தலைவர் ரவூப் ஹக்கீமுக்கு எதிராக எத்தகைய சதி நடவடிக்கைகளிலும் நான் ஈடுபடவில்லை. இதனை சத்தியம் செய்து கூறுகின்றேன். அபாண்டப் பழிகளும் விஷமத்தனமான பிரசாரங்களும் கவலையளிக்கின்றன என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் செயலாளர் நாயகமும் முன்னாள் இராஜாங்க அமைச்சருமான எம்.ரி.ஹஸன் அலி கூறினார்.
நிந்தவூர்ப் பகுதியைச் சேர்ந்த முஸ்லிம் காங்கிரஸ் மத்திய குழு உறுப்பினர்கள் மற்றும் ஆதரவாளர்கள் மத்தியில் உரையாற் றும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
முஸ்லிம் காங்கிரஸ் கட்சிக்குள் எழுந்துள்ள பிரச்சினைகள் தொடர்பில் தனது பாகத்தை தெளிவுபடுத்தும் வகையில் செயலாளர் நாயகம் ஹஸன் அலி தமது நிந்தவூர் இல்லத்தில் கலந்துரையாடல் கூட்டம் ஒன்றை ஏற்பாடு செய்திருந்தார்.
கடந்த செவ்வாய்க்கிழமை இரவு நடைபெற்ற இக்கூட்டத்தில் உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். பெருந்தொகையானோர் கலந்து கொண்ட இக்கலந்துரையாடல் கூட்டத்தில் செயலாளர் நாயகம் ஹஸன் அலி தொடர்ந்து உரையாற்றுகையில்,
இன்று முஸ்லிம் காங்கிரஸுக்குள் எழுந்துள்ள நிலைமை உள்வீட்டுப் பிரச்சினையே. எனவே இதில் சம்பந்தப்பட்ட நான் எனது பாகத்தை மக்களுக்கும் கட்சிப் போராளிகள் மற்றும் ஆதரவாளர்களுக்கும் தெளிவுபடுத்த வேண்டிய கடப்பாட்டிற்கு உள்ளாகியுள்ளேன்.
முஸ்லிம் காங்கிரஸுடன் ஒன்றிப்பிணைந்த வளர்ச்சியில் பெரும் பங்காற்றிய என் சொந்த ஊரான நிந்தவூரில் இத்தகைய கூட்டத்தை முதலில் நடத்துவதுடன் தொடர்ந்தும் ஏனைய பிரதேசங்களிலும் எனது பாகத்தை எடுத்துக்கூறவுள்ளேன்.
கொள்கைக்காக என்னைப் பொறுத்தவரை கட்சிக்காக அன்றிருந்து இன்றுவரை அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வருகின்றேன்.ஆரம்ப காலகட்டங்களில் இக்கட்சிப் பாதையில் நாம் பட்ட கஷ்டங்கள் அச்சுறுத்தல்களுக்கெல்லாம் முகம் கொடுத்த சம்பவங்கள் எல்லாம் சகலரும் அறிந்ததே.
கொள்கைக்காக நான் எடுத்த தீர்மானங்களை ஜீரணிக்க முடியாதவர்கள் இன்று என்மீது வீண் அபாண்டங்களையும் ஆதார மற்ற கூற்றுக்களையும் சுமத்த முற்பட்டுள்ளனர்.
நம் தலைவர் அஷ்ரஃபின் மரணச்செய்தி கேட்டு வெடிகொளுத்தி மகிழ்ச்சி கொண்டாடியோர் கூட இன்று நம் கட்சிக்குள் புகுந்து போராளிகளாகி அடிமட்டத்திலிருந்தே கட்சிப் போராளியாக உருப்பெற்றுத் திகழும் என்னையே கட்சியிலிருந்து வெளியே போடவேண்டுமெனக் கூறுமளவிற்கு நிலைமையுள்ளது.
அத்தோடு வீண் அவதூறுகள், அபாண்டங்கள் என் மீது தொடுக்கப்பட்டு வருகின்றன. ஏன்? நான் டயஸ்போராவுடனும், தமிழ்த்தேசியக் கூட்டமைப்புடனும், சம்பந்தனுடன் சேர்ந்து கட்சியைப் பிளவுபடுத்த, அழிக்க முனைவதாகவும் முஸ்லிம் காங்கிரஸ் கூட்டமொன்றில் நமது பிரதேச மக்கள் பிரநிதிநிதியொருவர் கூறியதான தகவலும் எமக்குக் கிடைத்துள்ளது.
இப்படிக் கூட இன்று என்னை இலக்கு வைத்து விஷமத்தனமான பிரசாரங்கள், விமர்சனங்கள் முன்னெடுக்கப்படுகின்றன. கட்சிக்குள் ஏற்பட்டுள்ள கதிரைக்கான போட்டிகளே இதற்கெல்லாம் காரணமாகும்.
துளியேனும் என்னைப் பொறுத்தவரை கட்சியைப் பிளவுபடுத்துவதற்கு நான் துளியும் காரணமாக அமையமாட்டேன். அத்தகைய நிலைக்கு இடமளிக்கவும் மாட்டேன். அதேவேளை எனக்கு இழைக்கப்பட்டுள்ள அநீதிக்காகக் கட்சியை நீதிமன்றத்தில் நிறுத்துவதற்கும் ஒருபோதும் முனையமாட் டேன்.
தலைவர் ஹக்கீமுக்கு எதிராக நான் எந்த சதிநடவடிக்கைகளிலும் ஈடுபடவில்லை, கட்சியைப் பிளவுபடுத்தவும் நான் துளியும் முனையவில்லை. இதை சத்தியம் செய்து கூறுகின்றேன். நம் கட்சியைப் பொறுத்தவரை நான் வகிக்கும் செயலாளர் பதவி உட்பட எந்தப் பதவியையும் இதுவரை நான் கேட்டுப் பெறவில்லை, போட்டியிட்டுப் பெறவுமில்லை.
நமதுநிலை புதிய தேர்தல் முறை வந்தாலும் வடக்கு உட்பட தமிழ் மக்கள் உரிய தயார் நிலையிலேயே உள்ளனர்.
ஆனால், முஸ்லிம்களைப் பொறுத்த வரை அந்த நிலைமையில்லை. என்ன வேலைத் திட்டங்களை நாம் செய்துள்ளோம்? உள் ளூர் தலைவர்கள் கூட அறுவடைக்கு ஆள் பிடித்துக் கொடுக்கும் முகாமை போலுள் ளோம்.
எனது நூல்”என்னைக் கவர்ந்த அஷ்ரஃப் சிந்தனைகள்” எனும் தலைப்பில் நூல் ஒன்றை எழுதி வருகின்றேன். இந் நூல் வெளியீட்டுடன், அரசியல் வாழ்க்கை தொடர்பில் முடிவு செய்வேன் என அவர் கூறினார்.