சென்னை தீவுத்திடலில் பிரச்சாரத்தை தொடங்கினார் முதலமைச்சர் ஜெயலலிதா

jaya_310147f

 

தமிழக சட்டமன்ற தேர்தல் அடுத்த மாதம் (மே) 16-ந் தேதி நடைபெறவுள்ள நிலையில், ஆளும் கட்சியான அ.தி.மு.க. கடந்த 4-ந் தேதி வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது. தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளில் 227 தொகுதிகளில் அ.தி.மு.க.வும், 7 தொகுதிகளில் அதன் கூட்டணி கட்சிகளும் போட்டியிடுகின்றன. முதலமைச்சர் ஜெயலலிதா ஆர்.கே.நகர் தொகுதியில் மீண்டும் போட்டியிடுகிறார்.

வேட்பாளர் பட்டியலை வெளியிட்ட அன்றே, தனது சூறாவளி பிரச்சார பயண திட்டத்தையும் அ.தி.மு.க. பொதுச் செயலாளரும், முதல்-அமைச்சருமான ஜெயலலிதா அறிவித்தார். தமிழகத்தில் 14 நாட்களும், புதுச்சேரியில் ஒரு நாளும் அ.தி.மு.க. வேட்பாளர்களை ஆதரித்து அவர் பிரசாரம் மேற்கொள்கிறார்.

அதன்படி, சென்னை தீவுத்திடலில் இன்று நடைபெற்ற பிரமாண்ட பொதுக்கூட்டத்தில் பங்கேற்று தனது சூறாவளி பிரசாரத்தை முதல்-அமைச்சர் ஜெயலலிதா தொடங்கினார். அப்போது பேசிய அவர், பெரம்பூர், கொளத்தூர், வில்லிவாக்கம், திரு.வி.க.நகர், எழும்பூர், ராயபுரம், துறைமுகம், சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி, ஆயிரம்விளக்கு, அண்ணாநகர், விருகம்பாக்கம், சைதாப்பேட்டை, தியாகராயநகர், மைலாப்பூர், வேளச்சேரி, சோழிங்கநல்லூர், ஆலந்தூர், மதுரவாயல், மாதவரம், திருவொற்றியூர் ஆகிய தொகுதிகளில் போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளர்களுக்கு இரட்டை இலை சின்னத்தில் வாக்களிக்கும்படி வாக்காளர்களை கேட்டுக்கொண்டார்.

மேலும், அ.தி.மு.க. அரசு கடந்த ஐந்தாண்டுகளில் செயல்படுத்திய மக்கள் நலத்திட்டங்கள் குறித்து விளக்கிய அவர், தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றியிருப்பதாகவும் கூறினார். அடுத்து ஆட்சிக்கு வந்ததும் மேலும் பல திட்டங்களை செயல்படுத்துவதாகவும் வாக்குறுதி அளித்தார்.

பொதுக்கூட்டத்தில் முதல்-அமைச்சர் ஜெயலலிதா பேசும் காட்சிகள், சென்னையில் உள்ள 21 தொகுதிகளிலும் பிரச்சார வாகனங்களில் உள்ள பிரமாண்ட திரை மூலம் மக்கள் மத்தியில் நேரடியாக ஒளிபரப்பப்பட்டது.