அணுசக்தி பாதுகாப்பு மாநாட்டில் பங்கேற்க அமெரிக்கா சென்றடைந்தார் மோடி

modi1

 

அணுசக்தி பாதுகாப்பு மாநாட்டில் பங்கேற்பதற்காக இந்திய பிரதமர் நரேந்திரே மோடி இன்று அமெரிக்காவின் வாஷிங்டன் நகரை சென்றடைந்தார்.

பிரதமர் நரேந்திர மோடி பெல்ஜியம், அமெரிக்கா, சவுதி அரேபியா ஆகிய 3 நாடுகளில் சுற்றுப்பயணம் செய்கிறார். முதல் கட்டமாக நேற்று பெல்ஜியத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட மோடி, பெல்ஜியம் பிரதமர் சார்லஸ் மிச்சேலை சந்தித்து பேச்சு வார்த்தை நடத்தினார். பின்னர் இந்திய-ஐரோப்பிய யூனியன் உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி கலந்து கொண்டு பேசினார். மேலும் சில நிகழ்ச்சிகளில் பங்கேற்ற மோடி, பெல்ஜியம் பயணத்தை முடித்துக்கொண்டு வாஷிங்டன் புறப்பட்டார்.

இன்று வாஷிங்டன் சென்றடைந்த அவரை அதிகாரிகள் வரவேற்று அழைத்துச் சென்றனர். இன்றும், நாளையும் நடைபெற உள்ள அணுசக்தி பாதுகாப்பு மாநாட்டில் மோடி கலந்துகொண்டு உரையாற்ற உள்ளார். அப்போது அணு ஆயுதங்களை பாதுகாப்பது தொடர்பான தனது பார்வையை அவர் முன்வைப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

50க்கும் மேற்பட்ட நாடுகளின் தலைவர்கள் கலந்து கொள்ளும் இந்த மாநாட்டில், அமெரிக்க அதிபர் ஒபாமா உள்ளிட்ட பல்வேறு தலைவர்களுடன் மோடி கலந்துரையாட உள்ளார். இன்று நியூசிலாந்து பிரதமர் ஜான் கே மற்றும் லேசர் இன்டர்ஃபெரோமீட்டர் ஈர்ப்பு அலை ஆய்வக விஞ்ஞானிகளை சந்தித்து பேசுகிறார்.

2014ம் ஆண்டு பிரதமராக பொறுப்பேற்ற பிறகு அமெரிக்காவுக்கு மூன்றாவது முறையும், வாஷிங்டனுக்கு இரண்டாவது முறையும் மோடி பயணம் மேற்கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.