‘மரணத்தின் வாசலில் தத்தளித்துக் கொண்டிருக்கும்’ கவிஞர் மஜித் ஈழத்துக் கவிதையில் மஜீத் குறித்த பார்வை..!

12239884_452970851540165_3915551424033870083_n

எம்.ஏ. தாஜகான் B.A. PGDE. M.A. MED

• மஜித் படைப்பின் மறுவாசிப்பு:

ஈழத்து இலக்கிய வரலாற்றில் கவிதையினை வாழ்வாகவும், வரமாகவும் பெற்று வாழ்ந்து வருகின்ற கவிஞர்கள் ஒரு சிலரைத்தான் அடையாளப்படுத்த முடியும். அந்தவகையில் தனது வாழ்க்கையில் தான் நேசிக்கின்ற அல்லது படைக்கின்ற மொழித்தளத்தில் இருந்து கொண்டு பல்வேறுபட்ட கவிதைப் புனைவுகளை காத்திரமாகப் படைத்த ஓர் எழுத்தாளன்தான் கவிஞன் மஜித். அவர் பற்றிய இலக்கியத்தில் ஒரு நேர்கோட்டுப் பார்வையில் நோக்குதல் சாலச்சிறந்தது.

 

ஈழத்துக் கவிதைப் பாரம்பரியத்தில் மிக முக்கிய கேந்திரமாக விளங்கியதுடன், பல்வேறுபட்ட படைப்பாளர்களை அடையாளப்படுத்தி கிராமிய மண்வாசணை போக்கின் விம்பமாக கிழக்கு மாகாணம் காணப்படுகி;ன்றமை குறிப்பிடத்தக்கது. கிழக்கு மகாணத்தின் தென்கோடியில் இயற்கை அழகும், எழிலும் ததும்பும் விதத்தில் இரம்மியமான சூழலில் அமையப் பெற்ற இடமாக பொத்துவில் காணப்படுகின்றது.

 

பொத்துவிலைப் பொறுத்தமட்டில் பல்வேறுபட்ட எழுத்தாளர்கள் கவிஞர்கள் காணப்பட்ட பொழுதும் அடையாளத்துவத்தில் மிகமுக்கியமான நபர்களாக கவிஞர் யுவனைக் குறிப்பிடலாம். யுவனது கவிதைகளின் பிரதியாக்கங்கள் பற்றிய வெளியீடுகள் வெயியுலகுக்கு அடையாளப் படுத்தப்படாமல் இருப்பதற்கு காரணம் யுவன் பற்றிய தொகுப்புக்கள் இன்மையாகும். ஆனால் ஈழத்து இலக்கியத் தளத்தில் யுவன் பற்றிய கதையாடல் மிகப் பெரிதான ஒரு போக்கை வெளிப்படுத்துகின்றது. அந்த வரிசையில் யுவனைப் போன்று படைப்புலகில் கால் பதித்து தன் வாழ்வினை முற்று முழுதாக இலக்கியமாக்கிய எழுத்தாளன் மஜித் என்றால் மிகையாகாது.

 

மஜிதைப் பொறுத்தமட்டில் மஜிதின் சொந்த இடம் பொத்துவில் எனும் எழில் கிராமம்தான். இருந்தும் இலக்கியத்தின் பின்னரான வாழ்வும், அவரது இலக்கிய படைப்புகளும், புனைவுகளும் வெளிப்பட்ட இடமாக அக்கரைப்பற்று காணப்படுகின்றது. ஈழத்து இலக்கியம் 90 களுக்குப் பின்னர் பல்வேறுபட்ட படைப்பாளர்களை உருவாக்கியது. அந்தவகையில் பொத்துவில் மஜிதும் கவிதைச் செயற்பாட்டில்; தன்னை முழுமைப்படுத்தியவராவார். குறிப்பாக இவரது கவிதைகள் ‘செப்பனிட்டு உற்பத்தி செய்த கவிதைகளல்ல மாறாக கவிதையை உயிர்க்கும் பிரதிகள் மஜிதினுடையவை’ என கா. சிவத்தம்பி குறிப்பிடுகின்றார்.

