நிதி மோசடி பொலிஸ் பிரிவு முழுமையான சுயாதீனத்துடன் செயற்படுகின்றது : பிரதமர் அலுவலகம்

நிதி மோசடி பொலிஸ்  பிரிவு மற்றும் சட்டத்தை செயற்படுத்தும் எந்த பிரிவிலும் அரசியல் தலையீடு இன்றி அவை முழுமையான சுயாதீனத்துடன் செயற்படுகின்றது என்று தெரிவித்துள்ள பிரதமர் அலுவலகம், சட்டத்தை செயற்படுத்தும் நிறுவனங்களில் அரசியல் தலையீடு இல்லை என்றும் தெரிவித்துள்ளது.

 இது தொடர்பில் பிரதமர் அலுவலகம் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, பாரிய நிதி மோசடிகள் நாட்டில் இடம்பெற்றிருந்த நிலையிலேயே,  நிதி மோசடி பொலிஸ் விசாரணை பிரிவு ஏற்படுத்தப்பட்டது. பொலிஸ் கட்டளை சட்டத்தின் 55ஆவது பிரிவின் பிரகாரம், அமைச்சரவையின் அனுமதியுடன், பொலிஸ் மா அதிபரின் முழுமையான கண்காணிப்பு மற்றும் ஆலோசனைக்கு அமையவே இப்பிரிவு உருவாக்கப்பட்டது.

 நிதி மோசடி பொலிஸ் விசாரணை பிரிவு குறித்து அரசியல் களத்தில் முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுக்கள் பொய்யானவை என அவ்வறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. பொலிஸ் திணைக்களத்தின் கீழ் இவ்வாறு 64 பிரிவுகள் இயங்கி வருவதாக பிரதமர் அலுவலகம் குறிப்பிட்டுள்ளது.

 பொலிஸ் திணைக்களத்துக்கு உள்ள அதிகாரங்களைத் தவிர மேலதிக அதிகாரங்கள் எதுவும் பொலிஸ் நிதி மோசடி பிரிவுக்கு வழங்கப்படவில்லை என்று அவ்வறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.