இந்தியாவில் ஏப்ரல் 10 முதல் 17-ம் தேதிவரை அரசு விருந்தினராக தங்கும் வில்லியம்-கேத் தம்பதியர் நாட்டிலுள்ள பல்வேறு முக்கிய இடங்களையும் சுற்றிப் பார்க்கின்றனர். இந்த பயணத்தின்போது தங்களின் குழந்தைகளை அவர்கள் அழைத்து வரப்போவதில்லை என தெரிகிறது.
நாளை (10-ம் தேதி) மும்பைக்கு வரும் இளவரசர் வில்லியம் – கேத் மிடில்டன் ஆகியோருக்கு பாலிவுட் பிரபலங்கள் மற்றும் மும்பை டப்பாவாலாக்கள் சார்பில் பிரமாண்ட வரவேற்பு அளிக்கப்படுகிறது.
பாலிவுட் பிரபலங்கள் சார்பில் அளிக்கபடும் வரவேற்பு விழாவில் நடிகர்கள் ஷாருக் கான், ஆமிர் கான், ரிச்ஷி கபூர், ஹ்ரித்திக் ரோஷன், பர்ஹான் அக்தர், நடிகை ஐஸ்வர்யா ராய் பச்சன், ஓய்வுபெற்ற கிரிக்கெட் வீரர் சச்சின் தெண்டுல்கர் உள்ளிட்ட பல்துறை பிரபலங்கள் பங்கேற்கின்றனர். இந்த விழாவின்போது தனது நடிப்பில் சமீபத்தில் வெளியாகவுள்ள ‘ஃபேன்’ திரைப்படத்தை பிரத்யேகமாக திரையிட்டு காண்பிக்க தேவையான ஏற்பாடுகளை ஷாருக் கான் செய்து வருகிறார். வில்லியம்-கேத் தம்பதியர் இந்தப் படத்தை பார்ப்பார்களா? என்பது உறுதியாக தெரியவில்லை.
இந்நிலையில், மும்பையில் பணிக்கு செல்லும் அரசு அலுவலர்கள் மற்றும் வியாபாரிகளுக்கு மதிய உணவுகளை எடுத்துச் செல்லும் ‘டப்பா வாலா’க்களும் வில்லியம்-கேத் தம்பதியருக்கு சிறப்பான வரவேற்பு அளித்து, நெகிழ்ச்சியில் ஆழ்த்த ஏற்பாடு செய்து வருகின்றனர்.
டயானாவின் மறைவுக்கு பின்னர் கமிலா பார்க்கட் என்பவரை இங்கிலாந்து இளவரசர் சார்லஸ் கடந்த 2005-ம் ஆண்டு இரண்டாவது மனைவியாக திருமணம் செய்து கொண்டார். இந்த திருமணத்துக்கு வருமாறு மும்பையில் வாழும் மிகவும் தாழ்ந்தப் பிரிவு உழைக்கும் வர்க்கத்தினரான ‘டப்பாவாலாக்கள்’ சங்கத்தைச் சேர்ந்த இரு பிரதிநிதிகளுக்கு பிர்ட்டிஷ் அரசு சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.
இதையேற்று, அந்த திருமணத்துக்கு சென்ற அவர்களுக்கு லண்டன் நகரில் தடபுடலான விருந்தும், தேவையான வசதிகளுன் செய்து தரப்பட்டன. பிரிட்டிஷ் அரசக் குடும்பத்தினர் தங்களுக்கு அளித்த விருந்தோம்பல் மற்றும் உபசரிப்புக்கு தங்களது நன்றிக்கடனை திருப்பி செலுத்த முடிவு செய்துள்ள மும்பை ‘டப்பாவாலாக்கள்’ வில்லியம்-கேத் தம்பதியருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்க தீர்மானித்துள்ளனர்.
அவர்களுக்கு நினைவுப்பரிசும் அளிக்க ’டப்பாவாலாக்கள்’ விருப்பம் தெரிவித்து இதற்காக மும்பையில் உள்ள பிரிட்டிஷ் தூதரகத்திடம் அனுமதி கோரியுள்ளனர். நாளைக்குள் அனுமதி கிடைக்காவிட்டால், பிரிட்டிஷ் தூதரக அதிகாரிகள் மூலமாக வில்லியம்-கேத் தம்பதியருக்கு தங்களது நினைவுப்பரிசை அனுப்பிவைக்க அவர்கள் முடிவு செய்துள்ளனர்.