மேற்கு வங்காள மாநிலம் கொல்கத்தாவில் கட்டுமான பணி நடைபெற்று வந்த பாலம் நேற்று முன்தினம் திடீரென இடிந்து விழுந்தது. அந்த சமயத்தில் பாலத்துக்கு அடியில் சென்று கொண்டிருந்த பஸ், கார்கள், டாக்சிகள், ஆட்டோக்கள், மோட்டார் சைக்கிள்கள் இடிபாடுகளுக்குள் சிக்கிக்கொண்டன.
தகவல் கிடைத்ததும் போலீசார், தீயணைப்பு வீரர்கள், தேசிய பேரிடர் மீட்பு படையினர், ராணுவத்தினர் அந்த இடத்துக்கு விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர். பலர் உடல் சிதைந்து சம்பவ இடத்திலேயே இறந்தனர். ஏராளமானோர் படுகாயம் அடைந்தனர். அவர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
தொடர்ந்து கான்கிரீட் சிதைவுகளை அகற்றி மீட்பு பணி நடைபெற்று வரும் நிலையில், இன்று மேலும் இரண்டு ஆண்களின் உடல்கள் மீட்கப்பட்டன. இதனால், இந்த விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 26 ஆக உயர்ந்துள்ளது. மொத்தம் 89 பேர் காயமடைந்துள்ளனர்.
மேலும், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வரும் கொல்கத்தா போலீசார், இந்த பாலத்தை கட்டும் பணியை மேற்கொண்டு வந்த ஐதராபாத் நிறுவனத்தின் அதிகாரி ஒருவரை கைது செய்துள்ளனர். அவர் கொல்கத்தாவில் இருந்த தப்பிச் செல்ல முயன்றபோது அவரை கைது செய்ததாக காவல்துறை தெரிவித்துள்ளது. நேற்று இரவு ஏற்கனவே மூன்று அதிகாரிகள் கைது செய்யப்பட்டனர்.