மஹிந்த ராஜபக்ஸ உட்பட சகலரும் மே தினக் கூட்டத்தில் கலந்து கொள்ள வேண்டும் : துமிந்த

dumintha thumintha

 

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஏற்பாடு செய்யும் மே தினக் கூட்டத்தில் கலந்து கொள்ளாது, வேறு கட்சிகள் மற்றும் அணிகள் ஒழுங்கு செய்யும் கூட்டங்களில் கலந்து கொள்ளும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு எதிராக கடும் ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் செயற்பாட்டாளர்கள், தொகுதி அமைப்பாளர்கள் உட்பட அனைவருக்கு எதிராகவும் இந்த நடவடிக்கை எடுக்கப்படும் என கட்சியின் செயலாளர் அமைச்சர் துமிந்த திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை பாதுகாப்பதற்காகவே இந்த நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

கட்சிக்குள் இருந்து கொண்டு நினைத்தாற் போல் நடந்து கொள்ள கட்சியை சேர்ந்த எவருக்கும் எதிர்காலத்தில் இடமளிக்கப்படமாட்டாது.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தற்போதைய தலைவர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் மே தினக் கூட்டத்தை நடத்த சகல ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருகின்றன.

இவ்வாறான பின்னணியில் கட்சியை சேர்ந்த சிலர் சீர்குலைக்கும் வகையில் வேறு மே தினக் கூட்டத்தில் கலந்து கொள்ள திட்டமிட்டு வருவதாக கட்சிக்கு தகவல் கிடைத்துள்ளது.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ உட்பட சகலரும் மே தினக் கூட்டத்தில் கலந்து கொள்ள வேண்டும் எனவும், நியாயமான காரணத்தை தெரிவிக்காது, கூட்டத்தில் கலந்துகொள்ளாதவர்களுக்கு எதிராக தகுதி தராதரம் பாராது கட்சியின் யாப்புக்கு அமைய தண்டனை வழங்கப்படும் எனவும் துமிந்த திஸாநாயக்க குறிப்பிட்டுள்ளார்.