மஜிதின் கவிதைப் படைப்புகளில் பல்வேறுபட்ட கவிதைகள் பின் நவீனத்துவப் போக்கினை வெளிப்படுத்தி நிற்கின்றமை குறிப்பிடத்தக்கது. இவரால்; தனித்தனியாக ஏலவே வெளியிடப்பட்ட கவிதைத் தொகுப்புகளான,
• சொந்தமற்றுப் போன மண்ணைப்பற்றிய சித்திர மொழி
• புலி பாய்ந்த போது இரவுகள் கோடையில் அலைந்தன
• ஒரு இலையின் மரணம்
• சுள்ளிக்காடும் செம்பொடையனும்
• வாழ்வின் மீதான எளிய பாடல்கள்
இத்தொகுப்புகளை ஒட்டுமொத்தமாக முழுத் தொகுப்பாக எதிர் வெளியீட்டு மூலமாக மஜித் கவிதைகள் சென்னையில் அச்சுவாகனம் ஏறியமை குறிப்பிடத்தக்கது. மஜிதின் கவிதையினை பொறுத்தமட்டில் கவிதையின் வார்த்தைக் கோர்புகளும், நடையுத்தியும் தனக்கான பார்வையினையும் படைப்பாக்கத்தின் நிலவுகையினையும் வெளிப்படுத்துகின்றது. வெறுமனே இன்னுமொரு சொல்லால் தன் கவிதைக் குட்டிகளை ஈன்று தள்ளுகின்ற கவிஞர்கள் மத்தியில் கவிதையின் பெருத்த விம்பமும், கதையாடலும் இவரது ஆத்மாவுக்குள் சிக்குண்டு வெளிப்பட்டவையாக புலனாகின்றது.

 

• மஜிதும் கவிதைப்புலமும்:
1969.10.03 ம் திகதி பொத்துவில் கிராமத்தில் ஆதம்கண்டு அப்துல்மஜித் பிறந்தார். இவர் குடும்பநிலைச் சகோதரர்கள் இலக்கிய வாழ்வில் முழுமையாக அர்ப்பணித்தவர்கள்தான். இந்தப் போக்கில் மஜிதும் தனித்துவம் கொண்ட படைப்புக்களை அடையாளப்படுத்தியவர் என்பது குறிப்பிடத்தக்கது. தனது ஆரம்ப கல்வியினை பொத்துவில் ஆலமரத்துப் பள்ளிக்கூடத்தில் கற்றுக் கொண்ட இவர் இடைநிலைக்கல்வியினை கற்பதற்காக அக்கரைப்பற்று மத்திய கல்லூரிக்குச் சென்றார். அங்கு சென்றதன் பின்னர் மஜிதின் கவிதை மரம் பெருவெளியில் மெல்லனத் துளிர்த்தது. அதன் பின்னர் உயர்தரத்தில் விஞ்ஞானப்பிரிவில் கற்றுக் கொள்வதற்காக வேண்டிய சூழ்நிலை உருவானபொழுது யாழ்ப்பாணம் நோக்கிப் பயணமானார் அப்துல் மஜித். அங்கு ஆரியப்பொல சந்தியில் ஒரு வீட்டில் வசித்துக் கொண்டு தனது படிப்பையும், இலக்கிய பரிசோதனையினையும் செய்து வந்தார்.
யாழ்ப்பாணத்தில் பல்வேறுபட்ட இலக்கிய சந்திப்புக்கள், கருத்தாடல்களில் கலந்து கொண்டதன் நிமித்தம் மிக முக்கியமான ஆளுமையின் அறிமுகம் இவருக்கு கிடைக்கின்றது. அந்த வகையில்தான் 1989 காலப்பகுதிகளில் கொமினிசவாதியான ஈரோஸ் அமைப்பின் தலைவர் பாலகுமார் ஐயாவின் அறிமுகம் கிடைக்கின்றது. பாலகுமார் ஐயாவின் பேச்சு மூலமாக கவரப்பட்ட கவிஞன் மஜித் அதன் பின் பாலகுமார் ஐயாவின் அறிமுகம் மாத்திரமன்றி அவரை குருவாக ஏற்று தனது படைப்புலகில் புதிய விடயங்களை புனைவதிலும், தேடுவதிலும் ஆர்வம் கொண்டார். அப்பொழுது பாலகுமார் ஐயாவின் தொடர்பாடல் மூலமாக பின்நவீனத்துவ சிந்தனை மெல்ல மெல்ல வளரத்தொடங்கியது.

