234 தொகுதிக்கும் ரூ.2340 கோடி அ.தி.மு.க. ஒதுக்கி உள்ளது : வைகோ குற்றச்சாட்டு

vaiko

 

மக்கள் நலக் கூட்டணி தலைவர்கள் தமிழகம் முழுவதும் பிரசாரத்தை தொடங்கினார்கள். 4 கட்ட பிரசாரத்தை முடித்திருந்த நிலையில் தே.மு.தி.க.வுடன் மக்கள் நலக் கூட்டணி இணைந்தது.

மக்கள் நலக்கூட்டணியில் தே.மு.தி.க. இணைந்த பிறகு நடந்த முதல் கூட்டம் நாகர்கோவில் நாகராஜா திடலில் நேற்றிரவு நடந்தது. கூட்டத்தில், ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் பேசியதாவது:–

குமரி மாவட்டம் அரசியல் விழிப்புணர்வு கொண்ட மாவட்டம். கேரளாவை பின்பற்றும் மாநிலமாக தமிழ்நாடும் இருக்கும் என்று நான் கேரள தொலைக்காட்சி நிருபரிடம் சொன்னேன். அங்கு பணம் வேலை செய்யாது, அதை போல தமிழகத்தில் இந்த முறை தே.மு.தி.க., மக்கள் நலக்கூட்டணி ஆட்சி அமைக்கும் என்று சொன்னேன்.

தமிழகத்தில் 234 தொகுதிகளிலும் அ.தி.மு.க. வெற்றி பெற உழைக்க வேண்டுமென்று ஜெயலலிதா வேண்டுகோள் விடுத்துள்ளார். கடந்த 5 ஆண்டுகளாக நீங்கள் செய்த சாதனைகளை கூறி வாக்கு கேட்க முடியுமா? ஒரு தொகுதிக்கு ரூ.10 கோடி வீதம் 234 தொகுதிக்கும் ரூ.2,340 கோடி ஒதுக்கி இருப்பதாக நான் அறிந்தேன்.

நேற்றிரவு மிகப்பெரிய கண்டெய்னர் லாரி கிராமப்புறங்கள் வழியாக சிறுதாவூர் பங்களாவுக்கு சென்றிருக்கிறது. அந்த லாரியில் பல கோடி ரூபாய் பணம் இருந்துள்ளது. சிறுதாவூர் பங்களாவில் ரகசிய அறைகளில் பணத்தை பதுக்கி வைத்துள்ளனர். அந்த பங்களாவிற்கு ஆயிரக்கணக்கான போலீசார் மற்றும் அ.தி.மு.க.வினர் பாதுகாப்பிற்கு இருப்பதாக கூறுகிறார்கள். 

பணத்தை வைத்துக் கொண்டு வெற்றி பெற்று விடலாம் என்று நினைக்கிறார்கள். பணம் கொடுக்க வந்தால் அதை பறித்துச் செல்லுங்கள் என்று நம் கட்சியினரை கேட்டுக் கொள்கிறேன்.

இது தொடர்பாக தேர்தல் கமிஷனிடமும், தலைமை தேர்தல் அதிகாரியிடமும் புகார் தெரிவித்துள்ளேன்.

தமிழக டி.ஜி.பி. அசோக்குமார் ஜெயலலிதாவின் எடுபிடியாக இருக்கிறார். அவர்தான் வேட்பாளர் பட்டியலையே தயாரித்து கொடுத்துள்ளார். இந்த டி.ஜி.பி.யை மாற்ற வேண்டுமென்று தேர்தல் கமிஷனுக்கு கடிதம் கொடுத்திருக்கிறேன்.

இந்த கூட்டத்தில் நடுநிலையாளர்கள் நிறைய பேர் உள்ளனர். உங்களை நீதிபதியாக கரம் கூப்பி கேட்கிறேன். நரக பூமியாகி விட்டது இந்த தமிழ்நாடு. நல்ல தீர்ப்பை தாருங்கள். மதுவின் கொடுமையால் நாடு நாசமாகி விட்டது. மதுவை ஒழிக்க காந்தியவாதி சசி பெருமாள் இந்த மண்ணில் தான் உயிர் நீத்தார். என் தாயார் மாரியம்மாள் டாஸ்மாக் முன்பு போராட்டம் நடத்தினார். மதுவை ஒழிக்க நானும் போராடினேன்.

ஊழல் இல்லாத ஆட்சி நடக்க வேண்டும். முதல்வர் நாற்காலியில் விஜயகாந்த் அமர வேண்டும். எங்களுக்கு ஆதரவாக தற்போது ஒரு அலை வீசுகிறது.

ஊழலற்ற ஆட்சி அமைப்போம். மீனவர் துயர் துடைப்போம். எல்லோருக்கும் சுகாதாரம், ஏழைகளுக்கு வைத்தியம் ஏற்படுத்துவோம். தொழிலாளர் துயர் துடைப்போம். வேலையில்லாத திண்டாட்டத்தை ஒழிப்போம். சாதி கொடுமைகளை நீக்குவோம்.

இவ்வாறு அவர் பேசினார்.