிர்வாக உள்நாட்டலுவல்கள் அமைச்சர் வஜிர அபேவர்தனவை இவ்விடமாற்றம் சம்பந்தமாக அவரது அமைச்சில் நேற்று சந்தித்தனர். 

இதன்போது பொத்துவில் பிரதேச செயலாளர் அரசியல் வேறுபாடுகளுக்கு அப்பால் பொத்துவில் பிரதேச மக்களுக்கு சேவையாற்றி வருகிறார். இவர் பொத்துவில் பிரதேசத்தை சேர்ந்த ஒரே ஒரு நிர்வாக சேவை அதிகாரியாகும். இவரின் சேவையினை அப்பிரதேச மக்கள் தொடர்ந்தும் எதிர்பார்க்கின்றனர். இவ்வாறான நிலையில் பொத்துவில் பிரதேச செயலாளருக்கு மேற்கொள்ளப்பட்ட இத்திடீர் இவ்விடமாற்றத்தினை பொத்துவில் உலமா சபையினர், பள்ளிவாசல் நிர்வாகத்தினர், புத்திஜீவிகள் மற்றும் பொதுமக்கள் ஆகியோர் எதிர்ப்பதுடன் இதனை ரத்து செய்து தருமாறு கோரிக்கையும் விடுத்துள்ளனர் என அமைச்சர் வஜிர அபேவர்தனவின் கவனத்திற்கு கொண்டு வந்தனர்.

இதனை தொடர்ந்து அமைச்சர் வஜிர அபேவர்தன பொத்துவில் பிரதேச செயலாளரின் இடமாற்றத்தினை உடன் ரத்து செய்யுமாறு அமைச்சின் செயலாளருக்கு உத்தரவு பிரப்பித்து இவ்விடமாற்றம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக ஊடகப் பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.

பொத்துவில் பிரதேச செயலாளரின் இடமாற்றத்தை ரத்து செய்தமைக்கு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசியத் தலைவரும், நரக திட்டமிடல், தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு அமைச்சருமான ரவூப் ஹக்கீம் மற்றும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித் தலைவரும் பிரதி அமைச்சருமான சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸ் ஆகியோருக்கு பொத்துவில் பிரதேச உலமா சபையினர், பள்ளிவாசல் நிர்வாகத்தினர், கட்சியின் முக்கியஸ்தர்கள், புத்திஜீவிகள் மற்றும் பொதுமக்கள் ஆகியோர் நன்றிகளைத் தெரிவித்துள்ளனர்.