கிழக்கு மாகாணத்தின் முன்னாள் முதலமைச்சரும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சித் தலைவரும் மாகாண சபை உறுப்பினருமான பிள்ளையான் எனப்படும் சிவநேசதுரை சந்திரகாந்தனுக்கு பிணை கோரிய மனு தொடர்பான வழக்கு எதிர்வரும் 28ஆம் திகதிக்கு மட்டக்களப்பு மேல் நீதிமன்றத்தால் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
கடந்த 25.5.2005 ஆம் ஆண்டு மட்டக்களப்பு புனித மரியாள் தேவாலயத்தில் ஆராதனையில் ஈடுபட்டிருந்த தமிழ் தேசிய கூட்டமைப்பு மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கத்தின் படுகொலை தொடர்பில் சந்தேகத்தின் பேரில் பிள்ளையான் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டு சிறைவாசம் அனுபவித்து வருகின்றார்.
கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள சந்தேக நபரான சிவநேசதுரை சந்திரகாந்தனுக்கு பிணை வழங்குமாறு கோரி மட்டக்களப்பு மேல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு இன்று (01) வெள்ளிக்கிழமை மட்டக்களப்பு மேல் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
இதன்போது குறித்த சந்தேக நபரின் பிணை மீதான வழக்கை எதிர்வரும் 28ஆம் திகதிக்கு மட்டக்களப்பு மேல் நீதிமன்ற நீதிபதி வி.சந்திரமணி ஒத்திவைத்தார்.
இது இவ்வாறிருக்க, சந்திரகாந்தன் உட்பட நான்கு பேரும் எதிர்வரும் 06 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.