ஆசிரியர்களுக்கான சம்பள நிலுவைகளுக்கு 365 மில்லியன் ஒதுக்கப்பட்டபோதிலும் விபரங்கள் சமர்ப்பிக்கப்படாமையால் வழங்க முடியாத நிலை

அஸ்லம் எஸ்.மௌலானா
 கிழக்கு மாகாணத்திலுள்ள பாடசாலைகளில் கடமையாற்றும் ஆசிரியர்களுக்கான சம்பள மாற்ற நிலுவைகளை வழங்குவதற்காக 365 மில்லியன் ரூபாவை திறைசேரி ஒதுக்கியுள்ள போதிலும் வலயக் கல்விப் பணிப்பாளர்கள், உரிய தகவல்களை எமக்கு அனுப்பி வைக்காமையினால் அந்நிலுவைகளை உடனடியாக வழங்க முடியாதிருப்பதாக மாகாணக் கல்விப் பணிப்பாளர் எம்.ரி.ஏ.நிஸாம் தெரிவித்தார்.
இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில்;
 nizam11_Fotor
“இலங்கை ஆசிரியர் சேவையின் புதிய சேவைப் பிரமாணக் குறிப்புக்கமைய உள்ளீர்ப்பு செய்யப்பட்டமை காரணமாக வழங்கப்பட்டுள்ள பதவி உயர்வுக்கமைவாக வழங்கப்பட வேண்டிய சம்பள நிலுவைகளுக்காகவே இவ்வளவு பெருந்தொகை நிதி ஒரே தடவையில் ஒட்டுமொத்தமாக ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கிறது. இதற்கு எமது மாகாண கல்வித் திணைக்களத்தின் பிரதம கணக்காளரின் முயற்சியே காரணமாகும்.
எவ்வாறாயினும் வலயக் கல்விப் பணிப்பாளர்கள், தமது வலயத்திலுள்ள ஆசிரியர்களின் சரியான நிலுவை விபரங்களை மாகாண கல்வித் திணைக்களத்திற்கு அனுப்பி வைக்காமையினால் அந்நிதியை வலயங்களுக்கு பகிர்ந்தளிப்பதற்கும் அதன் ஊடாக ஆசிரியர்களுக்கு வழங்குவதற்கும் நடவடிக்கை எடுக்க முடியாதுள்ளது.
வலய ரீதியாக ஒவ்வொரு ஆசிரியரின் பெயர், தேசிய அடையாள அட்டை இலக்கம், செலுத்தப்பட வேண்டிய சம்பள நிலுவை போன்ற விபரங்களை வலயக் கல்விப் பணிப்பாளர்கள் உடனடியாக அனுப்பி வைக்கும் பட்சத்தில், அவை எமக்கு கிடைத்து ஒரு மணி நேரத்தில் அந்தந்த வலயத்திற்கான நிதியை எம்மால் வழங்க முடியும். அதனைத் தொடர்ந்து குறித்த ஆசிரியர்கள் வலயக் கல்விப் பணிமனையில் தமது சம்பள நிலுவைகளை பெற்றுக் கொள்ள முடியும்” என்றார்.