 

1990 காலப்பகுதியில் இலங்கையில் ஏற்பட்ட இன மோதலின் விளைவினால் பெறுமதியான யாழ்ப்பான நூலகம் தீயில் எரிக்கப்பட்டது. அச்சந்தர்ப்பத்தில் பின்நவீனத்துவப் பகுதியும் எரியுண்டது. இச்சந்தர்ப்பத்தில் பின்நவீனத்துவ நூல்களை தேடிக்கற்பதில் மஜிதுக்கு அதிகமான ஆர்வம் பிறந்தது. அக்காலகட்டத்தில் அப்பொழுது பாலகுமார்ஐயாவிடம் பின்நவீனத்துவத்தில் தனக்கு ஈடுபாடு உள்ளது. அதற்கு நீங்கள்தான் உதவி செய்ய வேண்டும் எனக் கேட்டுக் கொண்டதற்கினங்க பின்நவீனத்துவம் சார் சில புத்தகங்களை மஜிதிடம் பாலகுமார்ஐயா கொடுத்தார் அதிலிருந்து பின்நவீனத்துவப் போக்கில் மஜிதின் எழுத்து விம்பங்கள் நகரத்தொடங்கியது. இருவரும் அடிக்கடி நந்திக் கடலடித் துறைமுகத்தில் சந்தித்துக் கொள்வார்கள் கடலை கொறித்துக் கொண்டு பின்நவீனத்துவம் சார் இலக்கியம் பற்றி பேசுவார்கள்.

 

பின்நவீனத்துவப் போக்கில் ஆசிரியர் செத்துவிட்டார் எனும் மொழிப்பிறப்பில் இருந்து மஜிதின் படைப்புகள் வளரத்தொடங்கின. பின்நவீனத்துவ கூறில் மிகவும் முக்கியமான ஒரு கூறாக காணப்படும் பன்முகப்படுத்தப்பட்ட தன்மை எனும் அடிப்படையில் தனது படைப்பை மாத்திரம் சரியென்று வாதிடாமல் எல்லாப்படைப்புகளையும் பிழை கூறாமல் ஏற்றுக் கொண்டார். அதாவது எந்தப்படைப்பாக இருந்தாலும் குறிப்பாக மரபு, புதுமை, வசனம் என்ற வட்டங்களைத் தாண்டி பொதுமையடிப்படையில் எல்லோருடைய படைப்புக்களையும் நேசிக்கத் தொடங்கினார். அவ்வாறே விளிம்புநிலை மக்களை தான் மறந்துவிட வில்லை. அதற்காக வேண்டி சிறுபான்மைக் கதையாடல் (ஆiழெசவைல னுளைஉழரசளந) என்கின்ற சொல்லை முன்னிறுத்தி செயலாற்றத் தொடங்கினார். இதுபற்றி மஜித் தனது நூலில் குறிப்பிடுகின்ற பொழுது: ‘இனம், தேசம் போன்ற கதையாடலுக்குள் விளிக்கப்பட்டவர்களை அரசியல் முக்கியத்துவமுடைய சிறு கதையாடல் சமூகமாக முன்னிலைப்படுத்துவதற்கான வாய்ப்பை கொண்டிருக்கின்றது. அதுமாத்திரமல்ல சொற்களின் கதையாடலால் பேசிவிட முடியாத பல அம்சங்களை துணிச்சலுடன் கதையாட முடிகிற நிலைப்பாட்டை தன்னிடம் கொண்டிருப்பதையும் அவதானிக்கின்றேன்’ என்று குறிப்பிட்டு தனது கவிதையின் அடையாளத்துவத்தினை வெளிப்படுத்தி நிற்கின்றார்.

 

1990 களில் ஈழ விடுதலைப் போராட்டத்தின் மூன்றாம் கட்டம் உக்கிரமடைந்த பொழுதில் பாலகுமார் ஐயாவின் உதவியுடன் மீண்டும் தனது சொந்த இடத்துக்கு திரும்புகின்றார் மஜித். அதன் பின்னர் பின்நவீனத்துவ போக்கில் நின்று கொண்டு பல்வேறு படைப்புகளை வாசிப்பதுடன் பதிய படைப்புகளையும் அதிகம் எழுதிக் குவித்தார். அதன் பின்னர் கதையாண்டி எனும் இவருடைய படைப்பு நூலானது இலக்கிய உலகில் கிடைத்த மிகப் பொக்கிசமானது என்றால் மிகையாகாது. ஆனால் இலக்கிய உலகம் அதற்கான சரியான விமர்சனத்தை செய்யாமலிருப்பது ஒரு குறை என்றுதான் சொல்ல வேண்டும்.

மஜித் ஒரு சாதாரண கவிஞனாக நாம் அடையாளப்படுத்த முடியாது. சாதாரணமாக விழுகின்ற ஒரு இலையைக் கூட விட்டு வைக்காமல் ஒரு இலையின் மரணம் எனும் கவிதையை தந்து வாழ்வின் நுட்பமான விடயங்களை பேசுகின்றார். ‘கிளையில் ஒட்டியிருக்கும் போது உற்றுக் கவனிக்காத இலைதான் இன்று என் முழுக்கவனத்தையும் தின்கிறது’ இவ்வடி சாதாரணமான வார்த்தையல்ல தத்துவவாதிகள், சிந்தனையாளர்களின் மூளையில் இருந்து உதித்து வருகின்ற சூரியன்தான்.

