அமைச்சுப் பதவிகளில் நாட்டமில்லாதவர்களை அரசியல் வாதிகளாக்க வேண்டும், என்று மு. கா தலைவர் அறை கூவல் விடுத்திருக்கிறார். பாவம், தானும் அப்படி ஒரு, பதவிகளில் நாட்டாமில்லாதவனில்லை என்று சொல்லாமல் சொல்லி இருக்கிறார். அவர் சொல்லா விட்டாலும் எல்லோருக்கும் தெரியும் பதவி மீது அவருக்குள்ள மோகம் பற்றி. பதவிகளில் அல்ல, சொத்துக்கள் சேர்ப்பதில் நாட்டமில்லாதவர்களை அரசியல் பதவிகளில் அமர்த்துவது பற்றி வரலாறு நெடுகிலும் பல அரசியல் தத்துவ மேதைகளும் அரசியல் சிந்தனையாளர்களும் பல கருத்துக்களைச் சொல்லி இருக்கிறார்கள்.
பதவிக்கு வருபவருக்கு மனைவி மக்கள் இருக்கக் கூடாது என்பதிலிருந்து, சிறு வயதிலிருந்து குடும்பத்திடமிருந்து பிரித்தெடுக்கப்பட்டு, தனியான பயிற்சிகள் மூலம் அரச பதவிக்கு தயார் படுத்துதல் வரை எண்ணற்ற கருத்துக்கள் முன்வைக்கப் பட்டுள்ளன. இந்த ஏற்பாடுகள் அனைத்தும் ஊழல் மற்றும் சர்வாதிகார போக்கு என்பன போன்றவற்றை கட்டுப் படுத்தி ஜனநாயகத்தை நிலை நிறுத்துவதற்காக கூறப்பட்டவையாகும். ஆனால் இவை எவையும் நடைமுறைக்கு ஒத்து வரவில்லை. திருடராய் பார்த்து திருந்தாவிட்டால் , கதை இதற்கும் பொருந்தும்.
மு. கா கட்சியில் இருப்பவர்களே, கட்சிக்குள் இருப்பவர்கள் முறை கேடாக சொத்து சேர்ப்பது பற்றியும், கட்சிக்குள் ஜனநாயக பண்புகள் மாய்ந்து, சர்வாதிகார போக்குகள் தலை தூக்கி இருப்பது பற்றியும் பிரஸ்தாபிக்கிறார்கள். மு.கா என்ற கட்சியின் தேவைப்படும் அதன் இருத்தலின் அவசியமும் உணரப்பட்டவொன்றேயாயினும், அது சரியான முறையில் வழி நடத்தப் படுகிறதா என்பதற்கான விடை, மு.கா வின் இருத்தலுக்கான தேவைப்பாட்டை மழுங்கடித்துள்ளது.
இதற்கான முழுப் பொறுப்பும் கட்சியின் தலைவரையே சாரும். தனது பதவியைக் காப்பாற்ற அவர் எடுக்கும் பிரயத்தனங்களும் முயற்சிகளும் , சில சில்லறைத்தனமான வேலைகளும், அவரை யோசிக்க வைத்திருக்கும். அதுவே மேற் கூறியவாறு அறைகூவல் விடுக்க காரணமாயிருந்திருக்கும். எவ்வாறாயினும், மக்களைப் பாதுகாக்க வளர்த்தெடுக்கப் பட்ட கட்சியிடமிருந்து, மக்களைக் காப்பாற்ற வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளதை மறுப்பதற்கில்லை.
அஷூர் சேகு இஸ்ஸதீன்