தலைவர் ஹக்கீமின் மாநாட்டு பேச்சின் சுட்டெரித்த செய்திகள்

rauff

 

ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் கௌரவ ஹக்கீம் காங்கிரஸின் 19வது தேசிய மாநாட்டை நடாத்தி முடித்துவிட்டு பாலமுனையிலிருந்து தனது பரிவாரங்களுடன் கண்டிய சாம்ராஜ்ஜியத்துக்குப் போகும் வரை படு டென்ஷனாகவே காணப்பட்டதை எம்மால் காண முடிந்தது.

மாநாட்டு நிகழ்வுகளின் போது கட்சி செயலாளர் நாயகம்,தவிசாளிர்,மற்றும் சூறா சபையின் பிரதிநிதிகளை தனது வட்டிக் கடைத் தமிழ்ப் பேச்சில் சேதாரம் இல்லாமல் வறுத்தெடுத்தாராம்.

அவரது உரையின் அடுத்த நகர்வு குள்ள நரிகள்,குறு நில மன்னர்கள் என இங்குள்ள மாற்றுக் கட்சி மண்வாசனை அரசியல் வாதிகளை கடுகாய் கசக்கி அவரது மாநாட்டு உரையின் பிலால் சட்டிக்குள் போட்ட மாத்திரத்தில் நாற்றமடிக்கத் தொடங்கிவிட்டது.

பாருங்கள் இந்த அநியாயத்தை கிழக்கில் குந்துவதற்கு ஒரு அடி நிலம் கூட இல்லாத இந்த சக்கரவர்த்தி இம்மண்ணிலேயே பிறந்து மரணிக்கும் வரை காத்திருக்கும் தொப்புள் கொடி உரிமைக்காரர்களை குறு நில மன்னர்கள் என்று கர்ஜிக்கின்றார்.

மரியாதைக்குரிய தலைவர் கிழக்குக்கும் நமக்கும் தார்மீக ரீதியிலாவது நிலத் தொடர்பு இல்லையே என்பதை தனது மேதாவித் தனத்தின் மூலம் கூட அறியவில்லை போலும்.
கண்டியில் ஆனை முகத்தில் அங்குசத்துடனும் மட்டக்களப்பில் கோடாரிக் காம்போடு மரத்திலும் அம்பாரையில் நல்லாட்சி கோசத்திற்காகவும் எத்தனை முகங்களை இவர் வெளிக்காட்டுகின்றார்.

கண்டியில் பன்சலைகளுக்குப் போய் பௌத்த பிக்குகளை வணங்கி தனது வெற்றிக்கு உதவி தேடுகின்றார்.மட்டக்களப்பில் பள்ளிக்கு வந்து ஜமாஅத்தாரிடம் பேரினவாதத்திலிருந்து சமூகத்தை மீட்க வாக்களிக்கக் கேட்கின்றார்.இதெல்லாம் நமது தலைவரின் குள்ள நரி முகம் .கொத்தடிமைகளாக கிழக்கு மண்ணின் போராளிகளை வைத்திருப்பதற்கு எதிராக உள்ளுர் அரசியல்வாதி கூறினால் அவன் குள்ளநரி என்ன நியாயமப்பா?

தேசிய மாநாடு ஊடகவியலாளர்களையும் விட்டு வைக்கவில்லை. பழப்புளியாக பிழிந்தெடுக்கப்பட்ட ஊடகவியலாளர்கள்.
கூலிக்கு மாரடிக்கும் ஊடகவியலாளர்கள் பற்றியும், காசு வாங்கிக் கொண்டு வசை பாடும் ஊடகவியலாளர்கள் பற்றியும் பேசினார்.

தலைவர் அவர்களே! நாங்கள் அறிய அட்டாளைச்சேனையில் ஒருவருக்கு நீர்வழங்கல் வடிகாலமைப்புச் சபையில் தொழில் வழங்கியுள்ளீர்கள். நிந்தவூரைச் சேர்ந்த ஒருவரின் மச்சான் இரண்டு தினங்களுக்கு முன் வைத்தியசாலையில் வேலையொன்றைப் பெற்றுள்ளார்.கோணாவத்தையைச் சேர்ந்த ஒருவர் தங்களுக்கு நீண்டகாலம் எடுபிடியாக வேலை பார்த்ததற்குத் தொழில் ஒன்றைப் பெற்றுள்ளார்.

நீங்கள் இவர்களுக்குச் செய்ததையெல்லாம் மேடை போட்டுப் பேசி விட்டடீர்கள் இது அற்பனுக்குப் பவுசு வந்தால் அர்த்த ராத்திரியில் குடை பிடிப்பான் ; என்பதை சனங்கள் அறியும்.
இப்போது சொல்லுங்கள் கூலிக்கு மாரடிக்கும் ஊடகவியலாளர்களை உருவாக்குவது யார்?

மேலும் பாதிக்கப்பட்ட மற்றும் ஒரு மௌலவியின் கண்ணீர்க் கதையை இன்னுமொரு பதிவின் மூலம் அறிந்து கொள்வோம்.

 

கலாபூஷணம் மீரா எஸ்.இஸ்ஸடீன்.