தற்பொழுது மஜிதின் உடல் நிலை பற்றிய வெளிப்பாடு:

இனத்துவத்துக்கு அப்பால் மஜிதின் படைப்புகள் பொதுமையானவை. தமிழ் ஈழப்போராட்டம், முஸ்லிம் தேசம், சிங்கள தேசம் எனும் அடையாளத்துக்கு அப்பால் ஒரு பொதுமைத்தளத்தில் மஜிதின் எழுத்துக்கள் பிரகாசித்தன. அந்த பொதுமைவாதியாக தன்னை அடையாளப்படுத்திய மானிட நேயக்கவிஞன் மஜித் தற்பொழுது உடல் நிலையில் பல்வேறு பின்னடைவுகளுக்கு உட்;பட்டு நோய்வாய்ப்பட்டிருப்பது இலக்கிய இரசிகர்களால் ஜீரணிக்க முடியாமல் உள்ளது. மஜிதின் உடல் நிலையைப் பொறுத்த மட்டில் கணத்த சிந்தனைக்கு உட்பட்டு ஏலவே பல இலட்சம் ரூபாய்களை செலவு செய்து பேஸ் மேக்கர் செய்து கொண்டார். பேஸ் மேக்கர் செய்து கொள்வதற்கு கிட்டத்தட்ட 12 இலட்சம் செலவானது. அந்தப்பணத்தை புலம் பெயர் தமிழர்கள் மற்றும் அவருடைய நண்பன் றியாஸ்குரானாவின் முயற்சியின் அறுவடையினால் செலவுக்கான பணத்தொகை சேர்க்கப்பட்டது.

 

2014.12.05.பேஸ்மேக்கர் செய்யப்பட்டு மூன்று மாதம் சென்ற பின்னர் மீண்டும் தலைமயக்கம் ஏற்படத் தொடங்கியது. அதன் பின்னர். வைத்தியரை அணுகிய போதில் மஜிதின் தலையில் ஒரு துவாரம் இருப்பதாக உணரப்பட்டது. அதற்காக வேண்டி சத்திர சிகிச்சை அவசரமாக செய்யப்படல் வேண்டும் என வைத்தியர்கள் கூறுகின்றார்கள். ஆனால் அதற்கான செலவு சுமார் 10 இலட்சம் தேவையாகவுள்ளது. மஜிதின் சொந்த கிராமமான பொத்துவில் உள்ளங்கள் பல உதவிகளை செய்து கொண்டிருக்கின்றார்கள்.

 

பாடலாசிரியரும், கவிஞருமான அஸ்மின் மஜிதின் நிலை குறித்து வைத்திய செலவினை பெற்றுத் தருவதற்கான முயற்சிகளை செய்து கொண்டிருக்கின்றார். மஜிதின் குடும்ப நிலை மிகவும் வறுமைப்பட்ட நிலையில் காணப்படுகின்றது. பல முறை வைத்திய செலவின் காரணமாக இருந்த முதல்கள், சொத்துக்கள் இழக்கப்பட்ட நிலையில் ஒரு இலையின் மரணம் குறித்துப் பாடிய மஜித் அவர் மரணம் குறித்து புலம்பி நிற்கின்றார். நிட்சயமாக மனித நேயம் மட்டுமல்ல ஒரு கவிஞன் வாழ வேண்டும் அதற்கான உதவிகளை செய்வது எமது கடப்பாடாக இருக்கின்றது. உதவி செய்ய விரும்பும் உள்ளங்கள் மஜிதின் தொலை பேசி இலக்கங்களான 0773253228,0775009463 ஆகிய இலக்கங்களோடு தொடர்பு கொண்டு உதவிகளை செய்வதற்கு முன்வாருங்கள். எதிர்வரும் 28 ம் திகதி இந்தியாவிற்கு செல்ல வேண்டியிருப்பதால் கட்டாயமாக மஜித் உடல் நிலை சுகமடைய பிரார்த்திப்போம். அவருக்கான உதவியினை செய்வோம்.

குறிப்பு: என்னால் எழுதப்பட்ட இச்சிறு கட்டுரை பாடலாசிரியர், கவிஞர் பொத்துவில் அஸ்மின் அவர்களின் வினயமான வேண்டுகோளுக்கு ஏற்ப கவிஞர் மஜித் அவர்களுடனான நேர்காணலின் பின்னர் பதிவானதை தொகுத்து எழுதியுள்ளேன்.
எம்.ஏ. தாஜகான் B.A. PGDE. M.A. MED